நவராத்திரி

(Read in ENGLISH)

ஐயாவுடன் உரையாடல் (2)

‘ஸ்ரீநிவாஸ், இந்த ஏணியைப் பிடிச்சுக்கிறியா?’,  மச்சினுள் ஏற ஏணிப்படியில் நின்றுகொண்டு கூப்பிட்டேன்.  மேலிருந்து கொலுப்படிக்கான பலகைகளையும், கொலு பொம்மைப் பெட்டிகளையும் இறக்க வேண்டும். அடுத்த வாரம் கொலு வருகிறதே!

உமாவும் குழந்தைகளும் கடைக்குப் போயிருக்கிறார்கள், எனக்கு ஒருவேலையைக் கொடுத்துவிட்டு! ஆனால், இதில் புகார் செய்ய ஒன்றுமில்லை, ஏனென்றால், நவராத்திரி விழாவுக்குத் தயார் செய்வதில் எனக்கும் மகிழ்ச்சி தான்.

ஸ்ரீநிவாஸ் எங்களுக்கு உறவு. அவனும் அவனுடைய நண்பன் டேவிட்டும் ஸ்வீடனிலிருந்து வந்திருக்கிறார்கள்.  மருத்துவப் படிப்பில் இறுதியாண்டில் இருக்கும் இருவருக்கும், லண்டன் யுனிவர்சிடி மருத்துவமணையில் சில வாரங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

நான் அழைத்த போது, இருவரும் கீழே வரவேற்பரையில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.

‘எஸ் அங்கிள்’ இப்படிக் கூறிக் கொண்டு தாவி எழுந்து வந்தான் ஸ்ரீநிவாஸ்.  ஏணியை பிடித்துக் கொண்டான்.  டேவிட் அருகிலேயே உதவி செய்யத் தயாராக இருந்தான்.

‘ஐயா, ஒரு சில நிமிடங்கள் …..’,  நான் சற்று பலமாகக் கூறினேன்.  கீழே அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் ஐயாவின் காதுகளில் விழவேண்டுமென்று,

ஐயாவும் ஒரு குறுகிய சந்திப்புக்காக எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

ஐயாவைப் பற்றி நான் முன்னேயே உங்களுக்குச் சொல்லி இருக்கவில்லை என்றால்,   நிச்சயம் அவரை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர் ஒரு அபூர்வமானவர்.  சாதாரணமான அவரது வெளித் தோற்றம் அதைக் காட்டாதுதான்.   படிப்பினால் விஞ்ஞானியாயும், தொழிலினால் ஆலோசகராகவும் இருக்கும் ஐயாவை எனக்கு அதிகம் தெரிந்திருப்பது, அவருடைய புதுமையான எண்ணங்களினாலும், ஆழமான ஆன்மீக அறிவினாலும் தான்.  இனிய நண்பர்.  எனக்குப் பலமுறையும் இதமளிக்கும் நட்பாக, வாழ்க்கை விஷயங்களில் உதவும் வகையில், காலத்துக்குப் பொருந்திய கருத்துக்களைத் தந்து இனிப்பவர்.   நிச்சயமாக, அவரைப் பற்றி மேலும் ஒருநாள் சொல்கிறேன்.

நான் ஏணியில் ஏறி, மச்சுவீட்டின் கதவினைத் திறந்தேன்.  உடனேயே, இலையுதிர்காலக் கதிரவனின் கற்றொளிகள், ஓடுகளின் ஆங்காங்கே இருக்கின்ற ஓட்டைகளின் வழியே சிதறித் தெறித்து,  இருண்ட ஆகாயத்தில் விழுந்து கிடக்கும் நட்சத்திரங்களாக, மச்சுவீட்டைக் காட்டியது.   மனதிற்கு ரம்மியமாக இருந்தாலும்,  வருகின்ற குளிர்காலத்துக்கு முன்பாகவே, வேய்ந்த ஓடுகளைப் பழுது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே,  கொலு பொம்மை இருக்கும் அட்டைப் பெட்டிகளையும், கொலுப்படிக்கான பலகைகளையும் கீழே இறக்கினேன்.

கொலுப்படிகளைக் கடைகளில் வாங்கியிருக்கலாம். அல்லது முறைப்படி உருவாக்கி இருக்கலாம். ஆனால் DIY எனத் தானே செய்யும் திறன் எனக்கு இருக்கிறது எனும் நம்பிக்கையின் விளைவு (எனது மனைவியின் எண்ணப்படி, அது தானே தொடங்கி விட்டு பிறகு முடிக்கத் தெரியாமல் விழிக்கும் திறன் என்பது வேறு விஷயம்!!)  5 படிகளுடன் கூடிய கொலுப்படி!  தோட்டவீட்டிற்கு இருக்கும் படிகளையும், சில பலகைகளையும் இணைத்து, எளிதாக வைக்கவும், பிரிக்கவுமாகச் செய்து வைத்த படிகள்.  கடந்த நாலு வருடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மேலிருந்து எடுத்து, சுத்தமாகத் துடைத்து, வரைபடத்தின்படிப் பொருத்தி, பூஜை அறையில் வைக்க வேண்டியதுதான்.

‘இதை உமா திரும்புவதற்குள் செய்ய வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டேன்.   கொலு பொம்மைகளையும் முடிந்தால் எடுத்துச் சுத்தம் செய்து வைத்து விடலாம்.

ஸ்ரீநிவாஸ் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  கொலுப் படிகளின் பலகைகளைச் சுவர் ஓரமாக அடுக்கிக் கொண்டே, ‘ஒன்னு, இரண்டு, மூணு, நாலு, அஞ்சு…. மொத்தம் அஞ்சு படியா’, கேட்டான்.

அதற்கு பதில் சொல்வதற்கு முன்னாலேயே, ‘ஏன் எப்போதும் ஒற்றைப் படையிலேயே கொலுப் படிகள் இருக்கு?  எனக்கு ஞாபகம் இருக்கு, சென்னையில பாட்டியும், ஏழு அல்லது ஒன்பது படிகள் தான் வைப்பார்.’ என்றான் ஸ்ரீநிவாஸ்.

‘ஒருவேளை அதுதான் வழக்கமாய் இருக்கும்’ என்றேன்.

‘ஒற்றைப்படை எண் என்றால், எளிதாக அதில், ஒரு நடுப்பகுதி இருக்கும். இல்லையா?  நடுப்பகுதி முக்கியம்’ என்றேன்.

‘எந்த வகையில்…’  இது டேவிட்டின் கேள்வி.

நான் டேவிட்டை முன்பே பார்த்துப் பழகி இருக்கிறேன்.  ஸ்ரீநிவாஸனுடனே சுற்றிக்கொண்டிருப்பதாலோ என்னவோ, அவனுக்கு இந்திய கலாசாரத்திலும், பழக்க வழக்கங்களிலும், ஒருவிதமான ஆர்வம் இருக்கிறது.  சொல்ல முடியாது, ஒரு இந்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்பட முடியாது.  இப்படி நான் நினைத்துக் கொண்டேன்.

