Prata Smarana Stotra
பாடல் – 2
वाचो विभांति निखिला यदनुग्रहेण l
यन्नेति नेति वचनैर्निगमा अवोचु –
स्तं देवदेवमजमच्युतमाहुरग्र्यम् ll २ ll
வாசோ விபா₄ந்தி நிகி₂லா யத₃னுக்₃ரஹேண |
யன்னேதி நேதி வசனைர்னிக₃மா அவோசு –
ஸ்தம் தே₃வதே₃வம் அஜம் அச்யுதம் ஆஹுரக்₃ர்யம் || 2 ||
பெய்மொழி பேசா ததனை
பெருமனம் காட்டா ததனை
செய்புலன் மொழிக ளேற்றிச்
சேதனம் ஆற்றா வருளை
அய்யிலை யிலைமா மறைவை
அறிவொளி ஒளியைப் பிறவா
மையுள தழியா துண்மை
வைகறை துதிக்கின் றேனே
பொருள்:
அதிகாலையில் – எதை மனதாலும், வாக்காலும் விளக்க முடியாதோ, எதனுடைய கருணையினால், எல்லா வாக்கும் (அதாவது வாக்கு முதலான புலனறிவுகளும் மனமும்) ஒளிர்கின்றனவோ, எதனை, “இது அல்ல, இது அல்ல” என்று (பொய்யெனத்) தள்ளி, வேதங்கள் (உண்மையெனக்) காட்டுகின்றனவோ, எது எல்லா அறிவிற்கும் ஒளியினைத் தருவதாய், பிறப்பு-இறப்பு இல்லாததாய், என்றும் உள்ளதாய் இருப்பது என்று கூறப்பட்டதோ, அந்த – ஆத்மாவை நான் துதிக்கின்றேன்.
முதல் வரி:
प्रात: (ப்ராதர்) = அதிகாலையில்; भजामि (ப₄ஜாமி) = துதிக்கின்றேன்; मनसाम् (மனஸாம்) = மனதால்; वचस् (வசஸாம்) = வாக்கால்; आगम्यम् (அக₃ம்யம்) = அடையமுடியாத;
இரண்டாம் வரி:
वाचो (வாசோ) = வாக்குகளும்; विभांति (விபா₄ந்தி) = ஒளிர்கின்றது; निखिला (நிகி₂லா) = அனைத்து; यदनुग्रहेण (யத்₃ அனுக்₃ரஹேண ) = எதன் கருணையினால்;
மூன்றாம் வரி:
यन् (யன்) = எந்த (உண்மையை); नेति नेति (நேதி, நேதி) = இது அல்ல, இது அல்ல; वचनै (வசனைர்) = வரிகளால்; नीगमा: (நிக₃மாக) = வேதங்கள்; अवोचन् (அவோசன்) = விளக்குகின்றது;
நாலாம் வரி:
स्तं (ஸ்தம்) = அதை; देवदेवम (தே₃வதே₃வம்) = (அறிவுகளின்) ஒளியின் ஒளியை; अजम (அஜம்) = பிறப்பு இல்லாததை; अच्युतम् (அச்யுதம்) = அழிவு இல்லாததை; आहुर् (ஆஹுர்) = இப்படிச் சொல்கிறார்கள்; अग्र्यम् (அக்₃ர்யம்) = என்றும் உள்ளது;
குறிப்பு:
முதற் பாடலிலே “அதிகாலையில் சிந்திக்கிறேன்” எனத் தொடங்கிய பகவான் ஆதி சங்கரர், இரண்டாம் பாடலில், “அதிகாலையில் துதிக்கிறேன்” எனத் தொடங்குகிறார்.
“சிந்தித்தல்” என்பது அறிவால் ஆய்ந்துணருதல். “துதித்தல்” என்பது மனதால் ஆழ்ந்துணருதல். எனவே சிந்திப்பதால், முதற்பாடலில் பகுத்தறியப்பட்ட ஆத்ம தத்துவம், இரண்டாம் பாடலில், துதிப்பதால் தொகுத்துணரப் பெருகிறது.
இப்பாடலில், முதல் வரியில் ஆத்மா புலனறிவுக்கு எட்டாமல் இருப்பது எனும் உண்மை காட்டப்படுகிறது.
