Sri Akilandeswari Panchakam
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி பஞ்சகம்
கைதூக்கி விடு அம்மணீ!
(1)
தாயுனது மலரடித் தாளெனது நற்புகல்!
தயவிலருள் அபய மிடுவாய்!
தனித்துவமுந் தருமடிப் பனித்திதமு மப்புனல்
தனில்நனையுஞ் சுகமு மிடுவாய்!
சேயெனது கிலியறச் சேதனமுந் தெளிவுறச்
செய்யுமொளிர்ச் செல்ல நிலவே!
செரிவருளும் வடிவினிற் பரிவிலருள் புரிகிறாய்!
ஸ்ரீநிதி! காந்தி மதியே!
தூயமன மருளதிற் தோயவர வேண்டியே
துதிக்குமெனைக் காண வருவாய்!
தூயவளே மாயமுந் துய்த்தபர மேஸ்வரி!
துணையருளுந் தெய்வ வடிவே!
காயுமெனத் தீயிடர் யாவுமினி ஓயவே
கவிழுமழைக் கருணை முகிலே!
காவிரியுந் திருவானைக் காவகிலாண் டேஸ்வரி!
கைதூக்கி விடு அம்மணீ!
(2)
செவிமலருந் தாடங்கஞ் செய்தகுரு சங்கரர்
சிவனவர்க் கெதுவும் எளிதே!
சிந்தையுகச் செந்தமிழிற் சிந்துகவி மேகமும்
செய்தவமும் எனக்கு அரிதே!
கவிபுகலு மறிவுமிலேன்! கருமநெறி புரிகிலேன்!
கலியிடரில் உழலும் இந்தக்
கல்லாத சல்லியனாம் பொல்லாதன் உன்னருட்
கருணைக்கு என்ன செய்வேன்!
குவியுமிருள் அகலவருங் கோடிகதிர்ச் சூரணி!
குலவுமருட் சோதி எனவே
குற்றமறுத் தென்னையறி வுற்றனென ஆக்கிடக்
கூட்டியுடன் ஏற்பாய் அம்மா!
புவியினருட் பேரரசி! பூரணசம் ரட்சணி!
பூசைக்கு வந்த நிலவே!
காவிரியுந் திருவானைக் காவகிலாண் டேஸ்வரி!
கைதூக்கி விடு அம்மணீ!
(3)
வேதமறி யாதனாய் வேள்விபுரி யாதனாய்
விரதநெறி ஏதும் இலனாய்
வெகுமழையில் ஒதுங்கவும் கோவிலடை யானென
வெட்டியாய் விரய மெனவாய்
போதமறி யாமலரும் போதுகழிக் கின்றயிப்
பொழுதினிற் சிறைப் பிடித்தாய்!
பொன்னான நினதடியிற் பூட்டிட்டு என்னுளே
பூரணத்து வத்தை வைத்தாய்!
நோதலறி யேனுனையே ஓதிவுயர் வேனரிய
நுட்பமுணர் வித்த அழகே!
நுண்ணியமே மாமறையுள் நாதனமே
ஞானியர் நோற்கின்ற பரஞ் சோதியே!
காதலறி வாயிவனின் கனவுமறி வாயுனது
காலடியி லேயென் சிரம்!
காவிரியுந் திருவானைக் காவகிலாண் டேஸ்வரி!
கைதூக்கி விடு அம்மணீ!
(4)
முவ்வட்ட வெளியெட்டு ஈரெட்டு இதழிட்டு
முக்கோணம் பதிநான் குடன்
முதல்வட்டம் உள்ளிட்ட தோரீரு சக்கரம்
முனைபத்து பத்து மதனுட்
செவ்வட்ட முக்கோணம் உள்ளெட்டு மத்தியில்
ஶ்ரீசக்ர பிந்து எனவாய்
சிவயோகம் நான்குயர ஶ்ரீபோகம் ஐந்துறைய
சின்மய மான நகரீ!
அவ்வெட்டு எட்டுகலை ஆனபர மேஸ்வரீ!
அகிலாண்ட கோடி ப்ரஹ்ம
ஆனந்த மோஹினீ! ஆத்மஸம் பூரணீ!
அதிட்டான மான குருவே!
கவ்வெட்டு சித்தியும் கைவல்ய முத்தியும்
கனிந்தருள வருவாய் அம்மா!
காவிரியுந் திருவானைக் காவகிலாண் டேஸ்வரி!
கைதூக்கி விடு அம்மணீ!
(5)
அஞ்சுகமே! ஆனைக்கா அருளமுதே! அழகே!
ஆதிபரா சக்தி! உந்தன்
அடிமலரை நனைக்கின்ற ஆனந்த மானமழை
ஆனதமி ழான எந்தன்
பஞ்சகமே நினதடியிற் தஞ்சமுற வேவினைகள்
பஞ்சுகனற் பட்ட தெனவே
பரிதிபல கோடியெனப் பரிவிலருட் சோதியுனைப்
பணியுமெனக் கென்ன பயமே!
பிஞ்சுகவும் தாயூட்டும் பேறியல்பு ஆதலினால்
பெற்றவுனக் குற்றததைச் செய்!
பிடிவாத மேனுனக்கு? முடியா தெனவேது!
பிழைதீர்த் தென்குறை தீர்த்திடு!
கஞ்சகத்துள் மஞ்சமிடு! கெஞ்சுகிற நெஞ்சிலுகு!
கருணைமிகுந் தருள் கண்மணீ!
காவிரியுந் திருவானைக் காவகிலாண் டேஸ்வரி!
கைதூக்கி விடு அம்மணீ!
நிறைவு
மீ. ரா
[elfsight_pdf_embed id=”4″]