03 Karma Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ த்ருதீயோ(அ)த்₄யாய: . கர்மயோக₃:
பாகம் 3 – கர்ம யோகம் (செயல் நெறி
1 பகவான் உரைத்த அறிவுநெறியை ஆழ்ந்து கேட்ட அர்ச்சுனன், புத்தியே பெரிது என்ற உண்மையை மனதில் வைத்து மீண்டும் கேட்பான்.
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு₃த்₃தி₄ர்ஜனார்த₃ன .
தத்கிம் கர்மணி கோ₄ரே மாம் நியோஜயஸி கேஶவ (3-1)
ததே₃கம் வத₃ நிஶ்சித்ய யேன ஶ்ரேயோ(அ)ஹமாப்னுயாம் (3-2)
விசயன் வினா
2 (1-2) புத்தியே பெரிது என்றால், என்னுடைய புத்திதானே இப்போது போர் செய்ய வேண்டாம் எனக்கூறுவது? எனவே நான் அதன்படிதானே நடக்க வேண்டும்? செயல் முக்கியமா அல்லது புத்தி முக்கியமா?
புத்தியில் தோன்றும் எந்தன் போரறு எண்ணம் விட்டு
உத்தியில் உயிரைக் கொல்லும் உபதேசஞ் செய்யும் உந்தன்
வித்தையை அறிய மாட்டேன் விளக்கிடு விமலா என்றான்
ஶ்ரீப₄க₃வானுவாச .
லோகே(அ)ஸ்மின் த்₃விவிதா₄ நிஷ்டா₂ புரா ப்ரோக்தா மயானக₄ .
ஜ்ஞானயோகே₃ன ஸாங்க்₂யானாம் கர்மயோகே₃ன யோகி₃னாம் (3-3)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
3 (3) (சாங்கியரின்) தர்க்கவழி மற்றும் (யோகியரின்) கருமவழி ஆகிய இரண்டு வழிகளைச் சொன்னேன்.
சுவேத ஞானங் காணச் சூழ்வினை வலியும் உண்டு
பூவேத வாக்கி யத்தின் புண்ணிய நெறியைக் கூறி
சாவேது மில்லை யென்னும் சத்தியம் சொல்லும் மாயன்
4 (4) செய்ய வேண்டிய செயலைச் செய்யாததால் ஒருவன் செயலற்ற துறவி என்ற பேற்றை அடைய முடியாது.
செயலினை மறந்த போதும் செயலினைத் துறந்த போதும்
செயலறு செய்த தாகச் சேர்ந்திடார் உண்மை ஞானச்
செயலறு செயலைச் செய்யச் சிந்தையில் தெளிவு வேண்டும்
ந ச ஸம்ன்யஸனாதே₃வ ஸித்₃தி₄ம் ஸமதி₄க₃ச்ச₂தி (3-4)
5 (5) இயற்கையின் விதியால் செயல் ஏதுமில்லாமல் யாராலும் இருக்க முடியாது.
வண்ணமும் செயலே கூறும் வாக்கிலும் வடிவத் தாலும்
சின்னமும் செயலே செய்கை சீவனே அதனா லென்றும்
திண்ணமும் செய்வ தாகும் திறனைநீ அறிந்து கொள்க
கார்யதே ஹ்யவஶ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு₃ணை: (3-5)
இந்த்₃ரியார்தா₂ன்விமூடா₄த்மா மித்₂யாசார: ஸ உச்யதே (3-6)
கர்மேந்த்₃ரியை: கர்மயோக₃மஸக்த: ஸ விஶிஷ்யதே (3-7)
6 (6-7) கர்மேந்திரியங்களை அடக்கிப் புறநடவடிக்கையில் ஈடுபடாமல், ஆனால் அதே சமயத்தில் மனதில் பல ஈடுபாடுகளைக் கொண்டவன் (அதாவது உடலை அடக்கினாலும், மனதை அலைய விடுபவன்) கரும யோகி ஆகமுடியாது.
குலந்தரு வினை நடத்திக் குவலயம் வாழும் போதும்
நலந்தரு மென்றும் பிறிதே நலிவுறு மென்றும் ஐயம்
உளந்தடு மாறு வோர்கள் உண்மையில் ஞானி அல்லர்
ஶரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்₃த்₄யேத₃கர்மண: (3-8)
7 (8) எனவே ஆசையோ, தாபமோ இல்லாமல், புகழ், பெருமை முதலியன குறித்துச் செயலைச் செய்ய எண்ணாமல், தூய எண்ணத்தடன் தனக்கான செயலைச் செய்வதே அறிவுடைமை.
