Sri Murugan Chalisa in Tamil

ஸ்ரீ முருகன் சாலிஸா (செந்துறை நாற்பது)


ஸ்ரீ கணேசாய நம:சரவணபவ முருகேசா

தோ³ஹா (தொகையறா)

சரவண பவனடி சரணடை வோம்!
சண்முகர் அருளப யம்பெறு வோம்!
அர னொளிச் சுடரென வரு  முருகன்
ஆதா ரமதில் அருளுறு வோம்!
சக்தி ரூப வடி வேலோனே!
சர வணத் துதித்த  குமாரா!
வர சித்தி விநாயகர் இளையோனே!
சுர சுக மேவு விலாஸா!

தோ³ஹா (தொகையறா) – பொருள்

சரவணப் பெருமானைச் சரணடை வோம்! சண்முகரின் அருளால் பயமற்று இருப்போம்.
சிவபெருமானின்  ஒளியாக வரும் முருகன் நமக்கு ஆதாரம். அதில் அருள் ்பெறுவோம்!
சக்தி வடிவ வேலவனே, சரவணப் பொய்கையில் உதித்த குமரக் கடவுளே!
நலமருளும் சித்தி விநாயகரின் தம்பியே! தேவ சுகம் அளிக்கும் தயாநிதியே!

சௌபா (குறள் வெண் செந்துறை)

குரு வடிவான ஞான குல நாயக
குரு குஹேச சிவ பால ப்ரதாயக (1)தேவ பூத ரதி பதிமுரு கேசா!
தென்முகன் நெற்றிச் சோதி விலாசா! (2)

மஹா யோக மகத்வம் உன் அங்கி!
மமதை யிலாத மனதுளே தங்கி (3)

நெஞ்சினில் ஒளியருட் தேஜ ப்ரகாசா!
நேயமி குந்தருள்! சஞ்சல நாசா! (4)

வேத மந்த்ரவித்  விசாரங் காணார்
ஓய்ந்தே  பூஞ்சி ரமே பலி யானார்! (5)

மங்களப் ப்ரணவ மாநெறி தந்தனை!
மாமதி யேகுரு ராஜனுன் சிந்தனை (6)

நித்யா தார நிறையருட் போதிடும்!
நேம மாக நிதமே துதி ஓதிடும்! (7)

குரு சுப்ர மண்யோனே கதியாம்!
கோதறத் தினமே தானருள் நிதியாம்! (8)

வேலன் நன் மறை மூலனின்
தாள்மலர் தலை சூடு வோம்!

ஆறு வீர முக வடிவினி லாகா
அபயம் ஏது! அறு திங்கள் உலாவாய் (9)

சீறு  தீயினொளி திகழ வந்தாயே!
மூல மந்த்ரப் பூஞ் ஜோதி தந்தாயே! (10)

சூர சம் போதன சுபம் இடு வாயே!
ஸ்ரீ குரு நாத வடிவுங்கொண் டாயே! (11)

சுர மகள்  பூவாங் கரமுகு வாயே!
குற மகள் இடம் உகக் கொண்டிருந் தாயே! (12)

முகத்தில் வழியுமுன் பரோ பகாரம்!
முனி ஜன மனதினுட் கொண்ட ப்ரஸாதம்! (13)

ஸகலாகம நிக மாதி ப்ரபோதம்!
ஸாதன ஸாத்தியம் அருளுமுன் பாதம்! (14)

நிஜ பரா பர நிரூபண மாயே!
அஜ கேகய கஜ மேலமர்ந் தாயே! (15)

தின முன தான திக்கே கிட நாதா
தோயவுந் தூய தேய தய வேதா! (16)

வேலன் நன் மறை மூலனின்
தாள்மலர் தலை சூடு வோம்!

