10 Vibuthi Yoga
ஓம் ஶ்ரீ பரமாத்மனே நம:
அத₂ த₃ஶமோ(அ)த்₄யாய: . விபூ₄தியோக₃:
பாகம் 10 – திருவடிவ நெறி
பூ₄ய ஏவ மஹாபா₃ஹோ ஶ்ருணு மே பரமம் வச: .
யத்தே(அ)ஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா (10-1)
1 (1) பெரிய தோளையுடையவனே, உனது நன்மைக்காக விபூதி யோகம் என்கிற புனித வடிவமைப்புக்களைப் பற்றிய நெறியினைச் சொல்கின்றேன்.
வருந்தாதே வளமே ஓங்கும் வாய்மையை அடுத்துச் சொல்வேன்
திருந்தாதே நெஞ்சத் தன்பு திருந்தாத உயிர்கட் கெட்டா
விருந்தான விபூதி யோகம் விளங்கிடக் கூறு கின்றேன்
அஹமாதி₃ர்ஹி தே₃வானாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ: (10-2)
2 (2) வானவரும், ரிஷிகளும் கூட என்னுடைய வடிவத்தை அறிய மாட்டார்கள். ஏனெனில், நானே மூலாதாரன்.
பூணூல் வேதியர் அனைவரும் புரிந்திடா தாகா தென்னையே
பாநூல் பலவும் பகன்றிடப் பாடம் பலநூ றாயினும்
ஊனூள் எனையே காணவே உண்மை அன்பு வேண்டுமே
அஸம்மூட₄: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே (10-3)
3 (3) உண்மையான அன்புடன், என்னை உலகத்து நாயகனாகவும், பிறப்பற்றவனாகவும் காண்பவனே மயக்கத்திலிருந்து விடுபடுபவன்.
என்னையே சனனம் மரணம் எட்டிடாத் தலைவன் எனவும்
என்னையே அதியாய் அந்தம் எண்ணுதற் கரியா தெனவும்
என்னையே கதியாய் வந்தோ ரென்னுளே கலப்பர் அறிக
ஸுக₂ம் து₃:க₂ம் ப₄வோ(அ)பா₄வோ ப₄யம் சாப₄யமேவ ச (10-4)
ப₄வந்தி பா₄வா பூ₄தானாம் மத்த ஏவ ப்ருத₂க்₃விதா₄: (10-5)
4 (4-5) புத்தி, ஞானம், தெளிவு, பொறுமை, உண்மை, பணிவு, அமைதி, இன்பதுன்பம், பிறப்பிறப்பு, சமநிலை, திருப்தி, தவம், ஈகை, புகழ் எல்லாம் என்னிடமிருந்தே பிறப்பன.
சத்திய மின்பம் துன்பம் சாவொடு பிறப்பெனு மச்சம்
மத்திய மதிபுகழ் ஈகை மறமொடு தவமிகழ் திருப்தி
நித்திய நிலைவளர் முடிவு நிகழ்வது யாவுமென் னிடத்தே
மத்₃பா₄வா மானஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: (10-6)
5 (6) ஐம்பூதங்களுடன், மஹத்துவமும், அகங்காரமும் கூடியதே ஸப்தரிஷிகள் (ஏழு முனிவர்கள்) எனப்படும். மனம், புத்தி, தானெனும் உணர்வு, சித்தம் இவை நாலும் ஸனத் குமாரர் (நான்கு பிள்ளைகள்) எனப்படும். இவர்கள் என்னாலேயே தோற்றுவிக்கப் பட்டனர்.
ஆகும் மதியமஹத் துவமும் அகங்காரம் சப்த ரிஷியாகும்
ஏகும் மனமுநல் லறிவும் எனதெனு மமதையும் சித்தம்
நாலும் ஸனத்குமர னாகும் நயத்தை அறிவதுவும் நன்று
ஸோ(அ)விகம்பேன யோகே₃ன யுஜ்யதே நாத்ர ஸம்ஶய: (10-7)
6 (7) மேலே சொன்ன உண்மையின்படி, அசையாப் பொருளாய் நின்று யாவும் அசைக்கும் என் இருப்பையும் (சமஷடி), விசையையும் (வ்யஷடி) அறிவதால், நீ யோக சக்தி பெறுவாய்.