முன்னேயே காட்டியபடி, “நான்” எனும் உணர்வு – பார்த்தல், கேட்டல், நுகர்தல், ருசித்தல், தொடல் எனும் – புலனறிவுகளால் காட்டப்பட முடியாத உணர்வு. நமக்கு “நான்” என நம்மை உணர்ந்து கொள்ள எந்தப் புலனும் தேவை இல்லை அல்லவா? இருட்டில் இருந்தாலும், நமக்கு நாம் இருப்பது தெரிகிறதே! இதைத்தான் முதல் வரியில் மனதாலோ, வாக்கு முதலான அறிவாலோ காட்டப்பட முடியாதது எனக் கூறப்பட்டது
இரண்டாம் வரியில், மனம், வாக்கு முதலான புலன்களால் அறியப்பட முடியாததாகிய ஆத்மாவே மனம், புலன் முதலிய சடப்பொருளுக்கும், அறிவாகிய ஒளியைத் தந்து உயிர்ப்பிக்கின்றது எனக் காட்டப்பட்டது.
“யத்₃ அனுக்₃ரஹேண” – அதாவது எதனுடைய கருணையால், நாம் இந்த உடலில் உயிர்த்திருக்கிறோமோ, அதுதான் ஆத்மா. உயிர் என்பதல்ல ஆத்மா. உயிர் என்பது சடவுடலுக்கு அறிவொளியைத் தந்திருக்கின்ற நிலை. அது ஒரு விளைவு மட்டுமே. அந்த விளைவுக்குக் காரணமான மூலமே ஆத்மா. இந்த நுணுக்க உண்மை உணரப்பட வேண்டும்.
மூன்றாம் வரி, பொதுவாக உபநிடதங்கள் ஆத்ம தத்துவத்தை விளக்க எடுத்துக் கொள்ளும் ஒரு வழியினைச் சுட்டிக் காட்டுகிறது. அது ஆத்மா அல்லாதவற்றை, “இது அல்ல, இது அல்ல” எனக் கண்டு கழிப்பதன் மூலம், மிஞ்சியிருக்கும் தள்ள முடியாத உணர்வையே, ஆத்மாவாக உணர்ந்து கொள்வதாகும்.
எல்லாவற்றையும் காட்டுவதே ஒளி என்றால், அந்த ஒளியையே எப்படி ஒளியினால் காட்ட முடியும்? வாக்காலும், மனதாலும் உணர்த்தப்பட முடியாதது ஆத்ம தத்துவம் என்றால், அப்புறம் அதனை எப்படி மொழியாலும், மனதாலும் காட்டிக் கொடுக்க முடியும்?
“நான்” என்ற உணர்வும், அதை ஒட்டி உயிர்ப்பித்த மனமும், புலனறிவும், ஆத்மாவின் அருளால் மட்டுமே எழுவன என்பதும், அந்த ஆத்மாவை மனதாலும், புலனாலும் அறிய முடியாது என்பதும் காட்டப்பட்ட பின், வேதங்கள், ஆத்மாவை உணர்வதற்கு ஒரு வழியினைத் தருகின்றன. அது, இருளை ஒளி அல்ல என விலக்குவதன் மூலம் ஒளியை உணர்வது எப்படியோ, அப்படியே ஆத்மா அல்லாதது எது எனத் தெளிந்து அவற்றை விலக்கினால், ஆத்மா மட்டுமே மிஞ்சி நிற்கும் எனும் ஒரு வழிதான்.
ஆத்மா அல்லாதன எல்லாம், சம்ஸ்கிருத மொழியில் “அநாத்மா” எனப்படும். எதெல்லாம் மனதால், புலனால் அடையப்படுவனவோ, அதெல்லாம் அநாத்மா என்பதாகிறது. அப்படியானால், நாம் அடைவன எல்லாம் அநாத்மா. உடமைகள் எல்லாம் அநாத்மா. எனவே அவற்றை எல்லாம், “இது அல்ல, இது அல்ல”, அதாவது “நேதி, நேதி” என, தள்ளிக் கழித்துக் கொண்டே வந்தால், வெளிப்பொருட்கள், உள்ளறிவு என எல்லாம் ஒவ்வொன்றாகத் தள்ளப்பட்டு, தள்ள முடியாத தனிப்பொருளாக எது மிஞ்சி இருக்கிறதோ, அதுவே ஆத்மா என உணரமுடியும்.
“நேதி, நேதி” என இருமுறை சொன்னது ஏனோ?