அமரோ ருந்தொழும் அறுபடை வீரா!
அஞ்சேல் எனத் துயர் அறுத்திடுஞ் சூரா! (17)

இக சுக ப்ரயோ ஜனம் அத னோடே
எல்லா மான ஜனனம் அதி லூடே  (18)

தகு புத்தியாய் மேவி யகம் ஊறி
தமதுள் தாங்கு வையே அருளிடும் மாரீ! (19)

கந்த சுரேசக் ககன தே வேஶா!
கதியடை வித்திடும் கருணா தீஶா! (20)

ஓமெனுஞ் சாரே! உன தடி யாலே
தீதற ஆள்வா யெனும் அத னாலே (21)

சுப சுக மிக இந்நாளே சரணம்!
தவ மிக் கவனாக் கிடவே தருணம்! (22)

தூபமுந் தீபமும் பூவிலுங் கோலம்
தேவோர் போடும் தீங்கறுக் காலம்! (23)

சூர சம்ஹார சுபம் அருள் இடு வாய்!
மஹா தேவவடி வாயருள் புரிவாய்! (24)

வேலன் நன் மறை மூலனின்
தாள்மலர் தலை சூடு வோம்!

நாளும் யோக நிறை வருள் வீரா!
மனதில் நிரந்தர சுகம் விளைப் பீரா! (25)

மங்களமே தருவாய்க் குற மாதை
மணந்தரு ளிடும் ஷடானன் என் பாதை! (26)

குஹ கதிரேச  கும ரேசா!  ராஜா!
மனமே பூஜைப் பொருள்நறு ரோஜா! (27)

அவ்வியம் ஓடப்பே ரோரறி வாவை
வீசும் நினதுசீர் விழியிவன் தேவை! (28)

மாலோன் மருகன் ஆன செந்தூரா!
மயில் அமர்ந்திட்ட விதி யதி காரா! (29)

போதிலும் என்னுள்  புகுந்தினிப் பீரே!
புகல் உமை உணரும் அப்போதமுந் தாரே! (30)

இட்ட நல்லன இயல்புறத் தாராய்!
இக பர சோபன மானவை சீராய்!  (31)

வேல வனே! ஸ்ருங் காரா! ஈசா!
பதா கைச்சேவற் பரி சிகி வாசா! (32)

வேலனின் மறை மூலனின்
தாள் மலர் தலை சூடு வோம்!

தினமே உளமு முன் நாமமே பாடும்
நொந்த வந்த கேட துவுடன் ஓடும்! (33)

சிந்தை யாளும் குரு பரன் அவ ராலே
அந்தக னாற் பயம் அருகில் வராதே! (34)

குமர குருபரா!  குற்றங்கள் அறுப்பீர்!
குருவடி வாகி நற்றறம் அளிப்பீர்! (35)

எங்கடன் அடை உடன் முரு  கேசா!
தூய தருள் அறுமுகம் உடை ஈசா! (36)

ஜய் ஜய் ஜய் ஷண்முக அருட் தாயே!
எதா கிலும் எனக் காயருள் வாயே! (37)

நானெது கோர! யாவு மறிந் தாயே!
சூசக மென்ன எலாந் தெரிந் தாயே!  (38)

கோ ஷமி தடை!  முருகேச சாலீஸா!
தோய பக்தி யாலே ஜகதீஶா! (39)

கவி ராயன் இதனால் அடி சேர்வார்!
பூஜை நாதம் இதயம் இடு வாரே!  (40)

வேலன் நன் மறை மூலனின்
தாள்மலர் தலை சூடு வோம்!