விசையா யியைந் துலகம் விளைக்கு மென் யோகத்தைத்
திசையாப் பரந்து மணுத் தினையா யடங்கு மெந்தன்
இசையாப் பெரிய நிலை இயல்பை அறிந் தாயே
இதி மத்வா ப₄ஜந்தே மாம் பு₃தா₄ பா₄வஸமன்விதா: (10-8)
7 (8) (உண்மையை மறைத்துப் பொய்யினைக் காட்டும்) புலனை அடக்கிய யோகியர் மட்டுமே நானே மூலகாரணன் என்ற தத்துவம் உணரக்கூடும்.
பொல்லாப் புலனை யடக்கியவர் பொறையிற் சிறந்த யோகியரே
எல்லாம் என்னிடம் இயங்குவதாய் எனையே காரண னென்பதுவாய்
கல்லாக் கல்வி கற்றவராய்க் கடைசியில் என்னைப் பற்றிடுவார்
கத₂யந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச (10-9)
8 (9) அத்தகைய ஞானியர், எப்போதும் என் நினைவாகவே இருந்து வரும் மற்ற அறிஞர்களின் பழக்கத்திலேயே நிலவி, ஒருவருக்கொருவர் அன்புடையவராய விளங்குவர்.
தினமென் னருளைச் சார்ந்து திறமையை அறியச் சேர்ந்து
குணமெனக் கூறும் வார்த்தை கொள்வதால் ஒருவர்க் கொருவர்
இனமெனச் சிறந் திருப்பர் இனியவ ரான மேலோர்
த₃தா₃மி பு₃த்₃தி₄யோக₃ம் தம் யேன மாமுபயாந்தி தே (10-10)
நாஶயாம்யாத்மபா₄வஸ்தோ₂ ஜ்ஞானதீ₃பேன பா₄ஸ்வதா (10-11)
9 (10-11) நான் அத்தகைய அன்பர்களின் மனத்தில் வெளிப்பட்டு, அறியாமையாகிய இருளை ஒழித்து, புத்தி யோகம் என்கிற ஞானப் பாதை வழி நடத்திச் செல்கிறேன்.
தப்படி வடிவ மான தவறினைத் தூர ஓட்டி
முப்பரி மாணந் தாண்டும் மூலஆ தாரங் காட்டி
எப்படி புத்தி யோகம் என்பதைக் காட்டச் செய்வேன்
பரம் ப்₃ரஹ்ம பரம் தா₄ம பவித்ரம் பரமம் ப₄வான் .
புருஷம் ஶாஶ்வதம் தி₃வ்யமாதி₃தே₃வமஜம் விபு₄ம் (10-12)
விசயன் வினா
10 (12) (விசயன் தயக்கத்தால் மீண்டும் இறைவனிடம் கேட்கிறான்.) உன்னையே பிரமன் எனவும், இறைவன் எனவும் எல்லோரும் போற்றுகிறார்கள்.
வில்லிய வல்லன் விசயன் வினயமாய்க் கேட்பான் கண்ணா
துல்லிய பிரம்மம் நீயே தூய்மையும் பரவும் நீயே
நல்லிய தேவர்க் கோவாய் நலம்படும் கருணை நீயே
அஸிதோ தே₃வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்₃ரவீஷி மே (10-13)
11 (13) நீயே பரம்பொருள் என முனிவரும், நாரதரும், அஸிதரும், தேவலரும், வியாஸரும் மற்ற எல்ல மறையறிவாளரும் கூறகிறார்கள். (அதனால், உன்னையே நான் கதியென்று அடைந்தேன்.)
அன்புடை அஸிதர் வியாஸர் அருமறைத் தேவலரின் வாக்கு
முன்புரை மொழியைக் கேட்டும் முற்றும் அறியாப் போக்கு
என்குறை தீர்க்கச் சோதி ஏற்றியென் சோகம் நீக்கு
ந ஹி தே ப₄க₃வன்வ்யக்திம் விது₃ர்தே₃வா ந தா₃னவா: (10-14)
12 (14) ஆகையால் உன்மேல் நம்பிக்கை கொண்டு நீ சொல்வதெல்லாம் நான் நம்புகின்றேன். ஆனாலும், பிரம்ம ஞானம் யாது எனத் தெளிவாய் அறிய முடியவில்லையே. (மனதில் எழுந்த ஐயம் இன்னும் முற்றிலும் நீங்கவில்லையே.)