ஆசை யில்லாமல் மதி ஓய்ச்சலில் லாமல் பிறர்
பூசை யில்லாமல் திசை புலன்கள் ஏவாமல் வெளி
வேஷ மில்லாமல் வினை வெல்பவன் மெய் ஞானி
தத₃ர்த₂ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க₃: ஸமாசர (3-9)
8 (9) அதை விடுத்து, பெருமைக்காய், ஆடம்பரமாக ஹோமம், யாகம், பூசனை என்று நடத்துவதுதான் வேள்வி என்பது எண்ணுவது தவறு.
பாநூல் இசைத்து நெய்யிற் பட்டுடைச் செல்வம் கொட்டி
வானூள் வைத்த வாழ்வு வாய்த்திட வளர்த்த செந்தீ
தேனூல் தெளிந்த வேள்வித் திருமுறை அல்ல அல்ல
அனேன ப்ரஸவிஷ்யத்₄வமேஷ வோ(அ)ஸ்த்விஷ்டகாமது₄க் (3-10)
9 (10) உலகைப் படைத்த பிராஜபதி, உயிர்களுக்குக் கடமையாகிய வேள்வியே வெற்றிக்கு வழிகாட்டி எனச்சொல்லி, தனது செயலாலும் அவ்வாறே (இயற்கையின் மூலம்) நடத்திக் காட்டினார். எனவே அவரவர் தாம் செய்யும் தொழிலே தெய்வம் என்றுணர்ந்து, செய்வன திருந்தச் செய்வதே உண்மையான யாகம் ஆகும்.
துயரினைத் தூர்க்கும் நெஞ்சம் துலங்கிடக் காக்கும் பண்புப்
பயிரினை வளர்த்து வைத்தான் பாரிலே தியாகம் செய்து
உயரிணை யற்றோர் மட்டும் உண்மையில் யாகம் செய்தார்
பரஸ்பரம் பா₄வயந்த: ஶ்ரேய: பரமவாப்ஸ்யத₂ (3-11)
10 (11) இறைவன் தானுட்பட எல்லோரும் தத்தம் கடமையைச் செய்வதன் மூலம் ஒருவருக்கொருவர் பயன்படுமாறு விதித்தார்.
யாரவர் உருவாய்ப் பலவாய் யாபித்துப் பரவித் தத்தம்
காரண கர்த்தா வாகிக் காரியம் ஆற்றச் செய்யும்
நேரதி காரம் ஒன்றே நிலவிடும் இயற்கை அன்னை
தைர்த₃த்தானப்ரதா₃யைப்₄யோ யோ பு₄ங்க்தே ஸ்தேன ஏவ ஸ: (3-12)
11 (12) (உலகிலும், பொருளிலும், உயிர்களிலும் கலந்து செயலாற்றும் நுண்ணிய உணர்வுகளையே தேவர்கள் எனப் புராணங்களும், வேதங்களும் உருவகிக்கின்றன. அத்தகைய ) தேவர்கள் எனப்படும் நுண்ணிய உணர்வுகளும், பயன்களும், நாம் செய்கின்ற கடமையாகிய வேள்வியினை அனுசரித்தே நமக்கு உரிய பலனைத் தருவார்கள்.