‘நல்லது, கொலு வைக்கும்போது, மத்தியில், முக்கியமான தெய்வத்தை வைப்பது வழக்கம்.  ஒற்றைப் படையில் படிகள் இருந்தால், தெளிவான நடுப்படி இருக்கும் அல்லவா’, என்றேன்.

சொல்லும் போதே, கீழே அமர்ந்திருக்கும் ஐயாவைப் பார்த்தேன். அவரும் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, மேலே இருக்கும் எங்களைப் பார்த்தார்.

‘ரொம்ப சரி.  ஹ்ருதயஸ்தானம் அல்லது மையப் பகுதி.  சம்ஸ்கிருத மொழியில் ஹ்ருதய என்றால், மையம்னு பொருள்.  அதற்கு, சதையினாலான இதயம்னு அர்த்தம் இல்லை.   ஹ்ருதயஸ்தானம் அப்படிங்கிறது, ஒரு லாஜிகல் செண்டர்’,   என்றார் ஐயா.

மேலும் சொன்னார்.  ‘நன்னா கவனிச்சா,  ஒற்றைப்படையில் படிகள் வைக்கும் போது, நடுப்படி ஒண்ணு இருக்கும்.  அதன் நடுவிலே, பொதுவா, ஒரு தீபமோ அல்லது, அம்பாள் முகம் வைத்த கலசமோ வைப்பது வழக்கம்’

‘கலசம் அப்படினா?’ – இது டேவிட்.

அப்போதுதான் நான் கொலு பொம்மைப் பெட்டிகளைத் திறந்து கொண்டிருந்தேன்.  அப்பெட்டியில், வெள்ளிக் குடம் ஒன்று, வெளியே ஸ்ரீ வரலக்ஷ்மி அம்பாளின் முகம் செதுக்கப்பட்டு விளங்கியது.

‘இது தான் கலசம்’,  அதனை எடுத்துக் காண்பித்தேன்.

‘இது ஒரு புனிதமான குடம். இதனுள்  தண்ணீரோ, அல்லது, அரிசி, பருப்பு, மஞ்சள், பூ முதலான பொருட்களோ போட்டு, குடத்தின் மேலே, ஒரு தேங்காய் வைத்து,  ஆராதிக்கும் தெய்வமாக பாவித்து, மத்தியில் வைக்க வேண்டும்’ என்றேன்.

எனக்கு இதுபற்றி ஓரளவு தெரியும் என்றாலும், ஐயாவின் வாய் வழியாகக் கேட்பது, புதிய அனுபவமாக இருக்கும்.

ஐயா , பொதுவாகத் தானே முன் வந்து பேசுவது அரிது.  கேட்டால்தான் பதில் வரும்.  ஆனால் இப்போது, தானே முன் வந்து பேசியதால், ஒருவேளை ஆழமான கருத்துக்களையும் தருவார் என நான் நினைத்தேன்.

அதனால், ‘ஐயா, இது நமது கலாசாரம் தானே?  யாரும் இரட்டைப்படையில் படிகள் வைப்பது இல்லையே!’ என்று கேட்டேன்.

‘ஆமாம்,  ஆனால், எதுதான் கலாசாரம்!’, ஐயா சற்று அமைதியாயிருந்தார்.

‘கலாசார வழக்கங்கள் எல்லாம்,  உண்மையிலேயே,  பெரியோர்களால் ஆயப்பட்ட நெறிகள்தான்.  ஆனாலும், உணர்ச்சிகளாலும், ஒவ்வொரு காலகட்ட வழக்கத்தினாலும் மாற்றப்பட்ட சமாச்சாரங்கள்’ என்றார்.

சில நொடிகளுக்குப் பிறகு, ‘அப்படி நாம் செய்யும் மாற்றங்களுக்கும், ஏதோ காரணங்களைப் பொருத்தமாக நாம் காட்டி விடுகிறோம்….. அதில் ஒண்ணும் தப்பில்லை…  மாற்றங்கள் தேவைதான். ஆனால் தாத்பரியம் எனும் அடிப்படை உண்மையை மறக்காமல் இருக்க வேண்டும்’.

‘அப்படி என்ன தாத்பரியம் இருக்கிறது,  கொலு அப்படினா, எல்லா பொம்மைகளையும் அழகா வைக்கிறது தானே…. இதிலே வேற அர்த்தம் இருக்கா என்ன?’  இது ஸ்ரீநிவாஸின் கேள்வி.

நான்கூட அப்படித்தான் நினைத்தேன்.  நவராத்திரி முதலான எல்லாப் பண்டிகைகளும் மகிழ்ச்சியைத் தருவதற்குத்தான்.  பொதுவாய் நாம் எல்லோரும் விரும்புவதும் அதைத்தான். இருந்தாலும், பொம்மைகளை அடுக்கி வைத்து, அதற்கு பூஜை செய்வது எல்லாம் எதற்காக, அப்படிங்கிற எண்ணமும் என் மனதில் ஓடியது உண்டு.

‘ஆமாம். நவராத்திரி  ஒரு கொண்டாட்டம் தான். அதோட அது ஒரு வழிபாடும் கூட’ என்றார் ஐயா.

‘கொலுவில் எந்த வகையான பொம்மைகள் இருக்கு, அதெல்லாம் எப்படி வைக்கப்பட்டிருக்கு, அப்படிங்கறதெல்லாம் பார்த்ததுண்டா?’

நான் பதில் சொன்னேன்.

‘ம்… சும்மா கடவுள் பொம்மை மட்டுமில்லை.  ஆண், பெண், மிருகம், பொம்மைப் பாத்திரம், பண்டம்னு, எல்லா விதமான பொம்மைகளும் தான் இருக்கு’.

ஸ்ரீநிவாஸ் சொன்னான்.

‘ஞாபகம் இருக்கு.  என் வீட்டிலே, என் அம்மா, நான் லோகோ பிரிக்ஸ்ல பண்ணிய பொம்மைகளைக் கூட கொலுவிலே வைச்சிருக்கா’.

ஐயா என்னைக் கூர்ந்து பார்த்தார்.  நான் தொடர்ந்தேன்.

‘எனக்கும் ஞாபகம் இருக்கு. என் அம்மா எப்போதும் 9 படிகளில் தான் கொலு வைப்பார்.  நிறைய பொம்மைகள் இருக்கும். எல்லாப் படிகளும் நிறைஞ்சு இருக்கும்.  ஆனால், நட்ட நடுவிலே, கலசம் வைத்து, அதில அம்பாள் முகம் இருக்கும்’

‘கடைசிப் படியிலே என்ன இருக்கும்னு ஞாபகம் இருக்கா’ – ஐயா கேட்டார்.