நித்தனை நிமலன் மாலன் நிர்மலன் பிரம்ம ஞானம்
இத்தனை அளவும் காண இயலுமோ மேலும் ழும்
மெத்தன அமைத்த தெல்லாம் மெலிவதேன் சொல்க தேவே
பூ₄தபா₄வன பூ₄தேஶ தே₃வதே₃வ ஜக₃த்பதே (10-15)
13 (15) உன்னிலே விளக்கம் பெற்ற நீயே உன்னை அறிவாய். நீயே உயிர்களின் மூலம். நீயே அவற்றின் தலைவன். அண்டம் எல்லாம் அமைத்தாளும் ஈசன் நீயே.
இயல்பிலே தலைவன் நீயே ஈசனும் செயலும் நீயே
வயலிலே வித்தும் நீயே வளர்த்திடு சத்தும் நீயே
தயவிலே பலவும் காக்கும் தருமபரி பாலன் நீயே
யாபி₄ர்விபூ₄திபி₄ர்லோகானிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட₂ஸி (10-16)
14 (16) ஒளிவு மறைவு இல்லாமல், என்பால் அன்பு கொண்டு, நீயே எனக்கு உன்னுடைய மகிமையை விளங்க வைத்து ஆட்கொள்ள வேண்டும்.
சிறைக்கா வலினால் ஞானச் சிந்தையுங் கனியா ததனால்
உரைக்கா அருளும் வேத உண்மையும் விளங்கா ததனால்
மறைக்கா தெனக்கே நீயுன் மகிமையைக் கூறல் வேண்டும்
கேஷு கேஷு ச பா₄வேஷு சிந்த்யோ(அ)ஸி ப₄க₃வன்மயா (10-17)
15 (17) நான் எவ்வாறு தியானம் செய்து உன்னை அறிய வேண்டும்? எப்படி எனக்கு ஞானம் வரும்? உன்னைச் சரண் அடைந்தேன். எனக்கு வழி காட்டு. எல்லா உண்மைகளையும் எனக்கு உபதேசித்துக் கருணை காட்டு.
ஞானம் நயப்பது எங்ஙனம் நன்மை அடைவது எக்கணம்
வானோர் வணங்கிடும் வல்லபா வகுத்தது யாதென நகுத்திடு
ஊனோ டுயிருமுன் தஞ்சமே உத்தமா சத்திய நாரணா
பூ₄ய: கத₂ய த்ருப்திர்ஹி ஶ்ருண்வதோ நாஸ்தி மே(அ)ம்ருதம் (10-18)
16 (18) உன்னுடைய அமுத வார்த்தைகளைக் கேட்டும் எனது ஞானப்பசி இன்னும் அடங்கவில்லை. மீண்டும், மீண்டும், நல்ல வார்த்தைகளைக் கூறி, நான் (உலகம்) கடைத்தேற அருள் செய்விப்பாய்.
பருகினும் எனது தாகப் பசியினும் அடங்க வில்லை
உருகிடும் இதய மேற்று உணர்த்திடு பெருமை யாவும்
பெருகிடும் புவன முந்தன் பேரருள் பெற்ற தென்றான்
ஹந்த தே கத₂யிஷ்யாமி தி₃வ்யா ஹ்யாத்மவிபூ₄தய: .
ப்ராதா₄ன்யத: குருஶ்ரேஷ்ட₂ நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே (10-19)
ஸ்ரீகிருஷ்ணர் உரை
17 (19) நல்லது. விரிக்கின் பெருகும் என் பெருமை. ஆதலால், முக்கியமானவற்றைச் சொல்லி உனக்கு அருள் செய்கின்றேன்.
