Prata Smarana Stotra

PDF View

Prata-Smarana-Stotram-in-Tamil
Log in to download as PDF
Pages: 1 2 3 4
Pages: 1 2 3 4

பாடல் – 3

प्रातर्नमामि तमसः परमर्कवर्णं
पूर्णं सनातनपदं पुरूषोत्तमाख्यम् l
यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ
रज्ज्वां भुजंगम इव प्रतिभासितं वै ll ३ ll
ப்ராதர் நமாமி தமஸ​: பரமர்கவர்ணம்
பூர்ணம் ஸனாதனபத₃ம் புரூஷோத்தமாக்யம் l
யஸ்மின்னித₃ம் ஜக₃த₃ஶேஷமஶேஷ மூர்தௌ
ரஜ்ஜ்வாம் பு₄ஜங்க₃ம இவ ப்ரதிமாஸிதம் வை || 3 ||

மையிருள் இலதாய் இலதாய்
மாகதிர் ஒளியாய் முழுதாய்
எய்யுரு இலக்காய் எதுவாய்
என்றுள நிதியாய் முதலாய்
பொய்யுல காட்டும் மிகையாய்
புரிகயிற் றுழலும் அரவாய்
வைத்திடுந் திடமாம் உண்மை
வைகறை பணிகின் றேனே

பொருள்

அதிகாலையில் – எது இருளுக்கு வேறானதாயும், இருளகற்றும் கதிரொளியாயும் இருக்கிறதோ, எது முழு நிறைவானதாயும், முக்கியக் குறிக்கோளாயும், முதன்மையானதாயும் இருக்கின்றதோ, எதனுடைய நிறைவில், மிச்சம் இல்லாது எல்லா உலகங்களும், கயிற்றில் கற்பனையால் ஏற்றி வைக்கப்பட்ட பாம்பினைப் போல உறுதியாகத் தோன்றுகின்றனவோ, அந்த – ஆத்மாவைப் பணிகின்றேன்.

 

முதல் வரி:

प्रातर्नमामि (ப்ராதர் நமாமி) = அதிகாலையில் பணிகிறேன்; तमसः (தமஸ​:) = இருளுக்கு; परम् (பரம்) = வேறானது; अर्कवर्णं (அர்க வர்ணம்) = (சூரிய) ஒளிச்சுடர்;

இரண்டாம் வரி:

पूर्णं (பூர்ணம்) = நிறைவானது; सनातनपदं (ஸனாதன பத₃ம்) = என்றும்-உள்ள இலக்கு; पुरूषोत्तम् (புருஷோத்தம:) = முதன்மையானவன் (என்ற); आख्यम् (ஆக்யம்) = பெயரைக் கொண்டது;

மூன்றாம் வரி:

यस्मिन्निदं (யஸ்மின்) = எதனிடத்தில்; सीएइदं (இத₃ம்)= இந்த; जगदशेषम (ஜக₃த்₃ அஶேஷம்) = (மிச்சம் இல்லா) எல்லாப் படைப்புக்களும்; अशेषमूर्तौ (அஶேஷ மூர்தௌ) = (ஆத்மாவாகிய,) நிறைவான உருவத்தில்;

நாலாம் வரி:

रज्ज्वां (ரஜ்ஜ்வாம்) = கயிற்றில்; भुजंगम: (பு₄ஜங்க₃ம:) = பாம்பு; इव (இவ ) = போல; प्रतिभासितं वै (ப்ரதிபாஸிதம்)= ஏற்றப்பட்ட உறுதியான தோற்றம்;

குறிப்பு:

முதற் பாடலிலே “அதிகாலையில் சிந்திக்கிறேன்” எனவும், இரண்டாம் பாடலில், “அதிகாலையில் துதிக்கிறேன்” எனவும் தொடங்கிய பகவான் ஆதி சங்கரர், இறுதியான இந்த மூன்றாம் பாடலில் “அதிகாலையில் பணிகிறேன்” எனத் தொடங்குகிறார்.

