Prata Smarana Stotra
பாடல் – 1
सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् l
यत् स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं
तत् ब्रह्म निष्कलमहं न च भूतसंघः ll १ ll
ஸச்சித்ஸுக₂ம் பரமஹம்ஸக₃திம் துரீயம் |
யத் ஸ்வப்னஜாக₃ரஸுஷுப்திமவைதி நித்யம்
தத் ப்₃ரஹ்ம நிஷ்கலமஹம் ந ச பூ₄தஸங்க₄: || 1 ||
அகத்துக ளில்லா முழுதை
துய்விழி கனவாந் துயிலைத்
தொடரனு பவமாந் திறனை
உய்யுள வுணர்வாய் இன்பம்
உறுமுனித் துரீய நிலையை
வையுள வொளியான் தன்மை
வைகறை நினைக்கின் றேனே
கருத்து:
அதிகாலையில் – உள்ளத்தில் தெளிவாகப் பிரகாசிப்பதும், எப்போதும் உள்ளதாயும், முழு அறிவாயும், அளவற்ற ஆனந்தமாயும், பரம ஹம்ஸர்களாகிய ஞானியர்கள் அடையும் துரீயம் எனும் மேலான உணர்வு நிலையிலே விளங்குவதாயும், (எல்லா உயிர்களும் அடையும்) விழிப்பு, கனவு, ஆழ்துயில் ஆகிய (மூன்று) அனுபவங்களையும் கடந்து, அந்த அனுபவங்களுக்கு எல்லாம் ஆதாரமாய், ஒரு தொடர்பினைக் கொடுக்கின்ற சாட்சியாகக் கோர்த்து விளங்கும் பிரம்மே அன்றி, (ஐந்துவிதமான) பூதப் பொருட்களின் தொகுப்பு அற்றதுமான – (‘நான்” எனும்) ஆத்ம தத்துவத்தைச் சிந்திக்கின்றேன்!
முதல் வரி:
प्रात: (ப்ராத:) = அதிகாலையில்; स्मरामि (ஸ்மராமி) = நினைக்கின்றேன்; हृदि (ஹ்ருதி₃) = இதயத்தில்; संस्फुरद (ஸம்ஸ்பு₂ரத்) = தெளிவாக ஒளிர்கின்ற; आत्मतत्वं (ஆத்ம தத்வம்) = நான் எனும் ஆன்மா அறிவு
இரண்டாம் வரி:
सत् (ஸத்) = உள்ளது, நிலையானது; च्चित् (சித்) = உணர்வு, பேரறிவு; सुखं (ஸுக₂ம்) = பேரின்பம்; परमहंसगतिं (பரமஹம்ஸ க₃திம்) = பரம ஹம்ஸர் எனும் யோகியர் அடையும் ஒரு மேலான நிலையாகிய; तुरीयम् (துரீயம்) = துரீயம் எனும் மேலான விழிப்பு நிலை.
மூன்றாம் வரி:
यत् (யத்) = எது; स्वप्न: (ஸ்வப்ன) = கனவு; जागर: (ஜாக₃ர) = வெளியுலக அறிவு; सुषुप्त: (ஸுஷுப்தி)= ஆழ்துயில் நிலை; अवै इति (அவை இதி) = அறிகின்றதோ; नित्यं (நித்யம்) = எப்பொழுதும் தொடர்ச்சியாக;
நாலாம் வரி:
तत् (தத்) = அது; ब्रह्म: (ப்₃ரஹ்ம) = பிரம்மம்; निष्कलम (நிஷ்கலம்) = பிரிவற்ற முழுமையான; अहम् (அஹம்) = ஆன்மாவாகிய யான்; न च भूतसंघः (ந ச பூ₄தஸங்க₄:) = மேலும், பூதப் பொருட்களின் தொகுப்பு அல்ல;
குறிப்பு:
முதற் பாடலின் முதல் வரியிலே, நம் இதயத்தில் மின்னலாக ஒளிர்கின்ற, “நான் எனும் உணர்வு” என்பதான “ஆத்ம தத்துவம்”, நம்மால் அதிகாலையிலே சிந்திக்கப்பட வேண்டும் எனும் அறிவு காட்டப்பட்டது.
தெளிவும், எளிதில் மனதிற்குள் பதிப்பிக்கும் வலிவும் தருகின்ற காலம், அதிகாலை நேரம். அதிகாலை என்பதன் முக்கியத்துவத்தை முகவுரையிலேயே பார்த்திருக்கிறோம். எனவே இவ்வரியின் மற்ற சொற்களை ஆராய்வோம்.