போர்த்திய விதியைப் போக்கப் பொருந்திய பதிலைச் சொல்வான்
நேர்த்தனே நெடுந்தோ ளையா நிச்சயம் விவரிக் கின்றேன்
சேர்த்திடு சித்தம் சிந்தை செவ்வணே உபதே சிப்பேன்
அஹமாதி₃ஶ்ச மத்₄யம் ச பூ₄தானாமந்த ஏவ ச (10-20)
18 (20) எல்லாருடைய உள்ளத்திலும் குடி கொண்ட ஆத்மா நான். உயிர்களின் முதல், நடு, முடிவு எல்லாம் நானே. இதனை அறிபவர் அறிவும் நானே.
விரிந்திடும் உயிர்கட் கெல்லாம் வித்திடை கடையும் நானே
புரிந்திடு முதலும் நடுவும் பூரணப் பலனும் நானே
தெரிந்திடு மன்பர் ஞானத் தேறலும் உணர்வும் நானே
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஶஶீ (10-21)
19 (21) ( ஆம்சு, தத்தா, இந்த்ரா, ஆர்யமான், விவஸவா, பஹன், பரஞ்ஜயன், த்வஸதா, மித்ரா, விஷணு, வருணன், பூஷன் என) வேதங்கள் சொல்லிய பன்னிரு சூரியர்களில் நானே விஷணு. (அதாவது பன்னிரண்டு மாதச் சூரியனில் பலன் தரும் காலம் நானே).
(நாற்பத்து ஒன்பது வகையான காற்றில் ) மருவும் மரீசியாகிய ஆற்றும் மருந்தும் நானே. (அதாவது, பிறருடைய நோவினைத் தீர்க்கும் தயாபரன்). குளிர்ச்சியான ஒளி தந்து தாவரங்களையும், மனிதர்களின் மனதையும் இதப்படுத்தும் விண்மீன்களில், நானே நிலவு. (அதாவது, கருணையில் பிறருக்கு இதமானவன்)
விண்ணிரு பொறிகள் யாவுள் விளங்கிடும் கதிரும் நானே
மண்ணிரு மருந்துப் பொருளில் மரிசியும் சுகமும் நானே
மின்னிடு விண்மீன் கூட்டம் மிளிர்ந்திடும் நிலவும் நானே
இந்த்₃ரியாணாம் மனஶ்சாஸ்மி பூ₄தானாமஸ்மி சேதனா (10-22)
20 (22) வேதங்களில், இசையுடன் கூடிய ஸாமம் நானே. தேவர்களில் நான் வாஸவன் (அதாவது, பொறிகளில் பரந்தது நானே). இந்திரன் நானே (அதாவது இந்திரியங்களின் தலைவனான மனம் நானே). சீவராசிகளின் அறிவு நானே.
மேதத்து வத்தில் வித்து மெய்த்தவ வாஸன் நானே
பூதத்தில் பொறியில் எண்ணப் புலனிலே மனமும் நானே
நாதத்தில் நயக்கும் ஓசை நவின்றிடும் அறிவும் நானே
வஸூனாம் பாவகஶ்சாஸ்மி மேரு: ஶிக₂ரிணாமஹம் (10-23)
21 (23) ( அஜய்கபாதன், அஹிர்புதன், ரபத்திரன், கிரீஸன், ஸங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், கபாலி, பஹன், ஸம்பு ஆகிய ) பதினொரு ருத்திரர்களில், காலத்தை அழிக்கும் சங்கரன் நானே. (படைத்தல் முதலான பதினோரு வகையான மாற்றங்கள் உலகில் உண்டு. அதில், அழித்தலே தலையான மாற்றம்.)
யக்ஷ ராக்ஷஸர்களில் குபேரன் நானே. (அதாவது, காலத்தின் அருளால் கிடைக்கும் பேறுகளில், வளம் பெருக்குவதே உலகிற்கு முக்கியம்.)
( தவன், துருவன், சோமன், ஆபன், அநிலன், அனலன், பிரத்யுஷன், பிரபாஸன் ஆகிய) எட்டு வசுக்களில் நானே அக்கினி. (அதாவது, உலகில் நடக்கும் ஆறு பருவகாலமும், அதனை அனுபவிக்க மனதில் எழும் இன்பம், துன்பம் ஆகிய சூழ்நிலை இரண்டும் சேர்ந்து எட்டாகிறது.) இவ்வுணர்ச்சிகளை அனுபவிக்க தீயினை ஒத்த வலிமை தேவை.
(தீ ஒன்றே எதையும் முற்றும் சுவைப்பது.)