‘ம், கொலுப்படிகள் எல்லாம் கூடத்திலே வைப்போம்.  தரையிலே, கடைசிப்படிக்குப் பக்கத்திலே,  ஒரு குளம் கட்டுவோம்.  அதுக்குள்ள தண்ணீர் விட்டிருப்போம்.  அம்மாவும்  முளைப்பயிரெல்லாம் பண்ணி, குளத்தைச்  சுத்தி வைச்சுடுவா.  நானும் என் சகோதரர்களும் போன்சாய் மரம், அதுமாதிரி நிறைய வைச்சு, அந்தக் குளமே நிஜமா, ஒரு காட்டுக்குள்ள இருக்கிற மாதிரி பண்ணிடுவோம்.’

அந்தத் தங்கமயமான எண்ணங்களில் தாக்குண்டு, சில நொடிகள் நான் அமைதியாகவே இருந்தேன்

‘எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. ஒரு முறை நதியிலேர்ந்து, அஞ்சாறு மீன்களைக் கொண்டு வந்து, கொலுவில் இருக்கும் குளத்துக்குள்ள போட்டிருந்தேன். அம்மா, கொலுவை அலங்காரம் பண்ணும் போது,  வெடுக்னு துள்ளின ஒரு மீனைப் பார்த்துட்டு, ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போய்ட்டா…. அப்புறம் என்ன…. கொஞ்சம் வாங்கிக் கட்டிண்டேன்.  கொலு முடிஞ்சவுடன், அந்த மீனை எல்லாம் ஒண்ணு விடாம பத்திரமா நதியிலே கொண்டு போய் விட்டுடணும் அப்படினு ஒரு கட்டளையும் ஏத்துண்டேன். அதுக்கப்புறம், அம்மாவுக்கும் கூட, மீன் விளையாடும் குளம் பிடிச்சது.  எனக்கும் எப்படி மீனுக்குப் பொறி, சாதம் எல்லாம் கொடுக்கணும்னு கத்துக் கொடுத்தா’.

நான் கண்களை மூடிக்கொண்டேன். எங்கே  கண்ணுக்குள் ஓடும் அந்தக் கலையாத இன்ப நாட்கள், கண்ணைவிட்டு ஓடிவிடுமோ என்ற பயத்தினாலே.

ஒரு சில நொடிகளுக்குப் பிறகு, என் மனம் முழுக்க ஒரு வித இன்ப அழுத்தம்.

‘அப்புறம்?’  ஸ்ரீநிவாஸின் கேள்வி.

‘பொதுவாய், கீழே இருக்கிற படியில், பாத்திர பொம்மைகள், நாய், பூனை, மான்  அப்படினு மிருகங்கள் எல்லாம் இருக்கும்.

அதுக்கு மேலே இருக்கும் படியில், சிப்பாய், ராஜா, ராணி, மரப்பாச்சி, புரோகிதர்…..’

ஸ்ரீநிவாஸ் குறுக்கிட்டான்.

‘உங்ககிட்ட செட்டியார் தம்பதி பொம்மை இருந்ததா…. எப்பவுமே தலையை ஆட்டிண்டே இருக்குமே…’

‘ஆமாம்.  அதை யார் மிஸ் பண்ணுவா’

‘அந்தப்படிக்கு மேலே,  ரிஷிகள், நாரதர் அப்படி எல்லாம் பொம்மைகள் இருக்கும்.’

அப்படிச் சொல்லிக் கொண்டே கொலு பொம்மைப் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாக வெளியில் எடுத்துக் கொண்டிருந்தேன்.  அங்கே ஒரு தசாவதார செட் இருந்தது.

அதனை எடுத்துக் காண்பித்து, ‘இது நிச்சயமாக இருக்கும். ஆமாம்.  இதுக்கு மேலே எல்லாப் படிகளிலும் சுவாமி பொம்மைகளாகத் தான் இருக்கும்.  எல்லாப் படிகளையும் நிறைச்சு வைச்ச பிறகுதான்,  மத்தியிலே கொஞ்சம் இடம் பண்ணி, அங்கே கலசத்தை அம்மா வைப்பார்.’

ஐயா எங்களைப் பார்த்தார்.

‘இதில ஒரு நியதி இருக்கு, இல்லையா?’ என்றார்.

‘ஆமாம்’  நான் கொஞ்சம் புரியாமலே இழுத்தேன்.

ஐயா தொடர்ந்தார்.

‘கொலு நமது உலகத்தை – அதாவது நமது அனுபவ உலகங்களைக் குறிக்கிறது.  கீழே   நதி, குளம், மலை, மரம் இப்படி இயற்கையின் வளங்கள்.  இயற்கை நமது அனுபவங்களுக்கு எல்லாம்  ஒரு இன்றியமையாத காரணம் அல்லவா’

‘ஆம் ஐயா’

‘இதை ஒட்டி, கடை நிலை உயிர்கள்.  பறவை, மீன், யானை, குதிரை அப்படினு….  அதுக்கு மேலே மனிதர்கள்…  புரிகிறதா?’

நாங்கள் தலையாட்டினோம்.

‘கொலுவில், மனிதர்களை,  வழக்கத்தின் காரணமாக, வர்ண தர்மப்படி வைப்பார்கள்.    வீரர்கள், அரசர், அந்தணர், உழவர் என்று.    செட்டியார் பொம்மையும், இந்த மாதிரி, வணிகம் அல்லது வியாபாரம் செய்வதான மனிதத்தன்மையைக் காட்டுவதற்குத்தான்.   உண்மையிலேயே, மனித உணர்ச்சிகளுக்கு எடுத்துக்காட்டு மாதிரி எல்லாவித பொம்மைகளும் இருக்கும்.  கல்யாணம், யாகம், பள்ளி, குழந்தைகள், பெண்கள் என்று….’

‘ஆமாம், ஆமாம்’ என்றேன் நான்.

‘மனித உருவங்களுக்கு மேலே, சான்றோர்கள், மனிதரிலும் பெரிய தேவர், முனிவர், அவதார புருஷர்கள் எனப் பலவித உருவங்கள் இருக்கும்.’

‘ஆம்,  தசாவதாரம் முதலான பொம்மைகளும் தானே?’

‘ஆம்,  இதற்கு மேலே, கடவுளரின் திருவுருவங்கள் வைக்கப்படும்.  எல்லாத்துக்கும் மேற்படியிலே விநாயகர் உருவம் இருக்கும்.  நமக்கெல்லாம்தான் தெரியுமே, விநாயகர் முழு முதற்கடவுள், அதனால், அவர் உருவத்தை மேற் படியில் வைக்கிறதும் வழக்கம்.  இதெல்லாம் ஒரு வழக்கம் தான்.  அப்படி ஒரு விதி இல்லை.’

ஐயா இப்படிச் சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியானார்.