சம்ஸ்கிருதச் சொல்லான “ஹ்ருதயம்” என்பது “ஹ்ருத் + அயம்” அதாவது, எது நமக்குள்ளே ஒரு மையமாக இருக்கின்றதோ, எவ்விடத்தில் “நான்” எனும் உணர்வு முதலாக எல்லாம் தொடங்கி அடங்குகின்றதோ, அவ்விடத்தைக் குறிப்பது.
ஹ்ருதயம் நமது மையம், அது துல்லியமானது. உடலுள் அது எங்கே இருக்கிறது என்பது அறியப்பட முடியாதது. எனினும் ஒரு குறிப்புக்காக, ஹ்ருதயம் நமது வலது மார்பில் இருப்பதாக அனுமானிக்கும்படித் திருமறைகள் சொல்கின்றன. தமிழில், இச்சொல்லை, “இதயம்” என மொழி பெயர்த்தால், அது நம்முடைய தசைகளால் ஆன இதய உறுப்பினைக் குறிப்பிடுகிறதோ எனத் தோன்றிவிடக் கூடும். எனவே இதனை “உள்ளம்” அல்லது “நெஞ்சம்” எனக் கொள்வோம். அந்த உள்ளம்தான் நமது மையம். அங்கிருந்துதான் “நான்” எனும் முதல் உணர்வு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
“ஸ்மராமி” அல்லது “நான் சிந்திக்கின்றேன்” என்றால், எதைச் சிந்திக்கின்றேன்? உள்ளத்துள், “ஸம்ஸ்பு₂ரத்” அதாவது, நன்றாக ஒளிவிட்டுத் தெரித்த “நான்” எனும் உணர்வைத்தான் சிந்திக்கிறேன்.
ஆழ்துயிலில் இருக்கும் பொழுது, இல்லாத இந்த “நான்” இப்போது எப்படி முளைத்தது! அப்படி முளைத்த இந்த “நான்தானே” சிந்தித்துக் கொண்டும் இருப்பது! அப்படியானால், எது சிந்தனை செய்கின்றதோ, அதனைப்பற்றியே சிந்திப்பதுதான் ஆத்ம தத்துவம் என இங்கே சுட்டிக் காட்டப்பட்டது.
ஆத்ம தத்துவத்தைச் சிந்தனையால் அறிந்துணர்வதை முதலாக எடுத்துக் கொண்டு, முதற்பாடலின் முதல் வரியில் பகவான் ஆதி சங்கரர் “ஸ்மராமி” எனக் காட்டி இருக்கிறார்.
நான் யார்?
இந்தக் கேள்விதான் ஆத்ம தத்துவ விசாரம். அதாவது நான் எனும் உணர்வின் தன்மையை ஆராயச் செய்யும் கேள்வி. உபநிடதங்களில் இக்கேள்வியின் ஆய்வு வெகுவாக நடந்திருக்கிறது. இந்த ஒரு கேள்வியை வைத்தே வேதாந்த சாரமாகிய மறைபொருள் உண்மையை உணர்ந்து, உணர்த்தி அருளியவர் பகவான் ரமண மஹரிஷி ஆவார்.
பகவான் ஆதி சங்கரர், இப்பாடல்களில், ஆத்மாவின் தன்மையைப் பற்றிய முடிவினை மட்டுமே தந்திருக்கிறார். வேதாந்த விளக்கங்கள் எல்லாம் தரப்படாமல், ஆத்மாவின் தன்மை என்ன என்பதை இந்த மூன்று பாடல்களிலும், ஒரு சில அடைமொழிகளைக் கொடுத்து, சுட்டிக் காட்டுகின்றார்.
வேதாந்த அறிவை அடைந்தவர்களுக்கு, அந்த அடைமொழிச் சொற்களைக் கேட்டாலே, அதன் ஆழமான பொருள் விளங்கிவிடும். எனைப் போன்ற குறை மதி கொண்டவர்களுக்கு, அது எளிதல்ல. எனவே, ஆத்மாவின் தன்மையாக, ஆதி சங்கரர் காட்டுகின்ற அடைமொழிகளுக்கு என்ன ஆதாரம் என்பதைப் பாடல்களின் குறிப்புக்களாக, சுருக்கமாக ஆராய்ந்து, நாம் சுவையான சில உண்மைகளையும் புரிந்து கொள்வோம்.
அனுபவம்தான் வாழ்க்கை என்று பார்த்தோம். அனுபவம் என ஒன்று இருக்க வேண்டுமானால், அனுபவிக்கிறோம் எனும் ஒரு உணர்வும் இருக்க வேண்டும். அதாவது அனுபவ அறிவு இருக்க வேண்டும். அப்படியானால், “நான் அனுபவிக்கிறேன்” என்றால், அந்த அனுபவிக்கும் நான் யார்?