ஆவது மனதில் எண்ணம் அறிவில் உணர்வில் மருவி
மேவது பலனைத் தந்து மேம்படச் செய்யும் அதனால்
பூவுல கேற்றும் மனிதர் பூசனை செய்தல் உறுதி
12 ( இதனை உணர்த்தவே இயற்கை தனது கடமையைச் சரிவரச் செய்து, நம்மையும் பிறருக்குப் பயன்படும் வகையில் கடமையாற்ற அறிவுறுத்துகிறது. இதன்படி நடப்பதே விவேகம். )
வேண்டிய பொருளை எண்ணம் வித்திடும் உருவினில் கடமை
ஈண்டுதல் இயல்பை யடுத்து இருப்பதைப் பிறருக்குக் கொடுத்துத்
தூண்டுதல் மனதினில் அமைதி துய்ப்பவர் கரும விவேகி
13 ( உலகிலே ஐந்து வகை வழிபாடுகள் உண்டு. அவை கடவுள், கடவுள் அடியார், மறைந்த மூத்தோர், நல்ல மனிதர்கள், இயற்கை ஆகிய ஐந்தையும் வழிபடுதல் ஆகும். )
முறைவழி பாடு ஒன்றும் மூதாதையர் துதியும் ஒன்றும்
உறைவழி பாடு என்று உயர்ந்த மனிதர்க்கு ஒன்றும்
கறைபடி யாத பூமிக் கருணைக்கு ஒன்றும் ஐந்தாம்
பு₄ஞ்ஜதே தே த்வக₄ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் (3-13)
14 (13) பிறருக்குக் கொடுத்து வாழ்வது உன்னதமான இறைவழிபாட்டிற்குச் சமம். பிறருக்குக் கொடுக்காது அனுபவிப்பவர்கள், இறுதியில் பாவத்தையே உணவாகக் கொள்வர்.
கணக்கே பார்ப்பது கயமை கடவுள் தருவது பொதுமை
வணக்கம் மனதினில் வேண்டும் வறியோர்க் குதவல் வேண்டும்
இணக்கம் இதுவே இதனை இகழ்வோர் உண்பது பாவம்
யஜ்ஞாத்₃ப₄வதி பர்ஜன்யோ யஜ்ஞ: கர்மஸமுத்₃ப₄வ: (3-14)
15 (14) மழையால் உணவும், உணர்வால் உயிரும் உருவாகுவதாகவே இயற்கை நியதி வைத்துள்ளது.
நதியும் இறுதி வரை நாளும் தாவ ரங்கள்
கதியும் ஈதல் எனுங் கால இலக் கணத்தின்
விதியும் யோக மெனும் வித்தை அறிந்து கொள்க
தஸ்மாத்ஸர்வக₃தம் ப்₃ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி₂தம் (3-15)
அகா₄யுரிந்த்₃ரியாராமோ மோக₄ம் பார்த₂ ஸ ஜீவதி (3-16)
16 (15-16) இயற்கையிலிருந்து பிறந்ததே செய்கை. அதனால் இயற்கையை ஒட்டிய செயலை நடத்தி வருபவரே நல்ல பயன் அடைபவர். மற்றோர் வாழ்வும் செயலும் வீணே.
முயற்சி யுடன் உலகம் முழுதும் பயன் அளிக்கும்
பயிற்சி யுடை யாரே பண்பாளர் எப் போதும்
அயற்சி யடை யாத ஆனந்தங் காண் போரே
ஆத்மன்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்₃யதே (3-17)
17 (17) தனக்குள்ளே அமைதி கொள்பவனே யோகி. அவன் செயலைச் செய்யாதிருப்பினும் பழி ஏதும் இல்லை. (செயலைச் செய்யாதிருப்பது என்பது, பற்றுதலற்றுப் பலனைத் தியாகம் செய்து, தம் கடனாற்றுவது.)
மண்ணுள்ளே அமையும் கடமை மறப்பினும் இழப்ப தில்லை
கண்ணுள்ளே தெரியும் காட்சி கணமுட மறைந்தா போகும்
உன்னுள்ளே எரியும் தீபம் ஒளிர்வதால் உணர்வா யேகும்
ந சாஸ்ய ஸர்வபூ₄தேஷு கஶ்சித₃ர்த₂வ்யபாஶ்ரய: (3-18)
18 (18) செயல் துறவி பயனில் நாட்டம் வைப்பதில்லை.
பாடும் பயனும் தியாகி பார்வை படுவ தில்லை
நாடும் பலனும் இல்லை நட்டம் ஏதும் இல்லை
தேடும் ஆன்ம ஞானம் தேறிடப் பிறவி இல்லை
அஸக்தோ ஹ்யாசரன்கர்ம பரமாப்னோதி பூருஷ: (3-19)
லோகஸங்க்₃ரஹமேவாபி ஸம்பஶ்யன்கர்துமர்ஹஸி (3-20)
19 (19-20) எனவே பற்றை நீக்கி, சனகன் முதலான தலைவர்கள் அடைந்த பேற்றை நீயும் பெறுக.
