Sri Mukambika Kappu
Sri Mukambika Kaappu
ஸ்ரீ மூகாம்பிகா காப்பு
ஸ்ரீ மூகாம்பிகை காப்பு
ஆகா தேது அடியவருக் கோர்தீதும்
ஏகாது காப்பாள் எமதன்னை – மாகாளி!
சாகா வரமருளும் சங்கரி கொல்லூரின்
மூகாம் பிகைநம் துணை
ஓம்ஹ்ரீம் ஐம்ஸ்ரீம் ஒலியருட் சக்தி
உயர்வினை அருளும் பரமசிவ சக்தி
காம கலாவதி கனிவருள் சக்தி
காளீ ஸ்ரீபிரஹந் நாயகி சக்தி
இச்சை அறிவு இயலெனும் அரிய
முச்சக் திகளின் முழுவடி வினளாய்
மூகாம் பிகையாள் முன்னிருந் தருள
ஏகாம் பரனார் இணையாள் அடியை
சிந்தையி ருத்திச் செய்துதி இதனை
முந்தைப் பழியற முனிவோர்க் கிரங்கி
வந்திடும் தாயின் வடிவடி பணிய
நந்தியின் மகனார் நலமருள் கனிய
பாப்புது மாலைப் பதிவுற நூற்றுக்
காப்பிது வாகக் கனிவுடன் நோற்று
இருளிட ரழிய இறையொளி பொழியக்
குருவருள் புரியக் குறைகளை வோமே!
கோகர் ணம்முதற் குமரித் தென்முனை
ஆகிடும் நந்நிலம் அதுமுன் பரசு
இராமரும் அமைத்த இரம்மிய தேசம்!
தேவருந் தினந்தொழும் திவ்விய பூமி!
இடைவளம் மிஞ்சும் இயற்கையும் கொஞ்சும்
நடையுடை மேலை மலைத்தொடர் நாடு
தென்னகக் கர்நா டகநா டிட்ட
நந்நகர் உடுப்பி நலமா வட்டப்
பிந்தூர் வட்டம் பெருவளம் கொட்டும்
தந்தூ றமுதந் தருவனக் காட்டில்
கொல்லூ ராகிய கோட சத்தரி
நல்லூர் மலையடி வாரச் சித்தினி
கங்கை எனசௌ பர்ணிகை ஆறு
பொங்கிட ஓடும் பொலிவருட் சாறு!
தென்கரை மீதுள திருத்தலப் பேறு!
பொன்மய ஜோதிப் புகலெனு மாறு
உத்பவ லிங்க உருவடை யாளம்
அத்புதப் பிரம்ம அருவுரு வாகும்!
மத்தியிற் பொன்னிழை மருவிட லாகும்!
சத்தியும் சிவமும் சமனரு ளாகும்!
இடப்புறம் முப்பெரும் இயலருட் சக்தி
வலப்புறம் ஒப்பிய வடிவருட் பிரம்மம்
ஜோதிர் லிங்கச் சுடரருள் ஒளியாய்
ஆதி சக்தியின் அருளுரு வடிவாய்
மூலா தார முழுமைக் கலையாய்க்
காலா தேசங் கடந்தருள் நிலையாய்
சத்சித் சுகமெனும் சமநிலை யருளாய்
புத்திக் கரிதாய் புவனத் துருவாய்
பாற்கடல் லக்குமி பகவதி வாணி
சேர்த்தருள் புரியும் செழுமலர் ராணி
நாற்கரத் தாளாய் நமதருட் தாயாய்
வார்த்துரு நன்மை வடிவெடுத் தாளாய்
சத்குரு சங்கரர் சரணெனக் காட்டி
நித்திய மங்கள நிறைவெனக் கூட்டி
“போகா திரு”வெனப் புகலருள் ஈட்டி
மூகாம் பிகையின் முகமதி சூட்டிப்
பாடிடுந் துதியாற் பரசிவ நிதியாய்த்
தேடிடும் கதியாய்த் திருவருள் பவளை
நாடிடும் அடியார் நலமுற அருளைச்
சூடிடும் வடிவாம் சுடர்க்கொடி அமுதை
மேலறி வுறவும் மெய்யுணர்ந் திடவும்
காலனு மணுகாக் கதியடைந் திடவும்
சூலிருள் களையும் சுகமினிந் திடவும்
காலடி பணிந்திக் காப்பணி வோமே!