உடல்தான் அனுபவிக்கிறது என்று வைத்துக் கொண்டால், இந்த உடல்தான் நான் என்று ஆக வேண்டும். ஆனால் உடலா அனுபவிக்கிறது, இல்லையே! உடல் ஒரு கருவியாகத்தான் இருக்கிறதே தவிர, உடலுக்கு அனுபவிக்கும் அறிவு என்பது இயற்கையாக இல்லை. உடல் ஒரு சடப்பொருள். ஒருவரின் தூக்கத்திலும், மரணத்திலும், உடலின் சடத்தன்மை தெளிவாகத் தெரிகிறதே! அப்படியானால், உடல் என்பது நானாக இருக்க முடியாது. “என்னுடைய உடல்” என்று நான், உடலை எனது உடமையாகக் கொள்ளலாமே தவிர, “உடல்தான் நான்” என்பது ஒருபோதும் உண்மையாக முடியாது.
அனுபவங்கள் நமது புலனறிவில், மனதில் தெரிகின்றன. அப்படியானால், புலனறிவோ, மனமோதான் நானாக இருக்க முடியும் எனவும் நாம் எண்ணக்கூடும். ஆனால் புலனறிவு, மனம் இவைகளும் தானாக ஒளிர்வதில்லை. ஆழ்ந்து உறங்கும் போது, நமது புலனும் மனமும் ஒளி இல்லாமல் அடங்கிவிடுகின்றன. அவை மீண்டும் செயலாற்ற, வேறு எங்கிருந்தோ அறிவொளி தரப்படுகிறது. ஆகவே சடமான மனமோ, புலனோ நானாக இருக்க முடியாது. “என் மனம்”, “என் புலன்” என அவைகளையும், என்னுடைய உடமையாக நான் கொள்ளலாமே தவிர, நான் அவை அல்ல.
ஆனாலும் உறங்கி எழும்போது, உறங்கினேன் எனும் அனுபவ சாட்சியாக ஏதோ ஒரு அறிவு சொல்கின்றது. மனமும், புலனும், உடலும் சடமாய் இருக்கும் உறக்க அனுபவத்தையும், முற்றும் அறிந்தபடி இருக்கும் அந்த அறிவுதான் எல்லா அனுபவங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த அறிவு விழிப்பு, கனவு, துயில் எனும் நமது மூன்று அனுபவங்களுக்கும் பின்னால் வெறும் சாட்சியாக இருக்கிறது. அப்படியானால், அனுபவிக்கின்ற நான், ஒரு அந்த அறிவின் வடிவமாகவே இருக்கின்றேன். அதாவது, நான் “சித் ஸ்வரூபம்”.
சம்ஸ்கிருதத்தில் “சித்” என்றால் அறிவுணர்வு. “ஸ்வரூபம்” என்றால் உருவம். “நான் யார்” எனும் விசாரணைக்கான முதல் பதிலாக, “நான் சித் ஸ்வரூபம்” அதாவது, “நான் அறிவு வடிவம்” என்பது இதனால் சுருக்கமாகக் காட்டப்பட்டது. “சித்” எனும் அறிவுவடிவம் ஆத்மாவிற்கு முதல் அடைமொழி.
மேலும் உலகில் நாம் எதனைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றாலும், அப்பொருளைப் பற்றிய ஏதேனும் ஒரு அறிவு நமக்கு வேண்டும். உதாரணமாக ஒன்றின் பெயர், உருவம், சுவை, வாசனை, தொடும் அனுபவம் என ஏதேனும் நமக்கு இருந்தால்தான், அப்பொருளைப் பற்றி நம்மால் சிந்திக்க முடியும். ஆனால் “நான்” எனும் உணர்வுக்கு இவை ஏதும் தேவையில்லை. இருட்டில் இருந்தாலும், “நான் இருக்கிறேன்” எனும் உணர்வு நமக்கு இருக்கின்றதே! எனவே உருவமற்று, புலனால் அடைய முடியாத தன்மையுடன், “நான்” எனும் ஆத்மா இருக்கின்றது.
உருவற்றது என்றால் என்ன பொருள்? உருவம் என்பது இருந்தால், அது ஒரு எல்லைக்கு உட்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், உருவம் என்பதைக் காட்ட நீள, அகல, உயர வேறுபாடுகள் தேவையல்லவா? எனவே எந்த ஒரு உருவத்திற்கும், எல்லை என்பது இருந்தாக வேண்டும். ஆனால் ஆத்மா உருவற்றதாய் இருக்கிறது என்றால், அது எல்லையற்றதாய், முடிவற்றதாய் இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் “அந்தம்” என்றால் முடிவு, “அனந்தம்” என்றால், முடிவற்றது. எனவே ஆத்மா என்பது அனந்தமாய் இருக்கிறது.