அதிகாலையில் எழுந்த உடனேயே, இவ்வாறு ஆத்ம தத்துவத்தை, முதலில் அறிவால் சிந்தித்தும், பிறகு மனதால் துதித்தும் அதனால் முறையே பகுத்தறிவும் தொகுத்துணர்வும் அடையும் ஒருவன், இறுதியாக, ஆத்ம தத்துவத்திலேயே பணிவு கொள்வதன் மூலம், விழிப்பு-நிலையில் உலகில் செய்யும் செயல்களிலும், அனுபவங்களிலும், ஆத்மாவின் ஈறற்ற பேருண்மையை மறக்காமல், “எல்லா உடமைகளும் எனதல்ல” எனும் பணிவுடன் தன் கடமையைச் செய்ய முடிகிறது.

“நமாமி” எனும் சொல்லுக்குப் பணிதல், வணங்குதல் என்பது பொருள்.

“ந மம” என்பது, “என்னுடையது அல்ல” என எல்லா உடமைகளையும் தியாகம் செய்கின்ற உறுதியே ஆகும். அப்படிப் பணிவதால், உலகத்தில் கடமை ஆற்றும் போதும், அதன் விளைவுகளை ஏற்கும் போதும், எல்லாச் செயலும், விளைவும், அந்தந்த அனுபவத்தின் போது உண்மையாய் இருப்பினும், அவை யாவும் நிலையற்ற தோற்ற மாயை என்பதால், அவற்றைத் தியாகம் செய்யும் உறுதி, “வைராக்யம்”, ஏற்படுகிறது.

அதனால் உலக விவகாரங்களில் ஈடுபடும்போது அவற்றை வெறும் விளையாட்டாகவே ஏற்கும் பக்குவமும், அவற்றினால் வெற்றி-தோல்வி என்றோ, சுகம்-துக்கம் என்றோ, விருப்பு-வெறுப்பு என்றோ எந்தவிதப் பாதிப்புக்களும் இல்லாமல், அப்பாதிப்புக்கள் எல்லாம் ஒரு அனுபவ நிலையில் மட்டுமே உண்மைபோல் இருக்கும் மித்யா எனவும் அறிய முடிகிறது.

எனவே உலக வாழ்க்கையில் ஈடுபடும்போது, ஆத்மா ஒன்றே சத்தியம், மற்றதெல்லாம், மித்யா என்ற தூய அறிவுடன் இருந்து, மித்யா தரும் அனுபவங்களை, ஒரு பொய்யான பாதிப்பாக ஏற்க முடிகிறது.

இவ்வாறு உலகத்தைச் சந்திக்க, சரியான உறுதியையும் ஞானத்தையும் தந்து ஒருவனைத் தயார் செய்வதற்கு,  மூன்றாம் பாடல் உறுதுணை செய்கிறது.

இப்பாடலின் முதல் வரி, அறியாமையைக் கடந்தது ஆத்மா எனக் காட்டுகின்றது.

இருள் என்பது அறியாமையைக் குறிப்பது. ஒளியோ அறிவு. அந்த ஒளி, இருளாகிய அறியாமைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதுவே அறியாமையையும் காட்டி, அந்த அறியாமையை அகற்றுவது.

எப்படி ஒளி இருட்டைக் காட்டும்? சூரியானால் கூட இருட்டைக் காட்ட முடியாது. ஆனால் நம்முடைய அறிவினால், இருட்டு என்பதையும் பார்க்க முடிகிறது, அதுவே நம் அறிவின் ஒளி. அந்த ஒளிதான் இருளையும், இருளைக் களையும் சூரியனையும் காட்டுகிறது.  அறிவுக்கு ஒளியைத் தரும் ஆத்மாவே அறியாமை எனும் இருளை “விளக்குவதாயும்”, “விலக்குவதாயும்” விளங்கும் விளக்கு.