காசினி மேவுந் தருமக் கருமத்தைச் செய்து வந்தால்
மாசிலை மயக்க மென்னும் மனதிடைக் குழப்பம் இல்லை
நேசனை சனகன் முதலாய் நிமலர்கள் அடைந்த பேறு
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத₃னுவர்ததே (3-21)
20 (21) ஏனென்றால் தலைவன் செல்லும் வழியிலேதான் மக்களும் செல்வார்கள். அதனால் தலைவனின் வழி தருமமுடையதாய் இருக்க வேண்டும்.
உலகிலே மக்கள் மேலோன் உண்மையிற் செல்வ தாலே
தலைவனாய் உள்ளோர் என்றும் தருமத்கீதைத் தத்தம் பணியை
நிலையினால் செய்ய வேண்டும் நீதியைக் காட்ட வேண்டும்
நானவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி (3-22)
மம வர்த்மானுவர்தந்தே மனுஷ்யா: பார்த₂ ஸர்வஶ: (3-23)
21 (22) மூன்று காலத்திலும், மூன்று உலகத்திலும் நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை எனினும், நான் இன்னும் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அவை என்னைப் பந்தப்படுத்தவில்லை.
ஈன்று சாலத் துயிரை இயக்குதல் ஞாலத் தலைவன்
சான்று அறிவாய் போதம் சாற்றும் மறையே தம்
தோன்று மாயா பேதம் தொடுவது இல்லை பிரம்மம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹன்யாமிமா: ப்ரஜா: (3-24)
22 (23-24) நான் செய்யவில்லை என்றால் உலகில் நடப்பது ஏது?
கோணுதல் ஆகும் தருமம் கோளாறு ஏகிச் சாகும்
பூணுதல் கடமை என்ற புண்ணியம் மறந்து போகும்
வீணென நானே இங்கே விளைத்தது அழிக்க நேரும்
குர்யாத்₃வித்₃வாம்ஸ்ததா₂ஸக்தஶ்சிகீர்ஷுர்லோகஸங்க்₃ரஹம் (3-25)
23 (25) எனவே நீயும் கவலைப்படாமல் பற்றற்றுச் செயலைச் செய்க.
பெருவது தகுமோ என்று பேரிடர் அச்சப் பட்டு
உருகுதல் தவறு அதனால் உருப்படல் கடினம் எனவே
வருவது வரட்டும் என்றே வாழ்வது நளினம் அறிக
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்₃வான்யுக்த: ஸமாசரன் (3-26)
24 (26) அறிஞர்கள் உன்னைப் போன்ற தலைவர்களுக்குக் காட்டிய வழியில், கடமையைச் செய்து வா. அதன்மூலம் பிறருக்கும் வழிகாட்டியாய் இரு.
அடுத்த மனிதர் உந்தன் அயராப் பணியைப் படிக்க
மடுத்த அணையை உடைத்து மதகைப் பிளந்த நதியாய்க்
கொடுத்த கருமப் பாதைக் கொள்கைப் பயணம் போக
25 (26) ஏனெனில் எல்லாம் அறிந்தவர்கள், அறியாத பேரைக் குழப்பாமல், தம்முடைய நடத்தையாலும், பேச்சாலும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாய், அவர்களைக் கடமை ஆற்றச் செய்தல் அவசியம்.
செறிவினை மாய்க்குந் தீமைச் சிதலையைச் சேர்த்தல் பாவம்
பரிவுடன் பகுத்தறி வித்துப் பற்றறு வித்தை கற்றோர்
அரியுடன் சேர்வ ருள்ளம் ஆனந்தித் திருப்பர் காணே
அஹங்காரவிமூடா₄த்மா கர்தாஹமிதி மன்யதே (3-27)
26 (27) எல்லாம் இயற்கையால் நடப்பதே. அதனால் தானே செய்வதாக எண்ணும் ஆணவத்தை அழி.
படிப்பினை அறியா துயிர்கள் பயப்பது தாமே என்று
துடிப்பினை உடையவ ராவார் துன்பமே கொள்பவ ராவார்
முடிப்பது முடியும் போது மூடமை அறிபவ ராவார்
கு₃ணா கு₃ணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே (3-28)
தானக்ருத்ஸ்னவிதோ₃ மந்தா₃ன்க்ருத்ஸ்னவின்ன விசாலயேத் (3-29)
27 (28-29) இயற்கையில் அமையும் (ஸாத்கம், ராஜஸம், தாமஸம் ஆகிய) மூன்று குணங்களின் காரணமாகவே உலகில் எல்லாச் செயல்களும் விதிக்கப்படுகின்றன. இதனை அறிந்தவர்கள்தான் மெய்வழியை உணர்ந்தவர்கள்.