மேலும் ஒரு பொருளுக்கு எல்லை இல்லை என்றால், அது முற்றிலும் சுதந்திரமானது என்பதும், முற்றிலும் நிறைந்தது என்பதும் விளங்கும். முழு நிறைவு தான் பேரானந்தம், உண்மைச் சுகம். அப்படியானால், ஆத்மாவின் தன்மை, முழுமையான “சுகம்”. இதுவே இரண்டாம் அடைமொழி. ஆத்மா அறிவுணர்வாயும், எல்லையற்ற ஆனந்தமுமாய் “சித்சுகம்” என விளங்குகிறது.
“விளங்குகிறது”, “இருக்கிறது”, “உள்ளது” என்றெல்லாம் ஆத்மாவைச் சொன்னால், கால, தேச, குண மாற்றங்கள் எதுவும் இல்லாமல் ஆத்மா நிலையாக இருக்கிறது என்பதாகும்.
காலத்தினால், தூரத்தினால், குணத்தினால் மாற்றங்களை அடைந்து கொண்டே இருக்கும் எந்த ஒரு பொருளும், எப்பொழுதும் நிலையான ஒரு உண்மையாக இருக்க முடியாது. எனவே இம்மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்கின்ற ஒன்றே உண்மை. அதுவே “சத்” என சம்ஸ்கிருத அடைமொழியால் அழைக்கப்படுவது. எனவே ஆத்மா, “சச்சிதானந்தம்” என எப்பொழுதும் உள்ளதாய், முழுதுணர்வாய், முழுநிறைவாய் விளங்குகின்றது. இதனையே இரண்டாம் வரியில் ஆத்மாவின் தன்மை “சத்சித்சுகம்” எனக் காட்டினார் பகவான் ஆதி சங்கரர்.
மேலும் ஆத்ம தத்துவத்தை மட்டுமே நாடி, அதனை நன்கு உணர்ந்த ஞானியருள், மிகவும் உயர்ந்தவன் யாரெனில், அடைந்த ஆத்ம ஞானத்திலேயே எப்போதும் நிலையாக இருப்பவன். அப்படி இருப்பதுதான் “ஞான நிஷ்டை” எனப்படுவது. அது ஒரு பெரும் தவம். ஏனெனில் தூய அறிவைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல, அந்த அறிவிலேயே ஒழுகி இருப்பதுதான் மிகவும் கடினம். அத்தகைய நிஷ்டைகளை அடைந்த ஞானிகளுக்குப் “பரமஹம்ஸன்” என்று பெயர். அவர்கள் எப்போதும் ஆத்மனை உணர்ந்து, ஆத்ம நினைவிலேயே ஆழ்ந்து இருப்பார்கள். அவர்களது அந்த மேலான நிலை, நமக்கு எல்லாம் ஒரு சாதாரண உறக்கத்தைப் போலத் தெரிந்தாலும், அது உறக்கமல்ல, ஒப்பறிய சமாதிநிலை. இது “யோக ஸ்மாதி” எனும் மனதை லயப்படுத்தி இருக்கின்ற நிலையும் அல்ல.
“மனோலயம்” என்பது, மனதினை ஏதோ ஒன்றில் மட்டுமே நிலைப்படுத்தி மனத்தின் சேட்டைகள் ஏதும் இல்லாமலிருக்கும் நிலை. உறக்கம் என்பதும் “மனோலயம்”தான். யோகம், தியானம் முதலிய பயிற்சிகளால், இப்படி மனோலயமாய் இருக்கும்பொழுது, நாம் ஆசைகள் இல்லாமலும், செயல்கள் இல்லாமலும் இருக்கிறோம். அதனால், வினைப்பளுவும், அதன் விளைவான “சம்சாரம்” எனும் துயரமும், மனோலயத்தின் போது நமக்கு ஏற்படுவதில்லை. எனவே மனோலயம் அடைவது முக்கியமான படிதான்.
ஆனால், எப்படி உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் பழையபடியே நாம் மீண்டும் உலகில் இயங்குவோமோ, அதுபோலவே “மனோலயத்தால்” மட்டுமே இருக்கும் யோக சமாதி முடிந்தால், நாம் முந்தைய குணங்களால், முன் போலவே உழலும் நிலைக்குத் திரும்பி விடுவோம். உதாரணமாக, கோபத்தை விலக்காத ஒருவன், மனோலயம் கற்று யோக சமாதி அடைந்தாலும், யோக சமாதி முடித்து எழுந்தால், மீண்டும் கோபத்தைத்தான் கொள்கிறான். எத்தனை புராணக் கதைகளில், தவத்திலிருந்து எழுந்த யோகிகள், தவறான செயலைச் செய்வதையும் படித்திருக்கிறோம்!