இரண்டாம் வரியில் ஆத்மாவிற்கான மற்றும் சில அடைமொழிகளும் காட்டப்படுகின்றன.

ஆத்மா வரையறுக்கப்படாதது என முதற்பாடலில் பார்த்தோம்.

பொதுவாக காலம், தேசம், குணம் எனும் மூன்றும்தான் ஒரு பொருளின் எல்லையை நிர்மாணிக்கிறது. ஒரு பொருளைக் காலத்தினாலோ, இடத்தினாலோ, குணத்தினாலோ ஏற்படும் மாற்றங்களை ஒட்டியே, விளக்கி விடலாம் என்றால் அப்பொருள் நம்முடைய அறிவின் எல்லைக்கு உட்பட்டதாகி விடும். அதாவது அப்பொருட்கள், மாற்றங்களில் மாட்டிக் கொண்டு “மித்யா” என்றாகிவிடும்.

ஆனால் நிறைவான பொருள் என்பது, இந்தக் கால, தேச, குண மாறுபாடுகளால் எவ்விதப் பாதிப்பும் அடையாமல், எல்லையற்றதாய் இருப்பதாகும். எல்லை என்பது இல்லை என்றால், அந்தப் பொருள் எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கிறது என்பது ஆகிறது. அப்படி முழுமையாய் நிறைந்து இருப்பதை, சம்ஸ்கிருதத்தில் “பூரணம்” என்று அழைப்பர். அப்படியானால், ஆத்மா எனும் “நான்” பூரணம்.

மேலும் மாற்றங்களை விளைக்கும் காலம், தேசம், குணம் எனும் மூன்றும், நம்முடைய மனதின் எண்ண ஓட்டங்களினாலேயே விளைபவை. எண்ணங்கள்தான் பெயர், உரு, குணம் ஆகிய வேறுபாடுகளை விளைவிக்கிறது. எனவே இவை எல்லாம் மனதில் அடக்கம். காலத்தின் மற்றொரு அளவுகோளே “தேசம்” அல்லது வெளி. கால தேச குண மாற்றங்களை விளைக்கும் மனதாலும்  ஆத்மாவை   அடைய முடியாது என்பதால், ஆத்மா காலம், தேசம், குணம் ஆகிய பாதிப்புக்கள் இல்லாமல் சுதந்திரமாக, எல்லையற்று இருக்கிறது. அதனால்,  “பூரணம்” எனும் அடைமொழி ஆத்மாவுக்கு மட்டுமே பொருத்தமாக  உள்ளது.

இரண்டாம் வரியில், ஆத்மா “என்றும் இருப்பது” என்பதால், அதனை ஒரு முறை உணர்ந்தால்கூட,  அதை நாம் ஒருபோதும் இழப்பது இல்லை எனக் காட்டப்படுகிறது.  “ஸனாதன பத₃ம்” எனும் சொல்லுக்கு “என்றும் இருக்கும் நிதி” எனப் பொருள் கொள்ளலாம்.

வேதாந்தத்தின்படி, அடையப்படுவன எல்லாம் நிலையானவை அல்ல. எதையெல்லாம் முயற்சியாலோ, முன்வினையாலோ நாம் உலகில் அடைகின்றோமோ, அவை எல்லாம் நிலைக்காது. அதாவது, அடையப்படுவன என எல்லாம், இடையில் வந்து போவன. அவை முதலிலும் இல்லை. முடிவிலும் இல்லை. நம் உடலும் அடையப்பட்டதுதான். எனவேதான் அது நிலையற்றது. உலக வாழ்வில் அடையும் பொருள், புகழ் என எல்லாமும் அப்படியே நிலையற்றதுதான். அறிவும் அடையப்படுவது என்றால், அதுவும் அழிந்து போகும். சொர்க்கப் பதவி, நரகத் துயரம் என அடைவதும், மாறிப் போகும். அப்படியானால் “ஆத்மாவை அடைதல்” எப்படி நிலையாக முடியும்!