எல்லாம் மூன்று குணத்தால் எழுப்பிய வேடம் என்றும்
பொல்லாப் புலனை வென்று போதனை அறிவோர் அறிவர்
கல்லாப் பிறவியர் பாவம் கண்கெட்ட குருடாய்ப் போவர்
நிராஶீர்னிர்மமோ பூ₄த்வா யுத்₄யஸ்வ விக₃தஜ்வர: (3-30)
28 (30) இந்த உண்மையை ஏற்று என்னைச் சரணம் அடைந்தால் உனக்கு எந்தக் கவலையும் இல்லை. நீ செய்யும் செயலாலும் உனக்குக் கேடு இல்லை. உண்மையான அமைதியை நீ பெறுவாய்.
மரணம் இல்லை பாவ மன்னிப்பும் தேவை இல்லை
திறனும் பலமும் சிந்தை திகழும் நினைவும் கர்மம்
அறனும் ஆவ தெனில் அமைதி அழிவ தில்லை
ஶ்ரத்₃தா₄வந்தோ(அ)நஸூயந்தோ முச்யந்தே தே(அ)பி கர்மபி₄: (3-31)
29 (31) அக்கறையுடன் இந்தப் போதனையின்படி நடப்பதால் நீ விரும்பிய எல்லா வடிவும், வரமும் காலத்தே பயன் தரப் பெறலாம். இதுவே உண்மை.
தரத்தைப் பெறலாம் உயர் தன்மை வரலாம் நல்ல
வரத்தைப் பெறலாம் எந்தன் வடிவம் உரலாம் நன்மை
கரத்தில் பெறலாம் பல காலம் எனலாம் உண்மை
ஸர்வஜ்ஞானவிமூடா₄ம்ஸ்தான்வித்₃தி₄ நஷ்டானசேதஸ: (3-32)
30 (32) அப்படிச் செய்யாமல், நல்லோரைக் கேவலமாய்ப் பேசத்துணிபவர் பயனற்று அழிந்து போவார்கள். பல பிறவிகள் எடுத்து இன்னல் அடைவார்கள்.
தன்னுடைய அகம்பா வத்தால் தன்மனம் போகப் போவார்
மண்ணிடை அவமா னத்தால் மாளுவர் மாயப் படுவர்
புண்ணிடை விளையும் புழுவாய்ப் பூதலம் பிறப்பர் பலநாள்
31 (32) (அதைத் தவிர்க்கத்தான்) இறைவனும் தருமப்படி கடமையாற்றும் யோகத்தை இயற்கையாகிய தனது நடைமுறையால் நாளும் பழுதற நடத்தி, உலகிற்குக் கடமையை உபதேசிக்கின்றான்.
திறம்படப் பாடும் வேதத் தீம்பொருள் காட்டும் சக்தி
உரம்பெற வென்றோ நல்ல உருப்பெற வென்றோ என்றும்
நிரந்தர மாகத் தமது நீதியைப் போதிக் கின்றான்
ப்ரக்ருதிம் யாந்தி பூ₄தானி நிக்₃ரஹ: கிம் கரிஷ்யதி (3-33)
32 (33) இயற்கை நடத்திடும் செயலே யோகம் என்று புரிந்து கொண்டு, நீ உனது பணியினைச் செய். (இயற்கையின் விதிகளின்படி, கற்பவை கசடறக் கற்றுப் பிறகு அதன்படியே தமது செயலையும் வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும். )
வாகையாய் வைத்த தர்மம் வகுத்திட்ட கருமப் பாதை
ஏகிடல் நலமே உலகில் எல்லாமே இயற்கையி னாலே
போகிடும் போக்கே நோக்கு போதனை செயலில் ஆக்கு
தயோர்ன வஶமாக₃ச்சே₂த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி₂னௌ (3-34)
33 (34) விருப்பு வெறுப்பாகிய வலையை விரிக்கும் புலனின் உணர்ச்சிகளில் மனப்பறவை சிக்குறக் கூடாது.