ஆனல், இங்கே பரமஹம்ஸர்களின் கதி எனக் காட்டப்பட்ட நிலை, “மனோலயம்” என்பதால் அல்ல, அது “மனோநாசம்” என்பதால். மனம் அழிந்த நிலை என்பதால்! மனம் எப்படி அழியும்? மனதை அழித்தால், உணர்வு எப்படி வெளிப்படும்! இதுவும் மிகவும் நுணுக்கமான கருத்து.
“மனோநாசம்” என்பதன் உண்மைப் பொருள், மனதில் இருக்கும் “அஞ்ஞானம்” எனும் அறியாமையை விலக்குதல். இந்த அறியாமை, தெரியாமை என்பதையும், ஒன்றை மற்ற ஒன்றாகத் தவறாகத் தெரிந்திருத்தல் என இரண்டு தவறுகளையும் குறிக்கும். இந்த “அஞ்ஞானம்” ஏற்படுத்தும் பாதிப்புக்கள்தான் “அத்தியாசம்” எனும் மயக்கங்கள். வேற்றுமையைப் பெரிதுபடுத்தி, பொய்யை உண்மை என்று இருத்தலே “அத்தியாசம்” கொடுக்கும் அடையாளங்கள்.
எனவே, ஆத்மாவே உண்மை எனவும், மற்றதெல்லாம், அதன்மேல் ஏற்றிவைக்கப்பட்ட மித்யா எனவும் அறிந்து கொண்டவனுடைய மனம், லயப்பட்டாலும், அல்லது லயப்படாமல் உலகில் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு உலக வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றில் பற்று ஏதும் இல்லாமல் இருக்கும். எல்லாவற்றையும் பார்த்தாலும், அவற்றால் எந்தவிதப் பாதிப்பும், அவற்றின் மேல் எந்தவிதப் பந்தமும் இல்லாமல் இருக்கும். அந்த நிலையில்தான், மனம் என்பது நாசமடைந்து விட்டது. அது வெறும் காட்சிக்கான சன்னலைப்போல, ஆத்மாவின் சாட்சிக்கு ஏதுவாக இருக்கிறது. எல்லாம் அறிந்து, அந்த அறிவிலேயே ஆழ்ந்து இருக்கும் அந்த உயரிய நிலைதான் super-conscious-state எனும் பரஞான நிலை. அதுவே “துரீயம்”. அதுவே பரம ஹம்ஸர்களின் குறிக்கோள். அந்த மேலான பரஞான நிலையைத்தான் “யானும் அதிகாலையில் சிந்திக்கிறேன்” என்று பாடலின் இரண்டாம் வரியில் காட்டப்பட்டது.
நமக்கு ஏன் அத்தகைய துரீயம் எனும் அனுபவ நிலை கிடைப்பதில்லை? இதற்கு, வேதாந்தம் தரும் பதில் மிகவும் வியப்புத் தருவதாக இருக்கிறது.
ஆத்மாவை உணர்ந்து, அதிலேயே இருக்கின்ற சுக அனுபவத்தை “ஆத்மானுபவம்” அல்லது “பிரம்மானுபவம்” எனலாம். அந்த அனுபவம் நம் எல்லோருக்கும், எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது! ஒரு சில நொடிகளாவது, நம்மில் பலரும் அதனை அவ்வப்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அதுதான் ஆத்மானுபவம் என உணருகின்ற அறிவோ, அதனையே மேலும் பிடித்துக் கொள்ள வேண்டும் எனும் உறுதியோ நமக்கெல்லாம் இல்லை. “நான் யார்” எனும் தொடர் சிந்தனையின் உறுதியினாலேயே, நம்மாலும் ஆத்மானுபவத்தைப் பிடித்துக் கொள்ளும் வலிமையும், உணர்ந்து கொள்ளும் அறிவும் கிடைக்கும். இதனைக் காட்டுவதே இப்பாடல்களின் குறிக்கோள்.
“துரீயம்” எனும் இந்த மேலான நிலை என்ன, அதை எப்படி அடைவது எனத் தெரிந்து கொள்ள, முதலில் நாம், நமக்குக் கிடைக்கும் தினசரி அனுபவ நிலைகளைப் பற்றிச் சற்று சிந்திக்க வேண்டும். இதுவே மூன்றாம் வரியில் சுட்டிக் காட்டப்பட்டது.