ஆத்மா என்பது அடையப்படுவது அல்ல. அது உணரப்படுவது. ஏனென்றால், ஆத்மா என்பது ஏற்கனவே நம்மால் அடையப்பட்ட பொருள், “சித்த வஸ்து”.

தெளிவதற்கான ஒரு எளிய எடுத்துக்காட்டு.

ஒருவர், தன் தலையின் மேலேயே தன்னுடைய மூக்குக் கண்ணாடியை வைத்துக் கொண்டு அதைக் தேடிக் கொண்டிருக்கிறார். அவரிடம், தேடும் பொருள் ஏற்கனவே அவர் தலை மேலேயே இருக்கிறது என்ற அறிவை உணர்த்தினாலே போதும், எந்த முயற்சியும் இல்லாமல், அவர் அடைய வேண்டிய பொருள் உணரப்படுவதாலேயே, அது அவர்களால் அடைந்ததாக ஆகிறது.

இதைப் போலவே, ஆத்மா என்பது எப்போதும் இருப்பது. அதை உணராமல் தவிக்கும் நமக்கு, அதை உணரும் அறிவு வந்த உடனேயே, ஆத்மா ஏற்கனவே அடையப்பட்டதாக ஆகிறது. அதனால்தான், அத்தகைய ஞானம் ஒன்றினாலேயே, ஆத்ம தத்துவத்தை உணரமுடியும் என வேதங்கள் கூறுகின்றன. அந்த உணர்வு நம்முடைய புற அறிவின் முடிவிலேயே கிடைக்கிறது என்பதாலேயே, “வேத அந்தம்” அல்லது “அறிவின் முடிவு” என வேதாந்த நூல்கள் அழைக்கப்படுகின்றன. அறிவின் முடிவிலேதான் ஆத்ம ஒளியை உணரமுடியும்.  மாணிக்கவாசகர் சிவபுராணத்தில், “வேதம் கெடுத்தாண்ட வேந்தன்” என அறிவின் முடிவைக் கொடுக்கும் ஆத்மனையே துதிக்கிறார்.

ஆத்மாவை உணர்தலே முழுமை தருவது, விடுதலை அளிப்பது என்று வேதாந்தம் கூறுகின்றது. அந்த முழுமை, ஆத்ம ஞானம் ஒன்றினாலேயே அடையப்படுகிறது அப்படியானால் கர்மங்களையும், கர்மங்களைச் செய்வதற்கான தரும நியதிகளையும் சொல்லி வந்த வேதம், ஆத்ம சுகம் அடைவதற்கு ஞானம் மட்டுமே வழி, மற்றவைகள் தேவையில்லை எனச் சொல்லி இருக்கிறதே என ஐயம் வருகிறது. இதையும் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்ம ஞான விசாரம் செய்யவும், ஆத்மனை முற்றும் உணர்ந்து முழுமைச் சுகத்தைப் பெறவும், நாம் முதலில் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அந்தத் தயார் நிலை என்பதுதான்  ஞானப்படிகளிலே ஏறுவதற்கான  தகுதியை அடைந்த நிலை.

காலம் காலமாக, பிறவிகள் பலவற்றிலும், தரும நெறி தவறாமல் கடமைகளைச் செய்து வருதலால், அடைய வேண்டிய தெளிவான மனமும், திடமான அறிவும் ஒருவர் பெற்று, அவ்வுயர்ந்த பண்பின் நல்லழுத்தத்தால், எப்பொழுதோ ஒரு நேரத்தில், ஆத்மாவின் உண்மையை உணரும் தாகம் அவருக்குள் பெருக்கெடுக்க, அவரும் இப்பாடல்களில் காட்டியது போல, அதிகாலை முதல் அயரும் வரை, ஆத்ம தத்துவத்தையே, மதியால் சிந்தித்து, மனதால் துதித்து, உடலால் பணிந்து வாழ்வார்.