சௌபா (குறள் வெண் செந்துறை) – பொருள்

குருவாகவும், ஞானப் பரம்பரையின் நாயகனாகவும், இதயக் குகையில் ஆத்மனான் குஹனாகவும், சிவக் குமாரனான பெருமை கொண்டவனும் (1)

தேவர்கள், பூதங்களுக்குத் தலைவனுமான முருகேசா!  தென்முகக் கடவுளான சிவபெருமானின் நெற்றிக் கண் சுடரின் விளக்கமானவனே! (2)

பெரும் யோக சக்தி நினது ஆடையாகும்!  ஆணவற்ற தூய மனதின் உள்ளிருந்து (3)

இதயத்தில் உணர்வாகிய சுடரொளியானவனே! என்னிடம் அன்பு மிகுந்து அருள் செய்! மனத் துயரை அழிப்பவனே (4)

வேத மந்திர அறிவை விசாரித்து உண்மையை அறியாத பிரம்ம தேவர், களைத்து, அதனால் தனது ஒரு மலர்போன்ற தலையை இழந்தார். (5)

அவருக்கு மங்களமான பிரணவ மந்திரப் பொருளைத் தந்தாய்! பேரறிவாக விளங்கும் குருமார்களின்  அரசனான உன்னைப் பற்றிய சிந்தனை …..(6)

நிலையான ஆதாரமாய், நிறைவு தரும் ஞானத்தைத் தரும்.  அதனால், நியமத்துடன் தினமும் என்னால் துதிக்கப்படுகின்ற …..  (7)

குரு ஸ்ரீ சுப்ரமணியரே எனது கதி!  தூய நந்நிதியைத் தினமும் அடைகின்ற பயனே அவரருள்! (8)

அதனால் வேலவனும், மேலான வேதங்களின் மூலப் பொருளுமான முருகப் பெருமானின் திருவடி மலர்களை நமது தலைகளில் சூடுவோம்.

வீரமிக்க ஆறுமுகங்களின் அழகினால் அடையமுடியாத அபயம் வேறு ஏது! ஆறு பூரணமான  நிலாக்கள்  உலா வருவது போல … (9)

சீறுகின்ற (சிவபெருமானின்) தீயின் ஒளியாக வந்தாயே முருகா! அவ்வொளியால் வேதப்பொருளாகிய மலர்த் தீபம் தந்தாயே! (10)

சூரனை அருளால் தன்னுள் ஒன்றான அறிவுமயம் ஆக்கி நன்மை செய்தாயே!  புனிதமான குருவாக (சுவாமிமலையில்)  வடிவுங் கொண்டாயே! (11)

தேவ மகளான செய்வானையின் பூக்கரத்தை மகிழ்வுடன் ஏற்பாயே!  குறமகள் வள்ளியை, நினது இடது புறத்தில் மகிழ்வுடன் கொண்டாயே! (12)

நினது முகத்தில் அனவருக்கும் கருணை செய்யும் அமுதம் வழிகின்றது! அதுவே முனிவர்கள், மற்றும் நன்மக்களின் மனம் உட்கொண்ட பிரசாதம்! (13)

எல்லா ஆகம, வேதங்களின் உட்பொருள் உன்னிடமே!  நல்ல நிலையையும், அதற்கான வழியையும் தருவது நினது திருவடிகளே! (14)

மெய்யான பரம்பொருளை நிரூபிக்கின்ற அருள் வடிவமாக நீ! ஆடு (மாயை மலம்), மயில் (ஆணவ மலம்), யானை (கன்ம மலம்) ஆகியவற்றின் மேல் ஆட்கொள்ள அமர்ந்தாயே! (15)

தினமும், நினது திசையையே  நான் அடைய அருள் தருவாய் நாதா! நினது திசையில் தோய்ந்திருக்க, எனக்குத் தூய அறிவையும் தயவுடன் அருள்! (16)

அதனால் வேலவனும், மேலான வேதங்களின் மூலப் பொருளுமான முருகப் பெருமானின் திருவடி மலர்களை நமது தலைகளில் சூடுவோம்.