மலைகளில் நானே மேரு. (மலை என்பது மனிதப் பண்பாட்டைக் குறிக்கிறது. யோக ஸாத்திரங்கள், உடலின் பிரம்ம நாடியினை மேருமலையாகச் சித்தரிக்கின்றன.)
மங்களம் அளிக்கும் யட்ச மரவருள் குபேரன் நானே
எங்குள இயற்கை எட்டில் எரித்திடும் நெருப்பும் நானே
அங்குல மளக்க வொண்ணா அசலத்தில் இமயம் நானே
ஸேனானீனாமஹம் ஸ்கந்த₃: ஸரஸாமஸ்மி ஸாக₃ர: (10-24)
22 (24) வழிபாடு நடத்துவதில் பிரஹஸபதியாயும், காப்பதில் கந்தனாயும், அருள் வழங்குவதில் குறையாத கடலாயும் பரந்திருப்பவன் நானே. இதனை வேதங்களின் வாயிலாக விளங்க வைத்த குருவும் நானே.
படையுடைத் தலைவன் என்றால் பார்கவன் முருகன் நானே
உடையணி கலனே என்றால் உவர்க்கடல் திரையும் நானே
விடையறி வாலே வேதம் விளைத்திடும் ஆசான் நானே
யஜ்ஞானாம் ஜபயஜ்ஞோ(அ)ஸ்மி ஸ்தா₂வராணாம் ஹிமாலய: (10-25)
23 (25) ரிஷிகளில், பிரம்மத்தின் குறிப்பாய்த் தோன்றிய பிருகு நானே. மந்திரங்களில் மகத்தான ஓம்என்ற பிரணவம் நானே. வேள்விகளிலேயே மிகப் புனிதமான ஜபயோகம் (தியானம்) நானே.
துணிவரில் ஜபயக் ஞத்தைத் துய்த்திடும் நெறியும் நானே
பனிவரில் படரும் அசலப் பரப்பிலே இமயம் நானே
இனிவரும் காலா தேசம் இயக்கிடும் உபயம் நானே
க₃ந்த₄ர்வாணாம் சித்ரரத₂: ஸித்₃தா₄னாம் கபிலோ முனி: (10-26)
ஐராவதம் க₃ஜேந்த்₃ராணாம் நராணாம் ச நராதி₄பம் (10-27)
24 (26) மரங்கள் என்றால், நானே அஸவதம். தேவர்களிலே இசையால் நயம் கூட்டும் நாரதன் நானே. நாடுவோர்க்கு உதவும் கந்தர்வர்களிலே, சித்ராதரனும், சித்தியிலே கபிலனும் நானே.
தரத்திலே தேவ கானத் தன்யநா ரதனும் நானே
திரத்திலே கந்தர் வர்க்குள் திகழ்ந்திடும் சித்ரா தரனே
உரத்திலே சித்தர்க் கெல்லாம் உயர்ந்திடுங் கபிலன் நானே
25 (27) குதிரைகளிலே உச்சைச்ரவம், யானைகளில் ஐராவதம், மனிதர்களிலே மாணிக்கமாயும் நிற்பது நானே. (அதாவது, உலகிலே துாய்மையும் மேன்மையுமான பொருளிலெல்லாம் நிறைந்து இருப்பவன் இறைவன் என்பதாகும்.)
கூர்த்தஉச் சைச்ர வஸமாம் குதிரையிற் குலமும் நானே
ஆர்த்தரி தானைக் குள்ளே அருமை ஐராவதமும் நானே
நேர்த்திய தான தெல்லாம் நிலைப்பவை எல்லாம் நானே
ப்ரஜனஶ்சாஸ்மி கந்த₃ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: (10-28)
26 (28) ஆயுதங்களில் வஜராயுதம் நானே. பசுக்களில் காமதேனுவும், உற்பத்திக்குக் காரணமான காமனும், பாம்புகளில் தலையான வாசுகியும் நானே.