ஆத்ம தத்துவத்தை விளக்க, வேதாந்தம் எடுத்துக் கொள்ளும் பல வழிகளில் ஒன்று, நமது அனுபவங்களை மூன்று விதமாக ஆராய்ந்து உணர்த்துதல். இது “பிரஹதாரண்ய” மற்றும் “சாண்டோக்ய” உபநிடதங்களில் விரிவாகவும், ஆழமாகவும் தரப்பட்டுள்ளன.
விழிப்பு-நிலை என்பது நாம் விழித்துக் கொண்டு உலகில் செயலைச் செய்தும், அனுபவித்துக் கொண்டும் இருக்கும் உலக அனுபவ நிலை. இது சம்ஸ்கிருதத்தில் “ஜாக்ரதா” எனப்படுகிறது. இந்த விழிப்பு நிலையில், உலகை அனுபவிக்க, நம் உடலும், மனமும் முதன்மைப் படுத்தப்பட்டு இருக்கின்றன. உலகத்தில் எல்லா அனுபவங்களையும், மனதாலும், உடலாலும்தானே ஏற்கிறோம்! உடலும், புலனும், மனமும், உலகில் பிறந்த நமக்கு, அனுபவங்களைக் கொண்டு சேர்க்க அளிக்கப்பட்ட கருவிகள்.
கனவு-நிலை என்பது நமக்கெல்லாம் ஏற்படும் மற்றொரு அனுபவமாகும். உறங்கும்போது சில சமயம், மனம் மட்டும் தொடர்ந்து விழித்துக் கொண்டே இருந்து, எண்ண ஒட்டங்களை எழுப்பி, கனவு எனும் அனுபநிலையைத் தரும். சில சமயங்களில், விழிப்பு-நிலையிலும், உடலும், புலனும் அயர்ந்திருக்கும்போது, “பகல் கனவு” ஏற்படுவதும் உண்டு. இவ்வாறு மனதில் மட்டுமே விளங்கும் கனவு அனுபவம், “ஸ்வப்ன:” எனப்படுவது. அத்தகைய கனவு அனுபவத்தில் நம்முடைய மனம் மட்டுமே இருக்கிறது. வெளியுடலோ, புலனறிவோ இல்லை.
விழிப்பும் இன்றி, கனவும் இன்றி, ஆழ்ந்து உறங்கும் நிலையில், அதாவது ஆழ்துயிலில், உடலும் மனமும் முற்றும் ஒய்ந்து விடுகின்றன. அப்போது புலன் அறிவும் இல்லை. “நான்” என நாம் பொதுவாக எதனை அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ, அந்த ஆணவமும் இல்லை. அப்போது, ஒரு அறியாமைதான் விளங்குகிறது. இந்த ஆழ்துயில் அனுபவ நிலையை “ஸுஷூப்தி” என வேதாந்தம் அழைக்கிறது.
விழிப்பு, கனவு, ஆழ்துயில் என இவ்வாறு நமது அனுபங்களை மூன்றாகப் பிரித்த வேதாந்தம், இந்த ஒவ்வொரு அனுபவங்களையும் அனுபவிக்க, ஒவ்வொரு உடலை நமக்குள் முதன்மைப் படுத்துகின்றது. இப்படிச் செய்வது எல்லாம், இவ்வனுபவங்களை நாம் ஆராய்ச்சி செய்ய உதவத்தான்.
உதாரணமாக, வல்லுடல் அல்லது “ஸ்தூல சரீரம்” என்பது நம்மால் பார்க்கப்படுகின்ற தசை, எலும்பு எனக் கலந்து படைக்கப்பட்ட நம்முடைய உடல். மெல்லுடல் அல்லது “சூக்ஷ்ம சரீரம்” என்பது யாராலும் பார்க்கப்பட முடியாத, ஆனால் நம்முள்ளேயே உணரப்பட முடிகின்ற உடல். அதாவது, மெல்லுடல் என்பது, நமக்குள் இருக்கும் துல்லியமான புலனறிவுகளும், “அந்தக்கரணம்” அல்லது உட்கருவிகள் எனப்படும் மனம், சித்தம், புத்தி, “நான் இந்த உடல்தான்” எனும் அகங்காரம் ஆகியவற்றின் கலவை.
மேலும், எல்லா விளைவுக்கும் ஒரு மூலகாரணம் இருக்க வேண்டும் என்ற நியதியால், நாம் அடையும் வல்லுடல், மெல்லுடல் எல்லாம், நம்முடைய முந்தைய வினைகளின் விளைவுகள் எனும் கர்ம விதியினை நமது சாத்திரங்கள் வைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில், நமது வல்லுடலுக்கும், மெல்லுடலுக்கும் காரணமாக, வினையுடல் அல்லது “காரண சரீரம்” என ஒரு நுண்ணுடலும் இருக்கிறது. இந்த மூன்று உடல்களின் கலவைதான், பிறவியில் நாம் சுமக்கும் உடல்கள். ஆனால் பொதுவாக, நாமெல்லாம், “நான்” என்பதற்கு, வெளியில் தெரியும் வல்லுடலைத்தான் அடையாளமாக வைத்திருக்கிறோம்.