‘இப்படி எல்லாம் செய்யற நோக்கம்….?’  இது ஸ்ரீநிவாசனின் கேள்வி.

‘நோக்கம்….  கொலு நமது அனுபவ உலகங்களைப் பிரதிபலிக்கிறது என்பதும்,  அதுல பல விதமான வேறுபாடுகளும் இருக்கு என்பதும்,  எல்லாத்தையும் விட முக்கியமா, இந்த வேறுபாடுகளை எல்லாம் கடந்து, எல்லாத்தையும் இணைச்சுண்டும் ஒரு சக்தி இருக்கு, அதுதான் ஆத்மா என்பதும் தான் கொலு வெளிப்படுத்திக் காட்டும்.  இதுதான் நோக்கம்’.

இப்படி ச் சொல்லி, சில நொடிகளுக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.

‘எல்லா உயிர்களிலும் உள்ளே கோர்த்துக் கிடக்கும் அந்த ஒளிதான் ஆத்மா.  அதுதான் மையம்.  அதுதான் பரமாத்மா.’

டேவிட் கேட்டான்.  ‘அப்போ கலசம்?’

‘ம், கொலுவில, மையத்தில் தீபத்துக்குப் பதிலா, கலசமும் வைக்கலாம். கலசமும் ஆத்ம தத்துவத்தைத்தான் தரும்.  கலசத்தின் வெளிப்பகுதி மனித உடல். உள்ளே நிரப்பிய அரிசி, பருப்பு, மஞ்சள், மலர் எல்லாம், நம்முடைய அருங்குணங்கள்.  கலசத்துள்ள நிறைஞ்சு இருக்கிற காற்று வெளிதான் ஆத்மா.  சுதந்திரமான ஆத்மா.’

ஐயா இப்படிச் சொல்லி நிறுத்தினார்.

ஸ்ரீநிவாஸ், டேவிட் இருவரும் பெட்டிகளிலிருந்து பொம்மைகளை  ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.   ஐயாவின் பேச்சிலிருந்தும், பலவற்றை உள் வாங்கிக் கொண்டு இருந்தார்கள் என்றே தோன்றியது.

நான் சொன்னேன்.

‘ஐயா, அப்படினா, மொத்தத்தில், வேற்றுமைக்குள் ஒற்றுமை என்பதுதான் கொலுவின் தாத்பரியம்.’.

‘ஆமாம். அதோட, உலகில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியிலேயும் ஒரு நியதி இருக்கிறது.  கல், மண், மரம், செடி முதலாக, புழு, பூச்சி, மிருகங்கள் என்றும், மனிதர் முதல் தேவர் என எல்லாத் தோற்றங்களிலும்,  ஆத்மாவே ஊடுருவிக் கிடக்கிறது’.

டேவிட் ஐயாவிடம் கேட்டான்.

‘ரொம்ப இன்ட்ரஸ்டிங்,  ஐயா,  தயவு செய்து சொல்லுங்கள்.    அப்போ நாம் யார்?   உள்ளே எரிகின்ற விளக்கா, இல்லை விளக்கைச் சுமக்கின்ற உடலா?’

அங்கே ஒரு அமைதி.

ஸ்ரீநிவாஸும், நானும்  பொம்மைகளை எடுப்பதை நிறுத்திவிட்டு, ஐயா என்ன சொல்லப் போகிறார் எனக் காத்திருந்தோம்.

‘இது ஒரு ஆழமான  கேள்வி, இளைஞனே!, இதற்கு மேலும் ஆழமான ஆய்வு தேவை.’

ஐயா டேவிட்டைக் கூர்ந்து பார்த்தார்.

‘நான் யார் அப்படிங்கிறதுதான் அடிப்படைக் கேள்வி.  அறிவியல், ஆன்மீகம் எல்லாமே கடைசியில் இந்தக் கேள்விக்குத்தான் நம்மை எல்லாம் அழைத்துச் செல்லும்’.

‘நீ இந்தக் கேள்வியை விட்டுடாதே.,  மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இரு. உனக்குள்ளேயே பதில் வரும் வரைக்கும்….’

ஐயா நிறுத்தினார்.

நான் இதனைத்தொடர்ந்து வலியுறுத்த விரும்பவில்லை.  எனக்குத் தெரியும், இந்த மாதிரியான விசாரணைகளின் போது, பெரும்பாலும் ஐயா ஆழ்ந்த அமைதிக்குப் போய் விடுவதுண்டு.  எனக்கு ஐயாவுடன் அப்படி அனுபங்கள் இருக்கின்றன.  எனவே, நான் மீண்டும் மேல்வாரியான உரையாடலுக்குத் திருப்பினேன்.

‘ஐயா, எப்படி கொலு, துர்க்கை அல்லது சக்தி வழிபாடு எனும் நவராத்திரி விழாவுடன் சம்பந்தப்படுகிறது?’

‘நாம் கொலு என்பது என்ன என்று புரிந்து கொண்டோமேயானால் – அதாவது பரந்த உலகங்களும், அதில் வெகுவாக வேறுபட்டு விளங்கும்  பல கோடி உயிர்களும் இருப்பன என்றாலும், இந்த வேறுபாடுகள் எல்லாம் ஆத்மா எனும் ஒன்றின் வெளிப்பாடே  என்பதை அறிந்து கொண்டோம் என்றால் –  நமக்கு ஒரு மிகப் பெரிய கேள்வி பிறக்கிறது.  எப்படி இந்தப் படைப்புகள் எல்லாம் நடக்கின்றன என்று.   இல்லையா?’

‘ஆம் ஐயா’

‘உண்மை என்னவென்றால், படைப்பும், அதன் பலவகையான பிரமிப்பும், ஆத்மாவின் சக்தியினாலேயே ஆகும்.  ஆத்ம சக்தியே படைப்புக்களின் முதற்காரணம்’

‘அது எப்படி  முடியும்?’

‘படைக்கப்பட்ட எல்லாம், படைக்கப்படுவதற்கு முன்,  ஒரு பொட்டன்ஷியல்  அதாவது ஆழ்நிதியாக அடங்கிக் கிடக்கிறது.  அது அடங்கிக் கிடக்கும் இடம்தான் பரமாத்மா, பிரம்மம், சிவம் எனப் பல பெயரிட்டுக் காட்டப்படும்   சத்தியம் ஆகும்.   அதனை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  அதுவே விதை.  எப்படி மரம் விதையிலிருந்து வெளிப்படுகிறதோ, அப்படியே எல்லாப் படைப்புக்களும், பிரம்மத்திலிருந்து வெளிப்படுகின்றன’  என்றார் ஐயா.

‘நவராத்திரி என்பது, பிரம்மத்தின் சக்தியை வழிபடுவதானே’ என்றேன்.

டேவிட் கேட்டான்.