(அதாவது வஜராயுதமே ஸங்கல்ப ஸக்தி அல்லது ஆன்ம பலம். இந்த உறுதியைக் கொண்டே, பாற்கடலைக் கடைவது போல, தன்னுள்ளே வளர்கின்ற நல்ல நோக்கமும், தீய நோக்கமும், மனமாகிய பாம்பினை நேர்மையை நோக்கியும், தீமையை நோக்கியும் எப்போதும் போரிட்டு இழுக்க, இதன் மூலமாகப் பலவகைச் சுகதுக்க அனுபவங்களைப் பெற்ற சீவன், இறுதியில் ஞானமாகிய அமிர்த பானம் அருந்துகிறான்.)
தெளிவிலே பசுவே காம தேனுவே திருவே நானே
பொலிவிலே அழகே ஆசைப் புணர்விலே மதனே நானே
நலிவிலே வாசுகி யென்னும் நச்சுடை அரவம் நானே
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் (10-29)
27 (29) நாகங்களில் நானே ஐந்தலைப் பாம்பு. (அதாவது, ஐம்புலனுணர்வே மிகப்பெரிய பாம்பு). உலகை வாழ்விக்கும் மழை நானே. மறைந்த மூதாதையரில் மூத்தவனான ஆரியமன் நானே.
கடமையைச் சரியாய்ச் செய்வதில் நானே யமன். (அதாவது, பலன் ஏதும் பார்க்காமல், காலத்தே பணியைச் செய்வதில் நானே சிறந்தவன்).
பெய்புனல் வானம் பூமி பெருமழை வருணன் நானே
உய்பவன் பிதிர்க் களுடே உயர்திரு ஆர்யம் நானே
செய்பவன் செயலைச் சரியாய்ச் செய்திடும் யமனும் நானே
ம்ருகா₃ணாம் ச ம்ருகே₃ந்த்₃ரோ(அ)ஹம் வைனதேயஶ்ச பக்ஷிணாம் (10-30)
28 (30) அசுரராய்ப் பிறந்தவர்களில் நானே பிரஹலாதன். தவறாது நடப்பதில் நானே காலம். தளராத வலிமையிலே நான் சிங்கம். தெளிவான குறியிலே நான் பறந்தேகும் கருடன்.
நிரவிடும் பகலும் இரவும் நிகழ்த்திடுங் காலன் நானே
பரவிடும் வனத்தே மிருகப் பலத்திலே சிங்கம் நானே
இறகிடும் இனத்தே பறவை இலக்கிலே கருடன் நானே
ஜ₂ஷாணாம் மகரஶ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்னவீ (10-31)
29 (31) துாய்மைப் படுத்துவதில் நானே காற்று. (காற்று ஒன்றே, தானாயும், நீரிலும், நெருப்பிலும் பரவியும் எதனையும் ஏற்றும், சுத்தம் செய்யத் தக்கது). ஆயுதம் தரித்து தக்கோரைக் காக்கும் திறத்தில் நானே ஸ்ரீராமன். மீன் எனச் சொன்னால், நானே சுறா. பாய்கின்ற நீரெனக் கொண்டால், நானே கங்கை.
ஆயுதம் தரித்த பேரில் அற்புதன் ராமன் நானே
மேயுநீர் மிகையும் மீனில் மேநிலைச் சுறாவும் நானே
பாயுநீர்ப் பரப்பில் சிறப்பில் பரதக் கங்கை நானே
அத்₄யாத்மவித்₃யா வித்₃யானாம் வாத₃: ப்ரவத₃தாமஹம் (10-32)
30 (32) நானே உயிர்களின் தொடக்கம், நடு, இறுதி எல்லாம். பொது அறிவு பரஅறிவு எல்லாம் நானே. அறியும் முறையிலே சிறப்பான காரண அறிவு நானே.
(நிலையான அறிவு முதலில் நம்பிக்கையால் மட்டுமே துாண்டப்படுகிறது. பிறகு வைராக்கியத்தால் பயிலப்பட்டு, ஏன், எதற்கு, எவ்வாறு என்பதான காரணத்தால் பலப்படுகிறது. இவ்வாறு எதனையும் பகுத்தறிந்தாராயும் கல்வியே உலகில் நல்ல பயனைத் தரவல்லது. அத்தகைய அறிவே பரம்பொருள்.)
