Shivanandalahari – Verse 96
96 – மனயானை தனையாளும் மாதங்கன் அடி போற்றி!
रभसादाकृष्य भक्तिशृङ्खलया |
पुरहर चरणालाने
हृदयमदेभं बधान चिद्यन्त्रैः ||९६ ||
ரப₄ஸாதா₃க்ருஷ்ய ப₄க்திஶ்ருங்க₂லயா |
புரஹர சரணாலானே
ஹ்ருத₃யமதே₃ப₄ம் ப₃தா₄ன சித்₃யந்த்ரை: || 96 ||
தடமாறிடத் தந்நிலையாடிட
திடமானது அங்குசமாயிடத் – தெளிவாக
தவமானது பொன்னணியாகிடப்
பலமாயது பின்னிடஆடிய
மனமானது தந்நிலைஏகிட – வலுவாக
சிவமானது சின்மயமாந்துறை
இபபாகனுன் இன்னருளாகிய
நலமானது நந்நிலைமேவிட – வரவேண்டி
புரமானது முந்நிலையாற்றிய
பரமானது நந்நெறிகாட்டிட
வரமானது தந்தருள்கூட்டென – வதிந்தேனே
(96)
என்னுடைய மனமாகிய மதம் பிடித்த இபம் (யானை) என இருக்கிறது. அதனை உறுதியாகிய அங்குசத்தால் குத்தி, பக்தியாகிய சங்கிலியில் பிணைத்து, வெகுவாக (ஆசைகளால் ஈர்க்கப்படாமல்) இழுத்து, நினது திருவடியாகிய கட்டுந்துறையில், நல்லறிவாகிய கயிற்றினால் கட்டிக் காத்தருள்க, ஓ, முப்புரங்களையும் அழித்தருளிய பரசிவனே!
குறிப்பு:
இப்பாடலில் மனம், ஒரு மதம் பிடித்த யானையாகக் காட்டப்பட்டது.
காமம், குரோதம், லோபம் முதலான குணங்களால், மனமானது மதம் பிடித்த யானையாக அலைக்கழிக்கப்பட்டது.
மனதை நிலைப்படுத்த, உறுதியான அறிவும், நற்குணங்களின் தாக்கமும் தேவை. இதுவே அங்குசம். இறைவனின் திருவடிகளில் இருத்த, மன யானையைப் பக்தியாகிய சங்கிலியால் கட்டவேண்டும். அச்சங்கிலி, மன யானையை ஈர்க்கும் ஆசை விசைகளை எல்லாம் தடுக்கும் அளவுக்கு வெகுவாக இருக்க வேண்டும். நல்லறிவாகிய கயிற்றினால் அவ்வாறு மனதைக் கட்டும் போது, ஆசைகளின் ஈர்ப்புக்களும், எதிர்ப்புக்களும் மறைந்து, திருவடியாகிய துறையிலேயே, மனமாகிய யானை நிலை பெறும்.
இவையெல்லாம் நாம் செய்து அடைய வேண்டிய முயற்சிகள் என்றாலும், அதற்கு இறையருள் தேவை என்பதையே இப்பாடல் காட்டுகின்றது. (96)