முதல் தள்ளல், நமக்கு வெளியில், நாம் தேடி அடையும் பொருட்களை உண்மையல்ல எனத் தள்ளுதல்; அதாவது உலகப் பொருட்களை நாடுவதன் மூலம் நிலையான உண்மையினை அடைய முடியாது என ஆத்ம விசாரணை செய்தல்.
இரண்டாம் தள்ளல், நமக்குள்ளேயே நம் புலனிலும், மனதிலும் காணும் பொருட்களிலும், நிலையான உண்மை இல்லை எனத் தள்ளல். அதாவது, புலனறிவாலும், மனதாலும் அடையும் இன்பங்களும் உண்மையல்ல என ஆத்ம ஆராய்ச்சி செய்தல்.
இப்படி முதல் மூன்று வரிகளிலே ஆத்மா புலனறிவுக்கோ, மனதுக்கோ எட்டாதது எனவும், ஆதலால் தனையற்ற எல்லாவற்றையும் தள்ளி, தள்ள முடியாத தன்னையே ஆத்மா என உணரவேண்டும் எனவும் காட்டிய பகவான் ஆதி சங்கரர், நாலாம் வரியில், ஆத்மாவின் தன்மையை மேலும் சில அடைமொழிகளால் காட்டுகின்றார்.
“தே₃வதே₃வம்” எனும் சொல்லுக்குத் தெய்வங்களின் தெய்வம் எனப் பொருள் கொள்ளலாம். ஆயினும், “தே₃வ” என்பதன் சரியா பொருள், ஒளி என்பதே. அதாவது அறிவு.
சாத்திரங்களிலே, நமக்குள் இருக்கும் பார்த்தல், கேட்டல், ருசித்தல், உண்டல், ஜீரணித்தல் என இருக்கும் பலவிதமான அறிவு ஒவ்வொன்றிற்கும், ஒரு ஒளிச்சக்தி அல்லது தேவதை காரணமாக இருக்கிறது எனக் காட்டி, அந்தத் தெய்வங்களின் அருளால், அவ்வறிவுச் சக்திகள் பிரகாசிக்கட்டும் என்றெல்லாம், நமது ஸநாதன தர்மநெறியிலே, பல துதிப்பாடல்களும் இருக்கின்றன.
“முப்பத்து முக்கோடி தேவர்கள்” என்பதும், அப்படி ஒரு எண்ணிலடங்கா கணக்கினால் துதிப்பதும், உயிர்களில் விளங்கும் பலவித அறிவின் ஒளிகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான். எனவே, “தே₃வதே₃வம்” எனும் சொல்லின் பொருள், “அறிவின் அறிவு” அல்லது “ஒளியின் ஒளி” எனப் பொருளாகும். அதுவே ஆத்மா.
இப்படிச் சொல்வதால் இரண்டு முக்கிய உண்மைகள் வெளிப்படுகின்றன.
வேறுபட்டிருக்கும் எல்லாவிதமான உயிர்களுக்குள்ளும், விளைந்திருக்கும் எல்லாவிதமான அறிவுகளுக்கும் ஆதாரமான அறிவு ஆத்மா ஒன்று மட்டுமே என்றால், அந்த ஆத்மா ஈரற்ற ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
இரண்டாவது, அப்படி உயிர்த்திருக்கும் அறிவுக்கெல்லாம் அறிவொளி கொடுப்பது ஆத்மாவே என்றால், அப்படிக் கொடுப்பதும், கொடாமல் இருப்பதும் ஆத்மாவினாலேயே முடியும். அதாவது ஆத்மாவின் கருணையினால் மட்டுமே, நமக்கு உயிர்ப்பும், உயிர்த்தவருக்குள் ஆத்மாவைப் அறியும் நாட்டமும், அதில் முயற்சியும், முயற்சியால் பயனும் விளைய முடியும்.
எனவே உயிர்ப்பித்தும், உயர்வித்தும் அருளும் அச்சக்தி, பிறப்பு, இறப்பு எனும் மாறுபாடுகளையும் கடந்ததாக இருக்க வேண்டும். இதனைக் காட்டவே, நாலாம் வரியில், “அஜம்” (பிறப்பற்றது), “அச்யுதம்” (அழிவற்றது) என்றெல்லாம் ஆத்மாவுக்குத் திருமறைகள் அடைமொழிகள் தருவதாக பகவான் ஆதி சங்கரர் காட்டியிருக்கின்றார்.