அத்தகையோரே, தங்களது அயராத முயற்சிகளின் பலனாகவும், ஆத்மாவின் கருணையாலும், ஆத்ம ஞானத்தை  உணர்வார்கள்.  அதன்பின், “ஞான நிஷ்டை” என, யாவும் ஆத்மனே எனும் பேரறிவுடனே இருப்பார்கள். அத்தகைய சீலர்களால் மட்டுமே, அதற்கப்புறம் எந்த கர்மங்களும் இல்லாமல்,  ஞானம் ஒன்றாலேயே முழுநிறைவான விடுதலையை அடைய முடியும். அவர்களுக்கு மட்டுமே  உலகியல் கடமைகளோ, அறங்களோ தேவையில்லை.

மற்ற எல்லோருக்கும், கடமைகள், நியதிகள் என அறம் வழுவாமல் ஒழுகும் வாழ்க்கை நெறிகளே முதற்படிகள்.  அவற்றை முதலில் கடந்து, அதனூடேயே, பக்தி, யோகம் என நற்பண்புகளை வளர்க்கும் தர்மப் பாதையிலே மேலும் உயர்ந்து, இவற்றின் விளைவால், மனத் தெளிவும்,  உறுதியும் பெற்று, ஆத்ம ஞானத்திற்கான அடிப்படை அறிவையும், தகுதியையும் கொண்டவர்களாக உயர வேண்டும்.

இரண்டாம் வரியில் காட்டப்பட்ட மற்றொரு அடைமொழி “புருஷோத்தம:” என்பது. இதன் பொருள், உயிர்களில் முதன்மையானவன் என்பது ஆகும்.

நாம் பொதுவாக, புருஷன் எனும் சொல்லுக்கு மனிதன் என்று பொருள் கொள்கிறோம். அதுவல்ல இங்கு காட்டப்படும் உண்மை.  இதுவும் முக்கியமாக உணரப்பட வேண்டியது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளும்போது, மூன்று வகையான புருஷன் எனக் காட்டுகின்றார். முதலில் உலகம் என்பது “காரிய புருஷன்”, அதாவது உலகமே எல்லாச் செயல்களுக்கும் விளைநிலமாக விளங்குகின்றது. மற்றொன்று, உலகங்களைப் பலவாறான தோற்றங்களாகக் காட்டும் மாயா சக்தி எனும் “காரண புருஷன்”.

இந்தக் காரிய, காரணங்களைத் தாண்டி, இவற்றுக்கெல்லாம் ஆதாரமாய் இருக்கும் பரமாத்மாவை “உத்தம புருஷன்” என்று பகவத் கீதை அழைக்கின்றது. “உத்தம” எனும் சொல் “மிகவும் மேலானது” எனும் பொருளைத் தருவதாகும்.  “உத்தம புருஷன்” என்பதே “புருஷ உத்தமன்” அல்லது “புருஷோத்தமன்” எனவும் ஆகும்.

இச்சொல்லின் அமைப்பில், சம்ஸ்கிருத மொழி இலக்கணத்தின் ஒரு கருத்தையும் நாம் அறிந்து சிறக்கலாம்.

ஆங்கில இலக்கணத்தில் 1ST person, 2nd person and 3rd person என்று அழைக்கப்படுவதே, தமிழ் மொழி இலக்கணத்தில், “நான்” என்பது “தன்மை” எனவும், “நீ” என்பது “முன்னிலை” எனவும், மற்றன எல்லாம் “படர்க்கை” எனவும் சொல்லப்படும். ஆனால் சம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில், படர்க்கைதான் “பிரதம புருஷ:” என முதலாவதாய் இருக்கிறது. எதிரில் இருப்பவர்களை இரண்டாவதாக “மத்யம புருஷ:” எனக் காட்டுகிறது. ஆனால், தன்னைக் காட்டுபோது, “உத்தம புருஷ:” என்று காட்டுகின்றது. ஒருவேளை, உண்மையும், உயர்வுமான “ஆத்மாவே நான்” என்பதால்தானோ, சம்ஸ்கிருத இலக்கணம், “நான்” என்பது “உத்தம புருஷன்” எனக் கொள்கிறது! அதுபோலவே, தமிழும், “நான்” என்பது தன்மை எனச் சொல்லி, உண்மையில் அது “தன் மெய்” என நம்மை உணரச்சொல்கிறதோ எனவும் தோன்றுகிறது.