பொறுப்பு உன்னது ஆதலால் பொறையை அறிவது நல்லது
நெருப்பு என்பதாய் சக்தியை நெறிப்பது மனமது வல்லது
மறுப்பு செய்திடும் புத்தியால் மயக்கம் ஒழிப்பது நல்லது
ஸ்வத₄ர்மே நித₄னம் ஶ்ரேய: பரத₄ர்மோ ப₄யாவஹ: (3-35)
34 (35) நன்றாகச் செய்யாவிடினும், தன்னுடைய கடமையை முடிந்த அளவு செய்வது, மற்றவரின் கடமையை மிக நன்றாகச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது. ( ஏனென்றால், தனக்கு விதித்த கடனைக் காலத்தே பழுதற முடிக்க முயல்வதே தருமம். )
தவறுடன் ஆற்றி னாலும் தகுமே அதனை விட்டுப்
பிறரது கடனைப் பெருமை ற்றிடச் செய்வ தனாலே
பரவுதல் துயரே தர்மப் பாதையும் கலைய லாமே
35 (நமக்குள்ளே இருந்து நம்மை ஆள்விக்கும் ஆன்மாவை அறியாமல் இருந்தால், உலகத்தில் நமக்கு நல்ல கதி கிடைப்பதேது? )
வீணென நினைத்து நெஞ்சம் விளம்பிடும் உணர்ச்சி கெட்டுத்
தூணென நிலைத்துப் புத்தி துயின்றிட இருந்து விட்டால்
ஏனெனக் கேட்க ஞாலம் எங்குமோர் சீவன் இல்லை
36 (நமக்கும் பெரிதான சக்தி ஒன்று உலகத்தை நடத்துகிறது என்ற உண்மை அறிந்து கடமை ஆற்றினால் எதிலும் வெற்றி நிச்சயம். ஏனெனில் அந்த நம்பிக்கை ஒன்றே, பலனைத் துறந்து செயலைச் செய்யத் துணைவரும். )
நம்பிடும் உயிர்க ளாற்றும் நாளுரு செய்கை எல்லாம்
இம்மியும் தவறா தென்றும் ஈந்திடும் வெற்றி உண்மை
விம்மிடும் தோளா வீரா விசனத்தைப் போக்கு என்றான்
37 ( அத்தகைய பணிவுடன் கடமை ஆற்றினால் சொர்க்கமாகிய பலாபலனைப் பெறுவர். இல்லையேல், நல்லகதி கிடைப்பதேது? )
மதித்தபொற் சபையி லேறும் மாண்பினைப் பெறுவ ரந்தோ
சதித்திறன் கொண்டோ ஆசைச் சாரலில் நின்றோ நீதி
வதித்தவர் செயல் துறந்து வானுல கடையப் போகும்?
அர்ஜுன உவாச .
அத₂ கேன ப்ரயுக்தோ(அ)யம் பாபம் சரதி பூருஷ: .
அனிச்ச₂ன்னபி வார்ஷ்ணேய ப₃லாதி₃வ நியோஜித: (3-36)
விசயன் வினா
38 (36) பாபம் செய்ய விரும்பாவிடினும் ஒருவன் எவ்விதமான நெருக்கடியினால் உந்தப்பட்டுப் பாவத்கீதைச் செய்கிறான்?
விரிந்தது உலகம் இங்கே விளங்காத தொன்று உண்டு
சரிந்தது புனிதம் என்று சாற்றிடப் பாவம் செய்யத்
துணிந்தது எதனால் சொல்க தூயவா மாலா என்றான்
ஶ்ரீப₄க₃வானுவாச .
காம ஏஷ க்ரோத₄ ஏஷ ரஜோகு₃ணஸமுத்₃ப₄வ: .
மஹாஶனோ மஹாபாப்மா வித்₃த்₄யேனமிஹ வைரிணம் (3-37)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
39 (37) விசயா, ஆசையே அதர்மமான செயலைத் துாண்டும் வித்து. (முக்குணங்களில் ராஜஸ குணத்தால் துாண்டப்படுவதே ஆசை.)