அமரர்களும் தொழுகின்ற அறுபடை வீரா! அஞ்சேல் என அடியவர்களின் துயரை அறுக்கின்ற  சூரா! (17)

இப்பிறவியில் அருளும்  இன்பப் பயன் மட்டுமல்லாமல், மற்ற  எல்லாவிதப் பிறவிகளிலும் கூட  … (18)

நல்லறிவாக என் உள்ளத்துள்் ஊறி, எனைத் தாங்கிப் பிடித்து அருள் மழை தருவாயே! (19)

கந்தப் பெருமானே! சுரேசுவரா! தீக்கனலான தேவ சேனாபதியே! நற்கதி நல்கும் கருணாமூர்த்தியே! (20)

“ஓம்” எனும் தெளிவே! நினது திருவடிகளாலே, கேடு அறுத்து எம்மை ஆட்கொள்வாய் என்பதனாலே … (21)

நலம் பயக்கும் இந்நந்நாளிலேயே உன்னிடம் சரண் அடைகின்றேன்! (அதனால் இந்நாளே) என்னை என்னை உன்பால் தவம் மிக்கவனாக ஆக்குவதற்கும் (உனக்கான) நல்வாய்ப்பு! (22)

தூபங்களும், தீபங்களும், பூக்களும் கொண்டு அழகிய கோலமிட்டுத் தேவர்கள் துதிக்கின்ற, தீயன வெல்லாம்  அழிக்கின்ற நற்காலமாக … (23)

“சூர-சம்ஹாரம்” எனும் அருள் அனுக்கிரகத்தால் அழித்தாய்!  பரசிவ வடிவாக அருள் புரிந்தாய்! (24)

அதனால் வேலவனும், மேலான வேதங்களின் மூலப் பொருளுமான முருகப் பெருமானின் திருவடி மலர்களை நமது தலைகளில் சூடுவோம்.

எனக்குத் தினமும்  யோக நிறைவினைத் தரும் வீரா! என் மனதில் நிலையான சுகத்தை விளைப்பீரா! (25)

மங்களத்தையே தருக!  எனது வழி இனிமேல்,  குறமகளை மணம்புரிந்த ஆறுமுகப் பெருமானைத் தொழுதலே ஆகும்!  (26)

குஹா! கதிரேசா!  குமரேசா!  ராஜா!  எனது மனமே நின்னைப் பூசிக்கின்ற நறுமண  ரோஜா! (27)

ஐயங்கள் விலக்கும் மகத்தான பேரறிவை வீசுகின்ற நினது அழகிய  விழிப்பார்வையே எனது தேவை! (28)

திருமாலின்் மருகனே, திருச்செந்தூரா! மயிலில் அமர்ந்துள்ளவரும், விதிகளை எல்லாம் ஆளுகின்ற அதிகாரியுமானவரே! (29)

எப்போதும் எந்தன் உள்ளத்தில்  புகுந்து இனிமை தருவீரே! எனது அடைக்கலமான நினது உண்மையை  உணருகின்ற ஞானத்தையும் தருவீரே! (30)

நல்லாசைகள் மட்டுமே இயல்பாகவும், அவை முழுமையான பயனாகும் இயலையும்  அருளுங்கள்!  இவ்வுலகிலும் மறுவுலகிலும், மங்களமானவற்றை எனக்குத் தாருங்கள்!  (31)

சிங்கார வேலனே! ஈசா! சேவற் கொடி கொண்டு, மயில்மேல் அமர்ந்திருப்பவரே! (32)

அதனால் வேலவனும், மேலான வேதங்களின் மூலப் பொருளுமான முருகப் பெருமானின் திருவடி மலர்களை நமது தலைகளில் சூடுவோம்.