பாடலின் இறுதி வரியில், ஆத்மாவிற்கும் உலகிற்கும் உள்ள உறவு எத்தகையது என்ற வேதாந்த உண்மையினை, பகவான் ஆதிசங்கரர் சுட்டிக் காட்டுகின்றார்.  இதற்கு ஒரு வேதாந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்.

“மித்யா” எனும் கருத்தை விளக்க வேதாந்தம் எடுத்துக் கொள்ளும் சில உதாரணங்களில் ஒன்றுதான் “கயிற்றிலே பாம்பினைக் கண்டு மருளும் நிலை”.

தொலைவில் கிடக்கும் ஒரு கயிற்றை, அது கயிறு எனும் உண்மையினை அறியாதவன், அது பாம்பு என்று தவறாகப் புரிந்து கொள்ளும்போது, உண்மையிலேயே பாம்பினைப் பார்ப்பதால் வரும் உணர்ச்சிகளினால் பாதிக்கப்படுகிறான். ஆனால் அது கயிறு எனும் உண்மை தெரியவரும்போது, அது பாம்பல்ல என உணர்ந்து கொள்கிறான். கயிற்றைப் பற்றிய உண்மை அறிவு வருவதற்கு முன்னால், பாம்பு என்பது அவனைப் பொறுத்தவரையில் அக்கயிற்றிலே இருக்கின்றது. ஆனால், பாம்பு உண்மையும் அல்ல. அப்படி உண்மையல்லாத தோற்ற மாயை, உண்மையைப் போல இருக்கின்ற நிலையை, ஆதி சங்கரர் “ப்ரதிபாஸிதம்” எனும் சொல்லால் குறிக்கின்றார்.

அவர் எடுத்துக் கொண்ட “கயிற்றில் பாம்பு” எனும் உதாரணத்தின் குறிக்கோள் மித்யாவைப் பற்றிப் புரிய வைக்கத்தான்.

மித்யா என்பது, உண்மையைப் போல நம்மைப் பாதிக்கலாம் என்பதும், மித்யா, மற்றொரு உண்மைப் பொருளை ஆதாரமாகக் கொண்டே ஏற்படமுடியும் என்பதே இங்கு நாம் புரிந்து கொள்வது. உலகங்களும், ஆத்மா எனும் உண்மையை ஆதாரமாகக் கொண்டு, அதன் மேல் ஏற்றி வைக்கப்பட்ட தோற்ற மாயையே என்பதே இதனால் சுட்டிக் காட்டப்பட்டது.

எளியதான இந்த எடுத்துக்காட்டை  வேறு வகையிலும் முக்கியப்படுத்தி, பல சான்றோர்கள், மித்யா வாதத்தை எதிர்த்தும், ஏற்றும் வாதிட்டிருக்கிறார்கள். அவ்விதமே ஆத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் உள்ள உறவினையும் வெவ்வேறு வழியிலே அணுகி இருக்கிறார்கள்.

உதாரணமாக, ஆத்மாவே இல்லை என்பது புத்தர்களின்  ஒரு சூன்ய வாதம். அவர்கள் வேதாந்தத்தை ஏற்பதில்லை. வேதாந்த வழியினை ஏற்பவர்களுள், ஆத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறானவை, சுதந்திரமானவை, என்றுமே ஒன்றாக முடியாதன  என்பது மத்வாச்சாரியாரின் துவைத வேதாந்தம். ஆத்மா, பரமாத்மா இரண்டும், ஒரு மரமும் கிளையுமாக,  ஓர் சிறந்த உறவுடனிருப்பன என்பது ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம். இதனைப் போன்றே சைவம் முதலான சமய நெறிகளும், ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவினைப் பலவகையிலே ஆய்ந்து, நம்மை எல்லாம் படிப்படியாக உயர்த்திச் செல்கின்றன.