கூசவே செய்யும் ரஜோ குணத்திலே விளையும் மாயம்
மோசமே முனையச் செய்யும் முற்றிலும் அழியத் தள்ளும்
பாசமே பற்றே ஆசைப் பந்தமே பாவத் தூண்டல்
யதோ₂ல்பே₃னாவ்ருதோ க₃ர்ப₄ஸ்ததா₂ தேனேத₃மாவ்ருதம் (3-38)
காமரூபேண கௌந்தேய து₃ஷ்பூரேணானலேன ச (3-39)
40 (38-39) நெருப்பைப் புகை சூழ்வது போல், கண்ணாடியைத் தூசு படர்வது போல் அறிவு ஆசையால் சூழப்பட்டுள்ளது. இத்தகைய ஞானம் நிலையான பயனைத் தராது.
பாயினைச் சேரும் ஆடிப் பளிங்கினைப் போலே ஆசைப்
பேயினைக் கூடும் ஞானம் பெருமையை விட்டு ஞாலம்
நாயினைப் போலே சுற்றி நன்மையை மறந்து போகும்
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞானமாவ்ருத்ய தே₃ஹினம் (3-40)
41 (39-41) இந்திரியங்களால் கட்டுப்படாத, ஆசைகளைத் துறந்த அறிவு ஒன்றே நிலையான நன்மையளிப்பது.
ஆறாத வலியை ஞான அமிழ்தினை ஒழிக்கு மரவைப்
பேராத ரவைத் தேடும் பேதமை ஆசைத் தீயைச்
சேராத ஞானம் ஒன்றே செழிப்புறும் வேதம் என்றான்
42 (40) ஆசையானது, சித்தம், மனம், புத்தி ஆகிய இடங்களில் பரவி, அறிவை மயக்கும்.
தினமும் புறமும் பரவும் திசையின் வரவில் தழுவி
குணமும் நலமும் அழியக் குறியைத் தவறச் செல்லும்
அணமும் கரையும் இல்லா அலையாய்ப் பரவிக் கொல்லும்
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம் ஜ்ஞானவிஜ்ஞானனாஶனம் (3-41)
43 (41) எனவே பகுத்தறிவாலும், யோகத்தாலும் ஆசையைக் கொன்று, ஆன்ம ஞானம் அடைவாய், கிருதி (விசயா).
விரதா புலனில் மலரும் வினையை அடக்கிப் பரிதி
வரதா யகனைத் தேடும் வாய்மை என்கிற சுருதி
உரதா யுளதாய்ப் பாடும் உயரிய தடைவாய் கிருதி
மனஸஸ்து பரா பு₃த்₃தி₄ர்யோ பு₃த்₃தே₄: பரதஸ்து ஸ: (3-42)
44 (42) (அத்தகைய ஞானம் ஏன் உயர்ந்தது என்றால்) உடலைவிடப் புலனும், புலனைவிட மனமும், மனதைவிடப் புத்தியும், புத்தியைவிட ஆன்மாவும் மேம்பட்டது.
நலனே அளிக்கும் மதி நல்மனத்தை விடப் பெரிது
உளனே இயக்கும் பதி உட்கடந்த ஆன்ம நெறி
வளனே மதிக் கரிது வல்லமை சொலல் அரிது
45 (ஆன்மாவும் அதை அறிதற்கான ஞானமுமே உலகில் சிறந்த பயன். அதுவே மனிதப்பிறவியின் குறிக்கோள். )
பேணிய எண்ணம் மேலாம் பெருமையில் உள்ளம் மேவும்
ஞானியை விடவும் மேலாம் ஞாலத்தில் ஆன்மா என்னும்
சூனியம் ஒன்றே மேலாம் சூத்திரம் அறிந்து கொள்க
ஜஹி ஶத்ரும் மஹாபா₃ஹோ காமரூபம் து₃ராஸத₃ம் (3-43)
46 (43) இவ்வாறு ஆசை அறுத்து, ஆன்ம ஞானம் பெறுவதற்கான கருமயோகத்தைக் கடவுள் விசயனுக்குக் கூறினார்
துயரெனும் மோஹப் பேயைத் தூறுடன் நீக்க ஞானப்
பயிரெனுங் கரும யோகப் பாடத்தை மாலன் பார்த்தன்
அயர்வெனும் மாயை நீங்கி அறிந்திடக்கூறு கின்றான்
ப்₃ரஹ்மவித்₃யாயாம் யோக₃ஶாஸ்த்ரே ஶ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே₃
கர்மயோகோ₃ நாம த்ருதீயோ(அ)த்₄யாய: (3)
இவ்வாறு கர்மயோகத்தின் மூன்றாம் பாகம் நிறைவுபெறுகிறது