சுருக்கமாகச் சொல்லப்பட்ட இந்த மூன்று அனுபவ உடல்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஏராளமான விளக்கங்களை எல்லாம் வேதாந்தம் கொடுக்கின்றது. இங்கே, நம்முடைய நோக்கம், அனுபவங்களுக்கும், உடல்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைப் பார்ப்பது மட்டுமே.
“ஜாக்ரதா” அல்லது விழிப்பு-நிலை அனுபவத்திற்கு நம்முடைய வல்லுடல் முதன்மைப்படுத்தப்பட்டு, அத்துடன் மெல்லுடலும் இணைந்துள்ளது. நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு, அவை துன்பமோ, இன்பமோ, அவைக்கான அடிப்படைக் காரணம், நம்முடைய வினைப் பயனே என்பதால், வினையுடலும் நம்முடைய விழிப்பு-நிலை அனுபவங்களுக்கு காரணமாக இருக்கிறது. அதனால், “ஜாக்ரதா” அனுபவங்கள் நமக்குள் மிக அழுத்தமாகப் பதிகின்றன.
“ஸ்வப்னா” எனும் கனவு-நிலை அனுபவத்திலோ வல்லுடல் இல்லை. அதன் ஒளியை, அதாவது அதன் அறிவு நிலையை, ஆத்மா மறைத்து வைத்து விட்டது. மெல்லுடலின் மனம் மட்டுமே இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மெல்லுடல், முன்பு பெற்ற அனுபவங்களை ஒட்டி, தனக்குள்ளேயே ஒரு கனவு உலகைப் படைத்து, அதனை மனதுக்குள் அனுபவித்துக் கொள்கிறது. கனவினை அனுபவிக்கும் போது, கனவு அனுபங்கள் உண்மையாக இருந்தாலும், அந்தக் கனவுலகு, கனவு இருக்கும் வரையிலேதான் உண்மை எனவும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆழ்துயில் என்பதோ வல்லுடலும், மெல்லுடலும் முற்றும் தத்தம் அறிவாகிய ஒளியினை இழந்து விட்ட நிலை. அவற்றின் சக்தியை ஆத்மா தன்னுள் இழுத்துக் கொண்டுவிட்டது. அப்போது வெளியுலகமும் இல்லை. கனவுலகும் இல்லை. ஒன்றும் இல்லாமல், அதே சமயம், ஏது வரும் எனும் தெளிவோ, அறிவோ இல்லாமல் நாம் இருக்கின்றோம். அப்போது நம்முடைய வினையுடல் மட்டுமே, நாம் செய்த, செய்கின்ற எல்லா வினைகளும், ஆத்ம தத்துவத்தை உணராத அறியாமையினாலேதான் என்பதால், “அறியாமை” எனும் போர்வையினாலே போர்த்தப்பட்டுக் கிடக்கிறதாம். வல்லுடலுக்கும், மெல்லுடலுக்கும் வினைகளுக்கேற்ப அடுத்தடுத்து, அனுபவங்களை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கம் மட்டுமே ஒரு விதையாக விளங்க, வினையுடலை மட்டும் அறியாமைப் போர்வைக்குள் சுமந்து நாம் ஆழ்துயிலில் இருக்கின்றோம்.
விழிப்பு, கனவு, துயில் எனும் இவ்வனுபவங்களை அனுபவிப்பவன் வெவ்வேறு ஆளாக இருந்தால், எப்படி இந்த அனுபவங்களை எல்லாம், சேர்த்தும், தொடர்பு படுத்தியும் ஒருவனால் கூற முடிகிறது, முடியாது அல்லவா! அறியாமையில் கிடக்கும் துயிலையும், “நான் நன்றாகத் துயின்றேன். அந்த அனுபவம் சுகமாக இருந்தது” எனவும் எப்படி ஒருவனால் கூற முடியும்! எனவே மூன்று உடல்களையும் தாண்டி, மூன்று அனுபவங்களையும் தாண்டி, ஒரு சக்தி இருக்க வேண்டும். அதுவே ஆத்மா.