‘நான் சிவராத்திரி என்று கேட்டிருக்கிறேன். சிவனை ஆராதிப்பது. அதற்கும் நவராத்திரிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?’

‘அப்படி ஏதுமில்லை….. ஆனாலும், நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு தொடர்பினைப் பார்க்கலாம்.   சிவராத்திரியில் நாம் பரமாத்மா எனும் சத்தியத்தை,  அதாவது என்றும் இருப்பதைத்  தியானிக்கின்றோம்.  நவராத்திரியில், அந்த பரமாத்மாவின் சக்தியை – எது அப்பரமாத்மாவில் அடங்கி இருக்கும் படைப்புக்களை வெளிக் காட்டுகின்றதோ, அந்த பராசக்தியை – முதற்காரணமான  சக்தியாக வணங்குகின்றோம்.’

இது ஒரு அருமையான பாடமாக எனக்குத் தோன்றியது.  இந்த இரண்டு இளைஞர்களுக்கும், இப்பாடங்கள் எப்படிப் புரிகின்றன எனும் ஆவலும் உள்ளத்தில் இருந்தது.

‘ஏன் சக்தி ஒரு பெண்ணாக எடுத்துக் கொள்ளப்பட்டது?’  இது ஸ்ரீநிவாஸின் கேள்வி.

‘ஆத்மா, பரமாத்மா என்பதில் ஆண் பெண் பேதங்கள் இல்லை. பிரம்மம் என்பது இரண்டற்ற நிலை.  எனினும், அதனை  இருப்பு, வெளிப்பாடு அதாவது existence and expression  என்று பார்க்கும் பொழுது,  ஈஸ்வரன், சக்தி என்றும், பெருமாள், பிராட்டி என்றும்  மனித நோக்கில், ஆண், பெண் என்றும் நாம் கொள்கின்றோம்.’

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில், அன்னைக்கு ‘விமர்ஸ ரூபிணி’ என்பது ஒரு திருநாமம்.  அதாவது, யார், உள்ளதை உள்ளதென உணர்த்துபவளோ அவளே விமர்ஸ ரூபிணி. அப்படியானால், பிரம்மத்துக்கும், தான் எனும் உணர்வு வரவேண்டும் என்றால், அதற்கு சக்தியே காரணம்.

இந்த எண்ணம் என் மனதுக்குள் ஓடியது.

ஐயா தொடர்ந்து கூறினார்.

‘நமக்கெல்லாம் தெரியும்……  கிரியேட்டிவிட்டி என்பது,  ஒரு எண்ண விதையைப் பெற்று, அதனைச் சீராட்டி வளர்த்து, ஒரு ஆக்க பூர்வமான படைப்பாக அளித்தல் என்பது. இல்லையா?’

‘ஆம் ஐயா’

‘இப்ப நான் சொன்னது, தாய்மை என்பதைக் குறிப்பதுபோலவும் இருக்கிறது அல்லவா?  தாய்மை என்பது பெண்மையின் தெய்வீகத் தன்மை.  அதனாலேயே, சக்தியைப்  பெண்ணாக, அம்பாள், தேவி எனக் கொண்டாடுகிறோம்’

‘ஆமாம்.  தாய்மை எனும் ஒரு காரணம் மட்டுமே, பெண்களைப் புனிதமாய் மதிக்கணும்கிறதுக்குப் போதும்!’  இப்படிச் சொன்னான் ஸ்ரீநிவாஸ்.

ஐயா உறுதியாகச் சொன்னார்.

‘எங்கே பெண்களுக்கு அவமரியாதையும், அநீதியும் நடக்கிறதோ, அங்கே அழிவுதான் நிகழும்.  பெண்களைக் கேவலமாகவும், இழிவாகவும் நடத்தும் நிலத்திலெல்லாம் வளர்ச்சியே இருக்காது.  பெண்களையும், தாய்மார்களையும் மதிக்காத, வணங்காத குடும்பங்களும், சமுதாயமும் அழியும்’.

‘ஆண்-பெண் சமத்துவம்,  அல்லவா?’  இது டேவிட்.

‘இருக்கலாம்….  ஆனால்   நான் சொல்வது,  ஆண்-பெண் சமத்துவம் இல்லை எனக் கூட ஒருவேளை காட்டலாம்.  பெண்கள் ஆண்களை விடவும் மேல் எனவும் நினை. ஆம்.  உலக வழக்கில், சமூக, பொருளாதார வாய்ப்புகள் இவற்றில் எல்லாம் ஆண்-பெண் என இரு பாலருக்கும் சமத்துவம் இருப்பது நியதி.  ஆனால் நான்,  ஆண்களைவிடப் பெண்கள் மேலான இடத்தில், சக்தி வடிவமாய் இருக்கின்ற உண்மை நிலையைப் பற்றிப் பேசுகின்றேன்.  இதை உணர்ந்த பெண்கள்தான், குடும்பத்தையும், சமுதாயத்தையும் இணைத்து வளர்க்கின்ற சக்திகளாக விளங்குகின்றார்கள்.’

ஐயா இப்படிக் கூறியவுடன் நான் சொன்னேன்.

‘நவராத்திரி நிச்சயமாக பெண்களுக்கு மரியாதையும், புனிதமும் காட்டுவதற்கு உதாரணமான பண்டிகை.’

நவராத்திரியில், சிறு பெண்களையும், தாய்மார்களையும் உபசரித்து, சக்தி வடிவமாகக் கொண்டாடுகின்றோம்.

அந்தப் பிற்பகல், மெதுவாக, நல்ல விஷயங்களைக் கற்கின்ற நற்பொழுதாக மாறிக் கொண்டிருந்தது.  இந்த இளைஞர்களுக்கும் அது ஏற்புடையதுதானா என யான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

என் யோசனைக்குப் பதில் சொல்வது போல், டேவிட் கேட்டான்.

‘சார், ஏன் சக்தியைப் பல வடிவங்களில் காட்டுகிறார்கள்?’

‘ஏனென்றால்,  பலவிதமான சக்திகள் நமக்குத் தேவை அதனால்தான்…..’

ஐயா தொடர்ந்தார்.

‘ஆனாலும், வேதங்கள், நமக்கு உதவ, சக்தியை மூன்று விதமாகக் காட்டியுள்ளது.  மூன்று விதங்கள் என்பது நமக்குப் புரிவதற்காகத்தான்.  அவற்றுள் வித்தியாசம் எதுவும் இல்லை.’.

‘மூன்று சக்திகள் எவை?’

‘இதற்கு, நாம் முதலில் பிரம்மத்தில் ஆரம்பிப்போம்.  வேதாந்தம் காட்டுவதன்படி, பிரம்மம் ஒன்றேயாக உள்ளது.  வேறு ஏதுமில்லை.

வேறு ஏதுமில்லாதபோது,  தான் எனும் உணர்வுமில்லை. அங்கே  நிரந்தரமான இருப்பும், ஆனந்தமான களிப்பும்தான் இருக்கிறது’.