அறிவிலே ஆன்ம ஞானம் அறிந்திடும் வடிவும் நானே
பரிவிலே சிந்தை ஞாலப் பகுத்தறி வாதம் நானே
விரிவிலே சுருங்க வைக்கும் வித்தகப் போதம் நானே
அஹமேவாக்ஷய: காலோ தா₄தாஹம் விஶ்வதோமுக₂: (10-33)
31 (33) நாதப்பிரம்மனும், ஒலிக்கு மூல வடிவனுமான அகரம் நானே.
(அதாவது, உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், சக்திகளும் நுண்ணிய விஞ்ஞான அறிவால் ஆராயப்பட்டால், யாவும் ஒலி வடிவான உண்மை புரியும். எல்லா ஒலி வடிவங்களுக்கும் அகரமே முதல் வித்து.)
வார்த்தைகள் ஒன்றோடொன்று கோர்த்து வடிவமைக்கும் யாப்பிலக்கணமும் நானே. (அதாவது, ஒலியாகிய மூலசக்தியால் எதனையும் உருவாக்குவது நானே.) ஒலியால் உருவான உலகை வழி நடத்திப் பின் அழிக்கும் காலகாலனும் நானே.
அடுத்ததோர் வார்த்தை யாகும் அந்தகப் புணர்ச்சி நானே
கடுத்ததோர் காலம் நானே கருத்திணை காணக் கண்கள்
கொடுத்ததோர் தேவன் நானே கொள்பவன் தானும் நானே
கீர்தி: ஶ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா₄ த்₄ருதி: க்ஷமா (10-34)
32 (34) ஆண்மை (அதாவது ஆளும் தன்மை) நானே. அழிப்பதில் மரணம் நானே. பெண்மையில் (அதாவது எளிமை, புகழ், வாக்கு, நினைவு, உறுதி ஆகியவற்றில் ) நானே பெருமைக்கு உரியவன்.
மேன்மையில் பிறக்கப் பிறவா மேநிலைக் கரணம் நானே
பெண்மையில் புகழில் வாக்கு பெருநினை வூக்கம் உறுதித்
தன்மையில் தருமப் போக்கு தழைத்திடும் ஆக்கம் நானே
மாஸானாம் மார்க₃ஶீர்ஷோ(அ)ஹம்ருதூனாம் குஸுமாகர: (10-35)
33 (35) நானே வேதப் பாடல்கள். அப்பாடல்களின் சந்தங்களில் நானே காயத்ரி. மாதங்களில் நானே மார்கழி. காலத்தில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் வைகறை நானே. பருவத்தில் மலர்கள் பூத்த வஸந்தம் நானே. (அதாவது, மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய இயற்கை நிகழ்ச்சிகள் எல்லாம் என்னுடைய வடிவமாகவே அமைவனவாகும்.)
ஓதுங்கா யத்ரிச் சந்தம் ஒப்பிலாப் பதமும் நானே
மாதமா திரையில் ஓங்கும் மார்கழித் திங்கள் நானே
காதலா தலால் வஸந்த காலஅற் புதமும் நானே
ஜயோ(அ)ஸ்மி வ்யவஸாயோ(அ)ஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம் (10-36)
34 (36) சூதாட்டம், தந்திரம் எனும் கலைகளிலும் நானே நுண்ணிய அறிவு. (அதாவது, எல்லாச் செயலுக்கும் அறிவே உபகரணம். அந்த உபகரணம் நானே.) ஒளி பொருந்திய முகத்தின் ஒளியும் நானே. ரம், வெற்றி நானே. இதற்குக் காரணமான உறுதியும் நானே.
செஞ்சுடர் முகத் தோரன்ன செறிவுநல் லழகும் நானே
விஞ்சிடும் வெற்றி நானே ரவை ராக்யம் நானே
நெஞ்சிலே சாட்சி யாகும் நேர்மையும் நெறியும் நானே
முனீனாமப்யஹம் வ்யாஸ: கவீனாமுஶனா கவி: (10-37)
35 (37) யாதவர் (விருஷணி வம்ஸம்) குலத்தின் திலகம் நானே. பஞ்ச பாண்டவரில் விசயன் நானே. (அதாவது, தன்னை அண்டிய பக்தனும் தானே.) ஞானத்தில் வியாஸன் நானே. எல்லாக் காலத்தையும் காணும் உஸானன் (சுக்கிராச்சாரியார்) நானே.