முண்டோக உபநிடதம், ஒவ்வொரு உடலுக்கும் ஒரு பெயரையும் இட்டு, அந்த மூன்று நபர்களும், உண்மையில் ஆத்மாவாகிய ஒன்றின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட மித்யாவே எனக் காட்டுகின்றது. இந்த மூன்று அனுபவங்களுக்கும் மூன்று விதமான உடல்கள் இருப்பதாய் நமக்கு விளங்குவதற்காகவே காட்டினாலும், இம்மூன்று அனுபவங்களையும் அனுபவிப்பவன் ஒருவனே எனவும் உறுதி செய்கின்றது.
ஆழ்துயில் சுகமாய் இருக்கிறது என்றால், அது எந்த மாதிரியான சுகம்?
அது மனதால், புலனறிவால், உடலால் அடையப்படும் சுகமாக இருக்க முடியாது, ஏனெனில், மனமோ, புலனோ, உடலோ ஆழ்துயிலில் இல்லை. அப்படியானால், அந்தச் சுகம் அடையப்படும் சுகம் இல்லை. நம்முடைய இயற்கையான ஆனந்த நிலை. உடல், மனம், அறிவு எல்லாம் அடங்கி விட்ட துயிலில், ஆத்மா மட்டுமே இருப்பதால், ஆனந்தம் இயற்கையாய் இருக்கிறது. அது “சத்சித்சுகம்” எனும் ஆத்மாவின் இயற்கைச் சுகம்.
அப்படிப்பட்ட ஆத்ம சுகத்தை, ஆழ்துயிலுக்குப் பின்னே வரும் விழிப்பில் ஒரு அனுமானமாகத்தான் நம்மால் உணர முடிகிறது. ஆனால், ஆத்ம சுகத்தை, எப்பொழுதும், அதாவது விழிப்பு, கனவு, ஆழ்துயில் எனும் எல்லா நிலைகளிலேயும் எவரால் உணர்ந்திருக்க முடியுமோ, அவரே பரமஹம்ஸர். அப்படி விளங்கும் பரமஹம்ஸர்களின் நிலைதான் “துரீயம்” எனும் மேலான பரஞான நிலை. அதுதான் எல்லா அனுபவங்களுக்கும் அறிவொளி தருவதாக, ஆனால், எல்லா அனுபவங்களையும் வெறும் சாட்சியாக மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பதான ஆத்ம நிலை.
துரீயம் என்பதை மேலான நாலாம் நிலை என ஒரு குறிப்புக்காகச் சொன்னாலும், உண்மையில் அது ஒரு நிலை அல்ல, அதுவே முடிவு. அதுவே “நான் ஆத்மாவே” என நிலைத்திருக்கும் கதி. இவ்வாறு, ஆத்மா மூன்று அனுபவநிலைகளுக்கு அப்பாற்பட்டும், அவற்றுக்கு எல்லாம் ஒரு ஆதார சாட்சியாகவும் இருப்பது எனும் கருத்தையே பாடலின் மூன்றாம் வரி காட்டுகின்றது.
ஆத்மா, மூன்று கூறுகளான ஒருவரது உடல்களினூடே கோர்த்து ஒளிர்ந்து, சாட்சியாக இலங்குவது போலவே, உலகில் எல்லா உடல்களிலேயும் கோர்த்து ஒளிர்கின்றது. அப்படி உலகில் கோர்த்து இலங்கும் ஒளியே “பிரம்மம்” அல்லது “பரமாத்மா”. அதனால், பிரம்மமும், ஆத்மாவும் ஒன்றே. அப்படி உணராமல், “நான்” என்பது வெளி, வளி, தீ, நீர், மண் எனும் ஐந்து இயற்கைப் பொருட்களின் (பஞ்ச பூதங்களின்) தொகுப்பால் ஆக்கப்பட்ட உடலே என நினைப்பது தவறு. “நான்” எனும் ஆத்மா, பகுக்கப்பட முடியாதது. தொகுக்கப்பட முடியாதது. ஏனெனில், அது ஈரற்று முழுமையாய் நிறைந்து இருப்பது.
இவ்வாறு நாலாம் வரியிலே காட்டி, “ஜீவ-பிரம்ம ஐக்கியம்” அல்லது “ஈரற்ற ஆத்ம தத்துவம்” எனும் பரம ரகசியத்தைச் சிந்திக்க, பகவான் ஆதிசங்கரர் தூண்டுகின்றார். ஆத்ம தத்துவத்தை அதிகாலையிலே சிந்தித்து, நான் இந்த வெறும் உடலோ, அணுத்திரளின் திரட்டோ அல்ல, எல்லா உயிர்களிலும் கோர்த்திருக்கும் பிரம்மமே, அது எப்பொழுதும் உள்ளதும், உணர்வும், சுகமுமாய் இருப்பது என்று சிந்திக்க வேண்டும் என்பதே முதற்பாடலில் தரப்பட்ட பேருண்மை.