தினமுமே என் உள்ளம் நினது திருநாமத்தையே பாடும்.  அதன் பயனாக,  நொந்துற வந்திடும் தீவினை விளைவுகள் யாவும் ஓடும்்! (33)

எனது சிந்தையை ஆளும் குருபரனாகிய முருகப் பெருமானின் அருளினாலே,  அந்தகனாகிய காலனின் பயம், எனது அருகில் வராதே! (34)

குமரகுருபரா! எமது குற்றங்களை அறுப்பீர்! எனது ஞானகுருவாகி, எமக்கு நல்லறங்களை அளிப்பீர்! (35)

எனது பிறவிக் கடனை உடனே அடைத்து முடிப்பீர், முருகேசா!  தூயதை எனக்கு அருள் செய்வீர், ஆறுமுகங்களைக் கொண்ட ஈசா! (36)

அருட் தாயாக விளங்கும் ஷண்முகப் பெருமானுக்கு வெற்றி, வெற்றி, வெற்றி! (37)

நான் எதைத்தான் வேண்டுவது! எல்லாம்தான்  உமக்குத் தெரியுமே! இதில் இரகசியம் என்ன!  (38)

பக்தியில் தோய்ந்த, “ஸ்ரீ முருகப்பெருமான் செந்துறைத் துதி” எனும் இந்த 40 பாடல்களான எனது

சரண கோஷத்தைப் பெறுவாயாக! ஓ உலகாளும் பெருமானே! (39)

இதனால், இந்தக் கவிராயனும்் நினது திருவடி அடையட்டும்!  இப்பூஜைப் பாடல்களைத் தமது இதயத்தால் தொடர்ந்து  இசைக்கட்டும்!  (40)

அதனால் வேலவனும், மேலான வேதங்களின் மூலப் பொருளுமான முருகப் பெருமானின் திருவடி மலர்களை நமது தலைகளில் சூடுவோம்.

தோ³ஹா (தொகையறா)

சங்கர பாலனை சம்புகு மாரனை
சகல புவன பரி பாலன காரனை
சரண மடையச் சிந்தா குல மவியும்
இதயத் தாமரை அதிலொளி குவியும்!காத்த வராய் இரு! கணபதி சோதர
சிவ கௌரீசர் அருட் சுக சாகர
சரண கமல அருள் தந்தருள் வோனே!
சீலா! மூலா! அனுகூல வேலோனே!

ஜய ஜய ஜய் சிவபால குமாரா!
ஜய கணேச ருட னான விலாஸா!
ஹே! கவி ராயனுஞ் சேயனென் றாயே!
மூவிடர் அற்றுயர் முடிவருள் வாயே!

சரவணப் பொய்கை யானுக்கு ஜய்!
பவபயம் போக்கு வானுக்கு ஜய்!

தோ³ஹா (தொகையறா) – பொருள்

“சங்கரர்”, “சம்பு” எனப் புகழப்படும் சிவபெருமானின் குமரனும், எல்லா உலகங்களையும் கட்டிக் காப்பவருமான ஸ்ரீ முருகப்பெருமானைச் சரணம் அடைந்தால், மனக்கவலை எல்லாம் போகும்! இதயத் தாமரையில் ஒளி குவிந்து நிறைவளிக்கும்!

ஓ முருகா! எமைக் காத்தவர் (காத்தவராயர்) என இரு! கணபதியின் தம்பியே! பார்வதி பரமேஸ்வரரின் மகனானா இன்பக் கடலே! சீலா! எல்லாவற்றுக்கும் காரணமானவரே! அனுகூலம் செய்கின்ற வேலா, நினது பாதத் தாமரைகளைத் தந்தருள்!

வெற்றி, வெற்றி, வெற்றி பாலகுமாரனுக்கு! மங்களந்தரும் கணேசருடன் ஒளியானாயே! ஓ முருகா! இக்கவிராயனை நினது அடிமையான சேய் என்றாயே, அதனால், தாயே, முத்துயரும் நீங்கி, நற்கதி அடைய அருள் செய்வாயே!

சரவணப் பொய்கையில் வந்தவருக்கு வெற்றி!
பவ பயத்துயரை அழிப்பவருக்கு வெற்றி!

சரவணபவனடி சரணடைவோம்!

ஆக்கியோன்
அடியேன் மீ. ராஜகோபாலன்
நிறைவு

Share this Post

Leave a Comment