புருஷய பாண்டவ ரைந்தில் புண்ணியன் விசயன் நானே
சிருஷடி கானா மிர்தச் சிந்தையன் வியாஸன் நானே
திருஷடி ஞானா தீதன் தீரன்நல் லசானன் நானே
மௌனம் சைவாஸ்மி கு₃ஹ்யானாம் ஜ்ஞானம் ஜ்ஞானவதாமஹம் (10-38)
36 (38) தண்டிப்பவைகளில் நானே செங்கோல். வெற்றி விரும்புவோரில் நானே ராஜநீதி. ரகசியங்களில் நானே மெளனம். அறிவாளிகளில் நானே அறிவு.
நப்பிணை நயந்து ர்த்தி நடத்திடும் நெறியும் நானே
ஒப்பிய ரஹஸி யத்தை ஓதிடா மெளனம் நானே
செப்பிய அறிவிற் செறிவில் சீரிய ஞானம் நானே
ந தத₃ஸ்தி வினா யத்ஸ்யான்மயா பூ₄தம் சராசரம் (10-39)
37 (39) எல்லாவற்றுக்கும் காரணமான விதை நானே. அந்த விதை முளைக்கச் செய்யும் சத்தும் நானே. நானின்றி ஏதுமில்லை.
சத்தும் நானே அண்ட சராசரத் துலங்க வைக்கும்
சித்தும் நானே ஞானச் சிந்தையில் உதித்த மாய
முத்தும் நானே முதலும் முடிவும் பயனும் நானே
ஏஷ தூத்₃தே₃ஶத: ப்ரோக்தோ விபூ₄தேர்விஸ்தரோ மயா (10-40)
38 (40) என்னுடைய தெய்க வடிவத்தைச் சொல்லத் தொடங்கினால் அதற்கு முடிவில்லை. எனினும் சுருக்கமாக உனக்கு நான் அதனைச் சொன்னேன். கேட்டது அறிந்து உன் கடமையைப் பணிவுடன் செய்.
வடிவில்லை என்னால் ஆகா வடிவங்கள் ஏதும் இல்லை
படவில்லை போலே எந்தன் பரவலைச் சுருங்கச் சொன்னேன்
எடுவில்லை விசயா உன்னை எதிர்ப்பது இறக்க வேண்டும்
தத்ததே₃வாவக₃ச்ச₂ த்வம் மம தேஜோம்(அ)ஶஸம்ப₄வம் (10-41)
39 (41) எந்த சீவராசியிடத்தில் எதெல்லாம் பெருமை வாய்ந்ததாக உள்ளனவோ, அதெல்லாம் நானே, என்னுடைய அம்சமே என்பதை உணர்ந்து கொள்க.
உருக்குலை யாமல் வாழும் உத்தமர் நல்லோர் உள்ளத்
திருக்கயி லாயத் தாளும் தினகர னாகத் தேறும்
பெருக்குடை ஆன்ம நேயப் பேரருள் நானென் றறிக
விஷ்டப்₄யாஹமித₃ம் க்ருத்ஸ்னமேகாம்ஶேன ஸ்தி₂தோ ஜக₃த் (10-42)
40 (42) இந்த முழு உலகத்தையும் நானே தாங்குகிறேன். ஆனால் இந்த விவரங்களை அறிந்து கொள்வதால், நீ அடையும் பயன் என்ன? ( பழுதற்ற ஆன்மஞானமும், மனப் பக்குவமும் அதனால் உனக்கு வருவதாகும். அந்த அறிவினால் உனக்கு விதித்த தருமத்தை உன்னால் பழுதற நடத்த முடியும். ) எனவே நீ, உனக்கான கடமைகளைச் செய்.
பலனென்ன உனக்கு ஞானப் பக்குவம் வருவ தாகும்
பயமென்ன எடுத்த சீலம் பழுதற முடித்த நேரம்
பலனென ஆவதாகும் பார்த்தனே அறியச் சொன்னான்.
விபூ₄தியோகோ₃ நாம த₃ஶமோ(அ)த்₄யாய: (10)
இவ்வாறு பர அறிவுப் பர ரஹஸ்ய நெறி எனும் பத்தாவது பாகம் நிறைவுபெறுகிறது