Shivanandalahari – Verse 100
100 – தெய்வத்துள் தெய்வத் திருவே அடி போற்றி!
स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः |
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शंभो भवत्सेवकाः ||१०० ||
ம்ருஷா தே₃வா விரிஞ்சாத₃ய:
ஸ்துத்யானம் க₃ணனாப்ரஸங்க₃ஸமயே
த்வாமக்₃ரக₃ண்யம் விது₃: |
மாஹாத்ம்யாக்₃ரவிசாரணப்ரகரணே
தா₄னாதுஷஸ்தோமவ-
த்₃தூ₄தாஸ்த்வாம் விது₃ருத்தமோத்தமப₂லம்
ஶம்போ₄ ப₄வத்ஸேவகா: || 100 ||
இனித்து இனியாது – இயல்வேனே
வதித்து அயனாதி வளத்து அமரானர்
மதித்துப் பெரிதாக – உனைநாட
முனித்து உயரான தனித்து விதங்காண
விளித்து அடியார்கள் – பதராக
விலக்கி அதிதேவ ரொதுக்கி உனையேகி
விளைத்த வளம்நாட – விரிவோனே
(100)
சம்போ, துதித்து அளவிட முடியாதது உமது பெருமை. இல்லாத எதனை யான் நினது புகழாகச் சொல்லுவேன்! அயனும், அமரர்களும், உயர் பொருள் எது என ஆய்ந்து, உம்மையே முதன்மையாகப் பணிந்தனர். அடியார்களும் நற்பயன் அளிப்பவர் யார் என ஆராயும்போது, மற்ற தேவர்களை எல்லாம் பதராகத் தள்ளி, உம்மையே விளைந்த பயிர்ப் பயனில் உயர்ப் பயனாக ஏற்கிறார்கள்.
குறிப்பு:
99-ம் பாடலிலே ‘அளப்போம்’ என ஆராய முயன்ற தெய்வங்களுக்கும் அகப்படாத இறைவன், அன்பால் பணிந்த அடியாரின் மனதிலே எளிதாக அருள்கின்ற கருணையாகக் காட்டப்பட்டது. தன்னுள்ளே விளங்கும் ஆன்மனை உணர்வதே மன்னுயிர்க்கான இலக்கு என்பதை இந்த இறுதிப்பாடல் முடிவாய்த் தருகிறது.
பரம்பொருள் ஒன்றே என்பதும், அதன் வெளிப்பாடே எல்லா உலகங்களும், உயிர்களும், பொருட்களும் என்பதும், அப்பேரறிவை அடைவது ஒன்றே மனிதராய்ப் பிறந்தோரின் கடமை என்பதும், மனிதருக்கு மட்டுமே கிடைத்த அரிய வாய்பு அது என்பதும், நமக்கு மறைகள் காட்டித் தரும் முடிவு. அதை விடுத்து, புற இன்பத்தினை மட்டுமே நாடி வாழ்கின்ற நாம், அத்தகைய புற இன்பங்களுக்காகவே, பலவித உருவங்களிலும், வழிகளிலும் தெய்வங்களை வணங்கி வருகிறோம். அறம் வழுவாத ஆசைகளுக்காக அப்படித் தெய்வங்களைத் துதித்து வருவது நல்லதே எனினும், சம்சாரம் எனும் ஆசைப் பிணை விட்டு, உண்மையான விடுதலையும், பூரணத்துவம் எனும் முழுமையும் நாம் அடைய வேண்டும் என்றால், ஒன்றேயான பரம்பொருளை ஆன்மாவெனத் தன்னுள்ளேயே உணர்ந்து, அதன் பயனால் விளையும் பரசிவ சுகப் பெருவெள்ளத்தில் நனைந்து இருப்பது ஒன்றையே நாம் முடிவாகக் கொள்ள வேண்டும்.
‘ஓம் நமோ அஹம் பதார்த்தாய ஶிவாய’ எனும் வேத வாக்கு, ‘அஹம்’ எனும் சொல்லால் காட்டப்பட்ட ஆன்மாவே பரசிவப் பெருவெளி எனச் சுட்டிக் காட்டுகிறது.
இவ்வுண்மையினை உணர்ந்து, அடையப்படுவன எல்லாம் முடிவில் அழிந்து போகும் என்பதால், நம்முள்ளேயே எப்போதுமே அடைந்ததாய் இருக்கும் ஆன்மாவே சத்தியம் எனத் தெளிந்து, கடவுளைத் தன்னுள் உணர்ந்து, அப்படியே நிலைப்பதே முக்தி என்பது இப்பாடலினால் காட்டப்படுகிறது. (100)
சிவானந்த வெள்ளச் சீலம் அடி போற்றி!
இவ்வாறு
ஸ்ரீமத் சங்கராசார்ய பகவத் பாதாள் அருளிய
ஶிவானந்த₃லஹரீ நிறைவினை அடைகிறது.