எவ்வுட லாயினும் எடுத்துடல் இனித்து
செவ்வித மாய்வரும் சீவிதம் முடித்து
அவ்வியம் விலக்கி அகவொளி துலக்கி
கவ்விய முவ்வினைக் கருமம் அவித்து
உடல்மனம் அறிவென உபகர ணங்களும்
திடமுறத் துணைவரத் திரளமு தளித்து
இடரனு காமல் இருந்தொளிர் இன்பத்
தடமருட் காப்பு தனையணிந் தாலே
மடியும் அன்ன மயமெனும் கோசம்
முடியும் எனினும் முழுதுற ஆயுள்
வடியும் வரையில் வடிவுற வாழும்
படியும் அருளும் பரிசென தாகும்!
பின்னப் படுதுயர்ப் பிணியெவை வரினும்
அன்னப் பெருவுடல் அழகுற விளங்க
வருநோய் வருகணம் வடுவற விலக
ஒருபாய் படுகை விழுநிலை அகல
சர்க்கரை உப்பு இரத்தக் கொழுப்பு
சளிதலை வலிஎலும் பாலிடர்ப் புற்று
பக்க வாதம் படர்தோல் வியாதி
பாதம் முதற்தலை பரவிய நரம்புச்
சிக்கல் இருமல் சீக்கிடர் குதநோய்
மக்கிடு நினைவு மார்வலி குட்டம்
மூச்சிடர் கண்நோய் முகவலிப் பின்னல்
பேச்சிடர் விக்கல் பேரறி யாப்பிணி
விடத்திடர் ஏவிடும் சூனியம் எச்சம்
உடற்பிணி யால்மனம் ஊடிடும் அச்சம்
நலிவு மெலிவு நகம்பல் மயிருள்
மலியும் நுண்நோய் மலட்டுத் தன்மை
எத்தனை வகையில் எதுவந் தாலும்
அத்தனை இடரும் அடியவன் செய்த
வல்வினை அழித்து வருநொடி கழித்து
செல்லுவ தற்கருள் செய்தன வாகி
நொடியிற் கரைய நோயற ஆயுள்
முடியும் வரைக்கும் முழுநல மாயென்
அன்ன மயத்து அருவுடற் கலயம்
பொன்னென ஒளிரும் புகலருள் வாயே!
மகிழ்வுறப் பிராண மயமெனும் கோர்வை
நெகிழ்வற ஓடி நெடுவிழை சூடி
சுவாசப் பாதையிற் சுகவளி நூற்று
கோசத் தாலொளி குலவிட ஏற்றி
இடகலை பிங்கலை சுழுமுனை நாடி
எனும்பல வழிகளில் எழிலுற ஓடி
குடவுடல் ஒளிரக் குண்டலி ணீஎழுந்
திடவருள் பொழியத் திறன்மிக வூடி
யோகமும் ஒருநிலை யாகவும் உதவும்
தேகமும் சுவாசவி வேகமும் வரவும்
பிறழறப் பிராணப் பெருவுடல் காத்துத்
திறமுற வாழத் திருவருள் பூத்து
மாறி அலைக்கும் மனோமயம் என்னும்
உறியி ளைக்கும் உடலுட் கோசம்
மடித்திட முடியா மாயப் போர்வை
அடித்தள மாகிய ஆழிச் சால்வை
வாசனை யாகிய வல்வினை வித்து
வீசுவ தாலெழும் புல்வெளிக் கொத்து
நல்நினை வாகிடும் எண்ண விருத்தி
புல்லறி வாகவும் வந்து வருத்தி
ஆசையிற் கட்டி அலைக்கழித் திட்டு
பாசப் பிணையினிற் பட்டிழு பட்டு
கூசிடும் எண்ணக் குவியலைக் கொட்டிப்
பூசிய வன்மப் பாசறை கட்டி
சீரிய கருவி யாகிய மனது
பேரறி விழந்து பேயென அலைந்து
நல்லன மறந்து நடுநிலை துறந்து
பொல்லன வெட்டிப் பொழுதில் திளைந்து
ஆயுளின் முடிவில் ஆசையின் மூட்டைக்
காயுறச் சுமந்து கலனுடல் தேடிப்
பேயென அலையும் பெரும்பிழை வேண்டேன்!