ஐயா சில நிமிடங்கள் மௌனமாய் இருந்துவிட்டு மீண்டும் சொன்னார்.

‘ஆனால், நம் அனுபவங்களின் நோக்கில் பார்த்தால்,  பலவகை வேறுபாடுகளும், பல படைப்புக்களும் தான் இருக்கின்றன.  நமது அனுபவ உலகங்கள் முரண்பாடு கொண்டவையாகத்தான் இருக்கின்றன.  எனவே, இந்தப் படைப்புகள் எல்லாம் உருவாக ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.’

உரையாடல், மீண்டும், ஆழமாகப் போவதாக எனக்குத் தோன்றியது.

பொம்மைகளைத் துடைப்பதை நிறுத்திவிட்டு, ஐயாவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.

‘காரிய-காரணம் அல்லது விளைவு-மூலம் எனும் நியதிப்படி,  அறிவியல் ஒவ்வொரு விளைவுக்கும் ஒரு மூலத்தை அல்லது காரணத்தைக் காட்டுகின்றது.  நாமும்  அவற்றை, அறிவியற்பாடமாக, அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.  ஆனால், அறிவியலும்,   முதற்காரணம் அல்லது மூல காரணம் என ஆய வரும் போது, அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது இல்லையா!   அதற்கப்புறம் ஒரே நியதிதான் இருக்கிறது. ஒன்று, ஏதோ ஒன்று காரிய-காரணங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருந்து கொண்டு, முதற்காரணத்தை விளைத்திருக்க வேண்டும்.  அல்லது, எல்லாப் படைப்புக்களும், எல்லாக் காலத்திலும், எவ்விதக் காரணமும் இன்றி இருக்க வேண்டும்.

ஆனால், படைப்புகள் மாறிக் கொண்டே இருக்கின்றன.  விளைவு என்பது,  மூலம் ஒன்றின் காலப் பரிமாண மாற்றமே என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.  எனவே,  மூலமில்லாமல் விளைவு இல்லை. ஆகையால், எல்லாம் எப்பொழுதும், காரணம் ஏதுமில்லாமல் இருக்கின்றன என்பதை ஏற்க முடியாது.  அப்படியானால், காரண காரியத்தைக் கடந்த ஒன்று இருக்க வேண்டும், அதன் சக்தியே மற்ற விளைவுகளுக்கு முதற்காரணமாய் இருக்க வேண்டும்.’

ஐயா இப்படிக் கூறிவிட்டுத் தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

அவர் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த நான், ‘ஐயா, அந்த சக்தி எது?’ எனக் கேட்டேன்.

‘அது பிரம்மத்தின் சக்தி; அதுவே முதற்காரணம்; அதுவே விழுப்ப-சக்தி எனும் இச்சா சக்தி. இதனை நோக்க-சக்தி எனவும் புரிந்து கொள்ளலாம்.’

‘புரியவில்லை ஐயா’

‘இச்சா சக்தி என்பது பிரம்மத்தில் எழுந்த முதற் துடிப்பு.  அதுவே ஈரற்ற பிரம்மத்தில் வேறுபாடுகளைக் காட்டும் படைப்புக்களின் மூல காரணம்’.

‘விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா’

‘சரி,  வேதங்களின்படி, பிரம்மத்தின் இச்சா சக்தியினாலேயே,  பிரம்மம் அஹம் என முதல் சப்தத்தை எழுப்பியதாம்.  அஹம் என்பது நான் எனும் பொருள் தருவது.  அதாவது தந்நிலை விளக்கல்.   எப்போது  நான் எனும் எண்ணம் வருகிறதோ, அப்போதே  நானற்ற மற்றவை, அதாவது, நீ, அவன், அவள், அது என மற்ற எல்லாம் உணர்த்தப்படுகிறது.  புரிகிறதா’ – ஐயா கேட்டார்.

பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘வேதங்கள் இதனை மிகவும் அழகாகச் சொல்கின்றன.  அஹம் எனச் சிவம் சொல்ல,  உடனே இதம் எனச் சக்தி சொன்னதாம்.  இதம் என்பதன் பொருள், இவ்வாறு எல்லாம் என்பதாகும்.  பிரம்மத்தின் இச்சையால்,  நான், நீ எனும் பிரிவு காட்டும் படைப்புக்கள்  அப்படியே எழுந்தன.’

நான் சில நொடிகள் சிந்தித்துக் கொண்டிந்தேன். பிறகு கேட்டேன்.

‘ஏன் பிரம்மத்திற்கு அப்படி ஒரு இச்சை வர வேண்டும்?’

‘நாம் யார் அதை அறிய! ஒருவேளை தனியாக இருந்து, பொழுது போகவில்லையோ என்னவோ! அதனாலேயே படைத்து, வளர்த்து, அழித்து, மறைத்து, அருள்கின்ற செயலைச் செய்கின்றது!’

‘ஒரு விளையாட்டு மாதிரியா….’,  ஸ்ரீநிவாஸ் கேட்டான்.

‘ஆம்,  ஒரு சிறப்பான விளையாட்டு. திருவிளையாடல்.  லீலா….  அதனாலேதான் சக்திக்கு லலிதா அப்படினு ஒரு பெயர்.’

‘இச்சா சக்திக்குப் பிறகு, வேறு என்ன ஆயிற்று?’ – இது டேவிட். அவனுக்கு அப்புறம் எப்படி மற்ற சக்திகள் வந்தன என்பதில் அவா.

ஐயா தொடர்ந்தார்.

‘நல்லது,  நாம் இதற்கு நம்முடைய உலக நோக்கில், சக்தியை ஆராய வேண்டும்.  முதலில் நோக்க சக்தியாகிய இச்சா சக்தியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இதுவே எல்லாச் செயலுக்கும் கரு.  புரிகிறதா’

புரிந்த மாதிரி இருப்பதாகத் தலையை ஆட்டி வைத்தோம்.

ஐயா தொடந்து கூறினார்.

‘நோக்க சக்தி இருந்தால் மட்டும் போதாது. நோக்கம் நிறைவுற, ஆக்க சக்தியும் தேவை.  இதுதான் கிரியா சக்தி என்பது.  இது, நோக்கத்தை முடிக்கச் செய்யும் செயல். தகுதியான பொருட்களையும், கருவிகளையும் ஏற்றுச் செய்யும் செயல்.  எனவே,  நோக்க சக்தியும், ஆக்க சக்தியும், நமது எல்லாச் செயல்களுக்கும் அவசியமான சக்திகள்’

ஸ்ரீநிவாஸ் கேட்டான்.

‘ஐயா, சக்தி, படைப்பதற்கு எங்கிருந்து பொருட்களைப் பெறுகிறது?’

