Sri Rajarajeswari Navamanimala
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நவமணிமாலை
ஸ்ரீ விநாயகர் துணை
முன்பின் நடுவான முழுமுதலே – இன்புறவே
ஐயாவி நாயகனே அபயமுன தருளடியே
மெய்யா யினியாவும் மேல்
ஸ்ரீ முருகப்பெருமான் துணை
மாலாதி ருமருக பவசீலா – பாலாபி
ஷேகவடி வேலா யோககுரு மேலா
வாகதமி ழாயருகில் வா
சிவாய நம:
உபாய மினிமன முராய சிவநம
சிவாய நமநம சிவாய ஹரஹர
நடாய நனிநட மிடாப மதிசிவ
சிவாய நமநம பராய பிறவழி
தடாய வரமளி சடாய பவநம
சிவாய நமநம கலாதி சிரபுர
நலாதி நதிவர அநாதி சிவநம
சிவாய நமநம தமாய மிகுஒளி
உமாதி பதிவர உபாதி விடுபட
சிவாய நமநம நமாய சிவசிவ
தயாள வெகுசுக பிரவாக மருகிட
சிவாய நமநம சிவாய நமநம
சிவாய நமநம சிவாய நமநம
சிவாய நமநம சிவாய நமநம
சிவாய நமநம சிவாய நமநம
பணிவுரை
ஒன்றேயான பிரம்மமாகிய பரசிவத்தின் சக்தியே ஆதிபராசக்தி என்றும், திரிபுராந்தகி என்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றது.
பரசிவத்தினைப் பிரியாத பேரெழில் தாயாக, பிந்து வடிவாக, ஸ்ரீ சக்கர மேரு பீடத்தில் அமர்ந்து, எல்லா உலகங்களையும், உயிர்களையும், தெய்வங்களையும் படைத்தும், காத்தும், முடித்தும், மறைத்தும், அருளியும் வரும் அகிலாண்ட நாயகியாக துதிக்கப்படுகின்றது. உலக மாதாவாக, அன்னை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியை ஏற்று, பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்த அன்னையின் சக்தியின் விரிவை ஸ்ரீ சக்கரமாகப் படைத்து, அதற்கான ஞானத்தை சக்தி தத்துவமாகப் பெரியோர்கள் படைத்துள்ளார்கள்.
மஹா மேரு எனும் ஸ்ரீ சக்கர வடிவம் வெளியிலிருந்து உள்ளே அடங்கும் ஒன்பது சக்கரங்களாகக் காட்டப்பட்டுள்ளது. முதலில் திரைலோக்ய மோஹன சக்கரம், பரந்த உலகங்களின் எல்லா விளைவுக்கும் காரணமான காரணம், காரியம், கர்த்தா என்றும், சத்துவ, ராஜஸ, தாமஸ என்றும், பலவகையில் மூன்று தத்துவங்களாகப் பெரியோர்களால் கூறப்பட்டது.
இதனுள்ளே இரண்டாவது சர்வாஷா பரிபூரக சக்கரம் பதினாறு இதழ்களுடன் விரிந்து, எல்லா ஆசைகளுக்கும் வித்தாகவும் விளைவாகவும் உள்ள இச்சா சக்தியாக விளங்குகின்றது.
மூன்றாவதான சர்வ ஸம்சேக்ஷாபண சக்கரம் எட்டு இதழ்களுடன் கூடிய கிரியா சக்தியாகும். ஆனதெல்லாம் ஒன்றாக்கி, ஆக்கியும் அழிக்கும் அதிருத்ர சக்தியாக விளங்குகின்றது.
நான்காவதாக சர்வ சௌபாக்ய தாயக சக்கரம் பதினான்கு இதழ்களுடன் விரிந்து எல்லாவித நன்மைகளையும் தரவல்ல சிந்தாமணியாக விளங்குகிறது.
அதனுள்ளே ஐந்தாவதான சர்வ அர்த்த சாதகச் சக்கரம் பத்து இதழ்களாக விரிந்து, இச்சையாலும், கிரியையாலும் விரிந்த எல்லா உலகினையும் கோர்த்திலங்கும் சித்த சக்தியாகிறது.
ஆறாவதான சர்வ ரக்ஷாகர சக்கரம் பத்து இதழ்களாக விரிந்து, ஞான சித்தியாக, ஒன்றான பிரம்மமே ஐந்து சிவ தத்துவங்கள், ஏழு வித்யா தத்துவங்கள், இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள் என்றான முப்பாத்தாறு தத்துவ சார விளக்காக, இத்தத்துவ பேதங்களைக் கடந்த பரசக்தியாக விளங்குகின்றது.
ஏழாவதான சர்வ ரோகஹர சக்கரம் எல்லாப் பிணிகளையும் நீக்க வல்லது. இது எட்டு இதழ்களாக விரிந்து பிணிகளிலே மிகவும் பெரிதான பிறவிப்பிணையினை அறுக்கும் ஞான சக்தியாகும்.
எட்டாவது சர்வ சித்தி ப்ரதா சக்கரம் எல்லாச்சக்திகளின் வித்தான ஆதிசக்தியாகும். எல்லாமும் அறிந்த அறிவும், எல்லாமுமாக்கும் செயலுமான ஆதிபராசக்தியாக விளங்குகிறது. இவற்றை எல்லாம் கடந்து, ஒன்பதாவதாக உள்ள சர்வ ஆனந்தமய சக்கரம் என்பது இரண்டற்ற ஒன்றான அத்வைத ஆனந்த நிலையைக் குறிக்கின்ற சிவசக்தி வடிவாக, மத்தியில் உள்ள பிந்துவாகும். முடிவில்லா ஆனந்த நிலையில் பிந்து வடிவிலே அன்னை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக அருள் ஆட்சி செய்து, உயிர்களுக்கெல்லாம் தயை செய்து கொண்டிருக்கிறது.
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நவமணி மாலை எனும் இந்த நூலிலே, ஒன்பது துதிப்பாடல்கள், அன்னையின் ஸ்ரீ சக்கரத்துள் அடங்கும் ஒன்பது சக்கரங்களையும் அதன் மூலாதாரமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் அருளையும் பிரார்த்திக்கின்றது.
நல்மனம் கொண்ட பெரியோர்கள் ஒன்றுகூடி அமைத்து ஆராதித்து வரும் லண்டன் மாநகரில், சரே வட்டத்தின், ஸ்டோன்லீ திருநகர், டெல் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் 25 மார்ச் 2012ல் வெகு சிறப்பாக நடக்கிறது. இந்த நந்நாளில், வையத்தில் அமைதியும், வளனும், உலக வழக்கத்தில் அன்பும் அறனும், வாழ்க்கைத் தரத்தில் உயர்வும், சுகமும், ஆன்ம பலத்தில் வலிவும் தெளிவும் கொண்டு வாழ, நாம் எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையை வணங்கி உய்வோம்.