தாயென அருளித் தயவுடன் மனதைச்
சீருடன் இயக்கிச் செய்வினை விருத்தி
வேரினை நிறுத்தி வெகுநலம் திருத்தி
நேரிய எண்ண நிறைவத னாலே
ஆரியன் எனவென் அடிமனம் நிறுத்தி
என்மனக் கோசம் எனுமருட் கருவி
தன்மய ஞானத் தத்துவம் பெருகி
சின்மய மான சிவசுக வெள்ளத்
தின்வழி யாகத் திரளருள் தரவே
தமோ எண்ணத் தடைகளை நிறுத்தி
ரஜோ எண்ணத் தளைகளைத் திருத்தி
மெத்தன அவசர மிகையினைச் சுருக்கி
சத்துவ எண்ணச் சமரசம் பெருக்கி
கசடறத் துடைத்த கண்ணா டியென
விசனம் விடுத்த விரிமன மேடை
மாசறத் துலங்க மதியினில் உண்மை
வீசிட விளங்கும் விஞ்ஞான மயக்
கோசத் துள்ளே கோதற மலரும்
வாசத் தாமரை வசப்பட லாக
வேசப் புவனம் வெளியுல கங்கள்
பேசப் படவெழும் பிறபொரு ளெல்லாம்
அறிபவன் நானெனும் அறிவிற் கெதுவோ
அறிவொளி தருமெனும் அடிப்படைப் பாடம்
புரிபட லாகப் புத்திக் கும்மொளி
தருவது யாரெனத் தன்னுட் கேள்வி
எழவைத் தென்னுள் என்பொருள் எனதென
அழவைத் தலைக்கும் அதுமம காரம்
விழவைத் துயர்த்தி விடும்வை ராக்கியப்
பழவித் தளித்துப் பயன்மர மாக்கி
ஒட்டுதல் அறிந்தும் ஒட்டா திருக்கும்
திட்டம் தெளிந்து திசையும் அறிந்து
பழுதற நாடகப் பாத்திரம் போல
ஒழுகிய வேலைகள் ஒழுங்குற முடித்து
செய்கடன் கருமச் செயலினை யோகம்
மெய்யுறச் செய்து மேநிலை எய்து
பொய்யறி வில்லாப் போதப் பெருவொளி
பெய்ய ஒளிர்ந்து பேசற மிளிர்ந்து
நான்யார் எனவும் நல்லகங் காரந்
தான்யார் எனவும் தன்னுள் வினவி
மகிழ்வாய் ஆனந்த மயமெனும் கோசம்
பகிர்வா ராகிப் பதிய வுரைந்து
தானத் தவநெறி தன்வயத் தியானம்
மோனித் திடுமனம் முன்னிலை யோகம்
ஞானப் பெருநலம் அன்னவை கூடும்
வானச் சுகவெளி வடிவினன் ஆகி
வருநாள் நன்று வாழ்விற் பெற்ற
திருநாள் என்று தேறிக் கற்று
எதிர்பார்ப் பற்று எதுவும் முடித்து
பதிலாய் உற்ற பரிசில் இனித்து
நிறைவுற வாழும் நிலையருள் வாயே!
மறைபொரு ளாகும் முறையருள் வாயே!
முற்றும் விடுதலை யுற்றுன தருளைப்
பெற்றவ ராகும் பேறருள் வாயே!
கவிரா யனிவன் கதறிடும் ஓசை
செவியாள் வுறவும் சிறிதோ ராசை
காப்பென நூற்றுக் காலடி வைத்தேன்
யாப்பென ஏற்றுன் அருள்தரு வாயே!
படித்தோர்க் கின்பப் பரிவருள் வாயே!
பணிவோர் உள்ளம் படர்ந்திருப் பாயே!
முடித்தோர் மனதில் முனிந்திருப் பாயே
முனிவோர் நலனை முகிழ்ந்தளிப் பாயே!
காப்பிது அணிவார் காப்பென நீயே
மூப்பிறப் பிடர்வலி முறியடிப் பாயே!
நாப்பிற ழாதிந் நலம்மொழி வார்க்கு
கூப்பிடு முன்னருள் கொடுத்திடு வாயே!
மூகாம் பிகையே மூலப் பொருளே!
நாகா பரணார் நாயகி உமையே!
சாகா நிலையருள் வாயடி சரணம்
சாரதை சாம்பவி சங்கரி சரணம்!
பாரதி பைரவி பைந்தவி சரணம்!
பகவதி சரஸ்வதி பதுமலர்ச் சரணம்!
ஸ்ரீமதி துர்க்கா ஜயநிதி சரணம்!
சின்மயா நந்தச் சீரே சரணம்!
கொல்லூர் பரசிவக் கொழுந்தே சரணம்!
நல்லூழ் அளிக்கும் நலனே சரணம்!
தாயே மூகாம் பிகையே சரணம்!
தயவருட் பூரண நிலவே சரணம்!
தாயே மூகாம் பிகையே சரணம்!
தயவருட் பூரண நிலவே சரணம்!
தாயே மூகாம் பிகையே சரணம்!
தயவருட் பூரண நிலவே சரணம்!
இத்துடன் ஸ்ரீ மூகாம்பிகை காப்பு நிறைவு பெறுகிறது.
(மீ. ராஜகோபாலன்)
ஓம் ஸ்ரீ குருப்யோ நம: