Sri Rajarajeswari Navamanimala
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நவமணிமாலை
(1)
புவனேஸ் வரி சங்கரி
புரியுமெக் காரியக் காரணி கர்த்தவி
பூஷணி சக்திக் கிரியே!
ஊர்வசி உணர்வசி உருபொருள் அசைவினி
உலகாவும் நின் கைங்கரி
உன்வசமே சிவமே சின்மயமே தவமே
உளம்வசி சாட்சி நீயே!
நேர்வரி யாயுலகு நிறைமணி கோர்த்தணி
நெய்து விளையாடும் லலிதே
செயலாலே சிவஞான வயலாலே செகப்யிர்
செய்தருளும் சக்திக் கிரியே!
தீர்வுநீ காரணி திறமுநீ செயலுநீ
தெய்வத்தின் தெய்வம் நீயே
திரிலோக்ய மோஹன சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (1)
(2)
நாதகலா நந்தசிவக் காதலுலாப் பிந்துருவ
நாயகி வியக்கும் நிலையே!
நடத்துமருள் ஆசையால் படைத்துவிரி காசினி
நாடகம் இயக்கும் கலையே!
ஈதுஇலாக் காலமாய் இழைத்தாய் கோலமாய்
இதற்குள் தேசம் எனதாய்,
இதுவானால் இதுவென்று பொதுவான நியதியும்
இருத்திய சக்தி உமையே!
கோதுஇலா நற்காம கோடிவளர் காமாக்ஷி
கொற்றவையே பற்று யர்த்து!
கோமதி கௌமாரி கோமளி மாகாளி
குணத்ரய குணா போதினி!
சாதகி இச்சா சக்திநீ சாம்பவி
சகல கலா வல்லபி!
சர்வாஷ பரிபூரக சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி (2)
(3)
முத்தொழிலர் தாயுமாய் முச்சக்தி நீயுமாய்
முப்புரம் கடந்த கலையாய்
மூலப் பிரகிருதியாய் ஞாலப் பலவுயிராய்
முடிச்சிட்ட கால வலையாய்
சத்பொருட் சாரமாய் சித்சஞ் சாரமாய்
சதானந்த மான கலையாய்
சக்திமுழூ மூலமாய் ருத்ராதி மூன்றுமாய்
சதாம்ருத சுக ரூபமாய்
வித்தகி விமலிநீ விசனமழித் தேயமாய்
விடையாய் அமிர்த விருந்தாய்
விசாலி மாமாயே வித்தான சக்தியே
வேதசித் தானந்த வேரே!
சத்யமாய் நித்யமாய்ச் சாதனையாய் என்னுளே
சாம்பவி விளங்க வேண்டும்!
சர்வஸம் சேக்ஷாபன சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (3)
(4)
தீதிலா சுகானந்தத் தேனருளும் மீன்விழி
திவ்யமுக மதியின் காந்தம்
திருவதனம் அதிமதுரம் முகைஅதரம் மந்திரம்
தீர்க்கதரி சனமும் சாந்தம்
நாதவிதா னந்தவடி பிந்துகலா வதியதி
நளினமுளம் இளகும் ஆரம்
நாற்கரம் பூக்குடலை நங்கோல் செங்கரும்பு
நற்சங்கு சக்ர தாரம்
பாதமல ரானவிளம் பஞ்சணைய செங்கமலம்
பரிசையான் சிரசில் ஏற்பேன்
பாகமிலா ஏகசுகப் பலனருவி புலனுருவிப்
பகுத்தறிவில் தொகுத் துணருவேன்!
சாதவி தருவுநீ சிந்தாமணி தேனுநீ
சகலாதி லக்ஷ்மி நீயே
சௌபாக்ய தாயக சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (4)
(5)
அத்வை தானந்த அமிர்த சாகரம்நீ
ஆனந்த மயி பார்வதி!
அகிலாண்ட நாயகி ஆதிபரா சக்தி
அம்மா பிரஹந் நாயகி!
நித்யா நந்தகி நிர்மலி நிரந்தரி
நீலா தரா காளிகா
நின்னடியில் எம்மடமை மும்மலமும் உன்னுடமை
நிச்சயித் தருள்க அம்மா!
முத்துமணி மாலையும் ரத்னமிழை கிரீடமும்
முன்முறுவ லலங் காரமும்
மூகாம்பி கையுனது முகக்காந்தி விலாஸமும்
முற்றுமென் சித்தம் தெளியும்!
சத்யவதி சின்மயி நித்யமதி பிந்துநீ
சதாசிவ கலை யாவுநீ
சர்வார்த்த சாதக சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (5)
(6)
நேயமளி சிவசக்தி சதாசிவம் மஹேஸம்
நின்றமா சுத்த வித்யை
நிறைமாயா காலகலை நியதி அராகம்
நிகழ் அறிவு புருடனோடு
தேயமளி இருபத்து நான்கான்ம தத்துவம்
தேறுமுப்பத்து ஆறு கூறு
தெரிவாக விரித்திட்ட பரவான பேதத்துத்
திரையினை வீழ்த்தி இந்தோ
சேயனே ஈறிலாச் சேதனம் இதுவென்றே
சேகரம் காட்டி அருள்க
சேகரி தாந்த்ர ஸ்வரூபிணி மாலினி
ஜெகதீ ஸ்வரி பைரவி
சியாமளி ஸ்ரீலலிதே சாம்பவி சரஸ்வதி
சக்திசிவ தத்துவ மாயே!
சர்வ ரக்ஷாகர சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (6)
(7)
தேம்ப விதானத் தேகமொரு மண்குடம்
தெரிந்தும் தெரியா வினைத்
தேடலால் நோயுறும் தெரிக்கும் பிணியெனத்
தேற்றம் குறைக்கும் பிணை!
வீம்பதால் பேராசை வீணதால் மனமுதல்
வெறுமனே துயரப் படும்!
விவகார மயக்கமோ விளக்கினை மறைக்குமோ
விசனத்தில் அயரக் கெடும்!
காம்பதில் முதிர்ந்த கனியின்று நானுனைக்
கண்டதால் கட்டு விட்டேன்!
கைவல்ய மருந்தருள்! பொய்யின்ப மறந்துனை
கண்ணாரக் காண வைப்பாய்!
சாம்பவி சங்கரி சாரதே மாதவி
சம்ஸார பந்த முதலாய்
சர்வாதி ரோகஹர சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (7)
(8)
அந்தரி! அயனரி அரனும்நீ! முச்சக்தி
ஆனமுதல் முதலும் நீயே!
அசையாத சிவஞான விசையாவும் நீயே!
ஆதார முடிவும் நீயே!
சங்கரி பயங்கரி சாத்வினி சரஸ்வதி
சகலான்ம சாட்சி நீயே!
சாலினி மாலக்ஷ்மி மோகினி காமினி
சன்மார்க்க வழியும் நீயே!
முந்துதி மூலவி காரணி பைரவி
முழுதுனைத் தொழுது வாழ
முன்னெழுக மன்னுருக நின்னுருவ மின்னலெனை
முற்றெனைப் பற்ற வருக!
சாந்தவி ஸத்சித்து ஆனந்த ரூபிணி
சக்திபர ஞானம் நீயே!
ஸர்வசித்திப் பிரதா சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (8)
(9)
அருஞ்சிவ உருவாரம் ‘ஹ’சப்த சாரம்
அதிசக்தி ‘ச’சப்த காரம்
ஐக்கியமே ‘ஹம்ஸ’ ‘சோஹம்’ ஆகும்,
அநாதி ‘ஓம்’கார நாதம்!
உருமூச்சின் விரிவெலாம் ஹம்ஸஸோஹம்
ஓடும் அணுவெலாம் ஹம்ஸஸோஹம்
பெருமிசை விசையெலாம் ஹம்ஸஸோஹம்
பேரறிவு பரம ஹம்ஸஸோஹம்!
பகலரியும் பனியாகப் பாவங்கள் போகும்
பக்குவமே சீலமென ஆக்கி
பதமலரே பரஹம்ஸப் பதவியருள் யோகம்
பாடத்தை அருள் சுந்தரி!
சகலபலன் அருளபய சாதகி ஆதரி!
சக்தி மஹா சித்தேஸ்வரி!
சர்வாந்த மய சக்கரா தாரணி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி! (9)
நவக்கிரக வணக்கம்
பற்றுதலால் ஆனவினைப்
பலனைஎல்லாம்
பங்கிட்டுத் தருவதற்கே
சுற்றும்கோள்கள்
கற்றதனால் ஸ்ரீராஜ
ராஜேஸ்வரி
கவின்மாதா காலடிகள்
சிரமேற்கொள்ள
உற்றவினை உறுத்தாமல்
உயரவேண்டும்!
உருபயனாய் உண்மையினை
உணரவேண்டும்!
பெற்றவளே பெரியமஹா
சக்திஅம்மா
பேரான கிரகங்களினால்
பெருமைதாரும்!