‘வேறு எங்கிருந்து பெற முடியும்!  எல்லாம் பிரம்மத்திடமிருந்தே!  ஈரற்ற தான சத்தியத்திலிருந்தே எல்லாம் பிறக்கின்றன.  வேதாந்தப்படி பார்த்தால், சத்தியத்தின் மேலே, ஒரு தோற்ற மாயையாக எல்லாப் படைப்புக்களும் காட்டப்படுகின்றன’.

‘அப்படியானால், எல்லாப் பொருட்களும் God’s particle எனும் இறைபொருளால் ஆனதா? ‘  டேவிட் கேட்டான்.

‘ஆம்,  தெய்வீகத்தன்மையே எங்கும்…’

‘கெட்ட பொருளிலுமா…. அழுகிய பழத்திலுமா…’,  ஆச்சரியத்துடன் ஸ்ரீநிவாஸ் கேட்டான்.

‘ஆம்.  நிச்சயமாக.   எல்லாப் பொருட்களும் மாறிக் கொண்டே இருப்பன.  பொருட்கள்  படைப்பு, மாற்றம், அழிவு, மறுதோற்றம் என ஒரு வளையத்துள் வந்து போகின்றன.  எனவே இப்பொழுது கேடாகத் தெரிவதே மற்றொரு சமயம் நல்லதாகத் தோன்றலாம்.  எனவே, எதிலும் எப்போதும் தெய்வீகத் தன்மையை மட்டுமே பார்.’

நான் வேலையை நிறுத்தி விட்டு ஐயாவைப் பார்த்தேன்.

என் கேள்வியைப் புரிந்தவர் போலத் தொடர்ந்தார்.

‘நோக்கமும், ஆக்கமும்  முழுமை அடைய வேண்டுமென்றால், ஞானம் எனும் அறிவும் அவசியம்.  இதனைத் தருகின்ற சக்தியாகிய ஞானசக்திதான் மூன்றாம் சக்தி’

‘ஐயா, நோக்கம், ஆக்கம், அறிவு இவை மூன்றும் தான் மூன்று சக்திகள் என்று சொல்கிறீர்களா’ – ஸ்ரீநிவாஸ் கேட்டான்.

‘இல்லை.  நான் சொல்வது  நோக்கம், ஆக்கம், அறிவு என்பன விளைவுகள். அவற்றைத் தருவன இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி எனும் மூன்றும்.    வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.’

‘நோக்கம், நோக்க சக்தி – இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?’

‘ஆழ்ந்து சிந்தித்துப்பார்.  நோக்கம் என்பது நோக்க சக்தியால் கிடைத்த பயன்.  நாம் ஒரு போதும், எப்படி, எங்கிருந்து இந்த நோக்கசக்தி, ஆக்கசக்தி, ஞானசக்தி எல்லாம் வருகின்றன என எண்ணிப் பார்ப்பதில்லை.  சொல்லேன்,   கண், காது, மூக்கு எனும் இந்த ஓட்டைகளா, அவற்றில் அறிவைத் தருகின்றன?’

‘ஆம் ஐயா, கண்தான் பார்க்கின்றது’

‘ஒருவன் இறந்து விட்டால், அவனுடைய பார்வைக்கு என்னவாயிற்று?’

‘இறந்தால், கண்ணுக்கு அறியும் சக்தி இல்லை’

‘அப்படியானால், உயிர்த்து இருக்கும்போது, ஏதோ ஒன்று உள்ளிருந்து அறியும் சக்தியைத் தருகிறது, இல்லையா!’

‘ஆமாம்’

‘அந்த ஒளிதான் ஆத்மா. எல்லா உயிர்களிலும் ஊடுருவி இருப்பது. ஆத்மாதான் நோக்க சக்தி, ஆக்க சக்தி, அறிய சக்தி என எல்லாச் சக்திகளையும் சுமந்திருக்கும் சக்திமான்.    ஆத்மா, ஆத்மசக்தி,  பரமாத்மா, பரமாத்மசக்தி….  இரண்டாக இவை காட்டப்பட்டாலும் இரண்டும் ஒன்று.  பிரிக்க முடியாதன.’

‘ஐயா, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பன, பிரம்மத்தில் இருப்பது போலவே, நமக்குள்ளும் இருக்கின்றன என்றா சொல்கிறீர்கள்?’

‘ஆம், இது மிக எளிது. பிரம்மம் எனும் பரமாத்மா ஈரற்றது.  ஆத்மா எனும் யான் உடலினுள் புகுந்து இருக்கிறோம்.  அளவில் தான் வித்தியாசமே தவிர மற்றபடி, தன்மையில் மாற்றமில்லை.    மேலும்,   உடலில் இருக்கும் ஆத்மா, அறியாமையாகிய மயக்கத்தில் முழ்கி இருக்கிறது. அத்தகைய மயங்கிய உயிரையே ஜீவன் என அழைக்கிறோம்.’

‘யார் அத்தகைய மயக்கத்தைக் கொடுத்தது?’

‘அறியாமை எனும் மயக்கம் ஒரு அண்டம் தழுவிய போர்வை. அதற்கு மாயை என்பது பெயர்.  மாயை என்பது சக்தியின் வடிவமே.  பலவாகவும், பிரிவாகவும் படைக்கப்படும் உலகங்கள் இல்லை என்றால்,  விளையாட்டு ஏது!  அதனால், மாயையால் விளைத்த அறியாமை ஒரு இழுக்கு அல்ல.  ஆனால், நான் யார் எனும் உண்மையை, ஒருவன் உணர வேண்டுமானால், இந்த அறியாமையை அகற்ற வேண்டும்’

நான் கேட்டேன், ‘ஐயா,  அப்படியானால், நவராத்திரி என்பது முச்சக்திகளை ஆராதிக்கும் பண்டிகை என்பது தானே?’

‘கண்டிப்பாக!  ஆத்மாவாகிய தன்னை உணர்தல் மிகவும் கடினம் என்பதாலேயே, படிப்படியாக அப்பக்குவத்தைப் பெறும் வகையில், நமது கலாசாரத்தில், பண்டிகைகளும், பாடங்களும் இருக்கின்றன.

மேலும், வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு என்பதால்,   மகிழ்ந்து  அனுபவித்தல் என்பதே வாழ்வின் நோக்கமாகவும் ஆகிறது.  எல்லாமும் ஏற்கப்படவேண்டும். வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க வேண்டும்.  வாழ்வதே அனுபவிக்கத்தான்’.

ஐயா தொடர்ந்தார்.

‘ஒருவேளை, உண்மையான இன்பம் எது,  நிலையான சுகம் எது என்று தெரிந்து தெளிந்து நடப்பதற்கு, நாம் அறிவையும் அனுபவத்தையும் பெற வேண்டியிருக்கும்.  ஆனாலும், வாழ்க்கை ரசித்து அனுபவிப்பதற்கே எனும் கொள்கையில் எப்போதும் மாற்றம் இல்லை’.

இதனைக் கேட்டபோது, மகிழ்ச்சி தோன்றியது! எவ்வளவு இனிமை!  வாழ்க்கை வாழ்வதற்கே! இரசிப்பதற்கே!  இப்படி அல்லவா ஆன்மீகம் இருக்க வேண்டும்!

ஐயா தொடர்ந்தார்.

‘பண்டிகைகள் கொண்டாட்ட விழாக்கள்.  அதனால் நவராத்திரியின் முக்கிய நோக்கமே சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதுதான்.  அதனால்தான்  ஆராதனைகள், அலங்காரங்கள், ருசியான உணவுகள், வண்ண ஆடைகள்,  இசை, நடனம் என  இறைவழிபாடும், உறவுகளுடன் உடன்பாடுமாக நாம் ஆனந்திக்கிறோம்.’

ஸ்ரீநிவாஸ் சொன்னான்.  ‘ஆமாம், ஆமாம்.  நவராத்திரியில், எல்லாப் பெண்களும் மிக அழகாக இந்தியன் டிரெஸ் எல்லாம் பண்ணி, சந்தோஷமாக இருக்கா.  பார்க்கவும் நன்னா இருக்கு!’

‘ஆமாம், குறிப்பா, குச்சி எல்லாம் கையில் பிடிச்சு டான்ஸ் ஆடும் போது’ – இது டேவிட்..

இளைஞர்களின்  பதிலைக் கேட்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

‘ஐயா, புரிகிறது.  அதனால்தான், துர்க்கா அல்லது இச்சா சக்தி என மூன்று இரவிலும், லக்ஷ்மி அல்லது கிரியா சக்தி என மூன்று இரவிலும், சரஸ்வதி அல்லது ஞான சக்தி என மூன்று இரவிலும் நவராத்திரியில் பூஜை செய்கிறோம்’.

‘ஆம்’

‘ஏன் மூன்று மூன்று இரவுகள் செய்யணும்?’ – டேவிட் கேட்டான்.

‘யாருக்குத் தெரியும்…..   அதிக நாள், அதிக மகிழ்ச்சி – அப்படி இருக்கலாம்’.

ஐயா சொன்னார்.

‘பத்தாம் நாள், நாம் நவராத்திரி தியான அறிவு பெற்றவராக,   அதாவது, முச்சக்திகளும் நமக்குள்ளேயே விளங்குகிறது, அவற்றின் வெளிப்பாடு நம்மை நல்ல வழியிலே செலுத்தி வெற்றியடையச் செய்யும் எனப் பிரார்த்திக்கிறோம்.  வெற்றிதரும் பத்தாம் நாள் எனும்படியாக , விஜய தசமி எனும் இந்த நாளில்,   படிப்பு, வேலை எனும் புதிய முயற்சிகளில் தொடக்கத்தைச் செய்கிறோம்’.

ஐயா நிறுத்தினார்.

சில நிமிடங்களுக்குப் பிறகு,  புரிந்து கொண்டதைத் தெரிவிக்கும் வகையாகச் சொன்னேன்.

‘ஐயா,  கொலு என்பது வாழ்க்கையின் வண்ணத்தை, வகை வகையான அனுபவங்களை எடுத்துக் காட்டுவது. அவற்றின் ஊடே கோர்த்து இலங்குவது, ஆத்மா எனும் உள்ளொளி. அதுவே பரமாத்மா எனும் பேரொளி. அதுவே கொலுவின் மையம்.  அந்த ஆத்மாவின் சக்தியே முச்சக்திகளாக நாம் வழிபாடு செய்வது. அதுவே சக்தி பூஜா. அப்படிச் செய்வதால், நமது சக்தி பெருகி, நல்வழியில் நம்மைச் செலுத்தி, உலக வாழ்வில் அடைய வேண்டிய நல்ல அனுபவங்களை எல்லாம் நமக்குக் கொடுக்கும். சரிதானே’

ஸ்ரீநிவாஸ் சேர்ந்து கொண்டான். ‘ஆமாம். ஆனால்  இதெல்லாம், நாம் எஞ்சாய் பண்ணிச் செய்யணும்’.

‘அதுவே மிக முக்கியம்’ என்றார் ஐயா.

டேவிட் மீண்டும் கேட்டான்.

‘ஐயா, எனக்கு ஒரு மாதிரி புரிகிறது.  இந்த அறிவைப் பெற்றால் போதாதா?  எதற்காக  இந்த மாதிரி பூஜை, சடங்கு எல்லாம் செய்ய வேண்டும்? அறிவு பெற்ற பின்னும் இந்தச் செயல் எதற்கு?’

ஐயா சொன்னார்.

‘அனுபம் ஒன்றே வாழ்க்கையாகும்.  அறிவு அனுபவத்துக்கு உதவுமே ஒழிய, அறிவு மட்டுமே அனுபவத்தைத் தராது. அறிவு மட்டுமே இருந்தால், அது கட்டாந்தரையில் போட்ட விதை மாதிரிதான்.  இருக்கும் ஆனால் பயன் எதுவும் தராது.  ஆனால் பக்தி எனும் தண்ணீர் விட்டால், அது விளைந்து அனுபவமாகிய பலனைத் தரும்.  இறைவழிபாடு எனும் பக்தியும், அறிவுமே உண்மை அனுபவத்திற்கு ஆதாரம்.’

‘இறைவழிபாடு உண்மையில் பயன் தருவது தானா?’ – டேவிட் இக்கேள்வியைக் கேட்டான்.

ஆனால், ஐயா, புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் படிக்க உட்கார்ந்தார்,  போதும் இந்தப் பேச்சு என்பது போல.

எனக்குத் தெரியும்.  இன்றைக்கு இது போதும்.  ஏற்கனவே ஜீரணிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன.    நிச்சயமாக, இறைவழிபாடு  என்பது பற்றி மற்றொரு முறை ஐயாவின் உரையாடலில் கேட்கலாம்.

ஒரு புதிய புரிதல் ஏற்பட்டது போல மனதில் ஒரு நிறைவு.  டேவிட் அருகில் வந்து, ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து கொலு பொம்மைகளைத் துடைத்தான்.  எனக்கும் உள் நிறைவு. கொலுப் படியாகப்போகும் மரப்படிகள், என் முன்னே, மரணமிலாப் பெருவாழ்வுக்குக் கூட்டிச் செல்லும் மாணிக்கப் படிகளாகத் தோன்றின.  அவற்றை மெதுவாகத் தடவிப் பார்த்தேன்.  உமா, குழந்தைகள் திரும்பி வருவதற்குள், இவற்றை எல்லாம் சீர்படுத்த வேண்டும்.

மீ. ராஜகோபாலன்

17 Sep 2014

Related Posts

Share this Post