ஆனால், படிப்படியாக உயர்த்திச் செல்லும் இந்தப் பாதைகளை முற்றும் கடந்தால் மட்டுமே உணரப்படும் உண்மைதான் அத்வைதம் அளிக்கும் பேறு. அது, எல்லாவற்றிலும்  ஒளிரும் பரமாத்மாவே, என்னுளும் “நான்” என ஒளிரும் ஆத்மா எனக் காட்டுகின்றது. எனவே அது “இரண்டற்றது”.   அதாவது,  பெருக்கவோ, வகுக்கவோ முடியாத, ஒன்றாய் மட்டுமே இருக்கும் சக்தி. எல்லாச் சமயப் படிகளையும் துணிவுடன் கடந்தால் மட்டுமே, அத்வைத வேதாந்தம் கூறும், இரண்டற்ற ஒன்றாகும் விடுதலையை நாம் அடைய முடியும்.

இவ்வாறு ஆத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் அத்வைதம் காட்டும் உறவினைப் பல சான்றோர்களும், பெரியோர்களும் ஆய்ந்தும், எதிர்த்து வாதிட்டும் இருக்கின்றனர், இருப்பர். எனினும், வேதாந்தத்தை அடிப்படையாக ஏற்ற எல்லோருமே, ஆத்மாவே நமக்குள் உயிர்க்கும் ஒளி என்பதில் எவ்வித மாறுபாடும் கொள்வதில்லை. எனவே ஆத்மா எனும் பேருண்மை ஒன்றை உணர்தலே முதலான பயன் என்பதால், நாம் அதனை மட்டும் பிடித்துக் கொண்டு, வெறும் அறிவுச் சுமையான விவாதங்களை நாம் விட்டு விடலாம்.

அவ்வகையிலே, இந்த நாலாம் வரியில் காட்டப்பட்ட, ஆத்மாவின் உண்மைத் தன்மையையும், அதனையே சார்ந்து விளங்கும் உலகங்களின் நிலையற்ற தன்மையையும் மனதில் ஏற்று, நாம் வாழ்க்கையை ஒரு விளையாட்டாகவும், அதன் காரணமாக வாழ்க்கையை உற்சாகமாகச் சந்திக்கவும், இந்தப் பொன்னான காலைப் பொழுது புலரட்டும்.

இத்துடன் பகவான் ஆதி சங்கரர் அருளிய ப்ராத ஸ்மரண ஸ்தோத்திரம் எனும் நந்நூலின், பண் விளக்கம் நிறைவுறுகிறது.

முடிவுரை

“ஆத்மா அஜம் அநித்ரம் அஸ்வப்னம் அநாமிகம் அரூபகம் அசூன்யம் ஸர்வக்ஞம்” என்பது பகவான் ஆதி சங்கரரும் தொழும் குரு கௌடபாதரின் வாக்கு.

“அஜம்” (பிறப்பற்றது) எனில், பிறப்பின் அடையாளமான வல்லுடல் ஆத்மாவுக்கு இல்லை. எனவே “ஜாக்ரதா” எனும் விழிப்புலக அனுபவங்கள் ஆத்மாவுக்கு இல்லை. அது போலவே “அநித்ரம்” (துயிலற்றது), “அஸ்வப்னம்” (கனவற்றது) என்பதால், மெல்லுடல், வினையுடல் அற்று, அதனால், கனவும், துயிலும் அற்று எப்போதும் மேலான விழிப்புடனே இருப்பது ஆத்மா.  அது “அநாமிகம்” என்றால், அது பெயரற்றது எனவும், பேச்சால் விளக்கப்பட முடியாதது எனவும் பொருள் தரும். “அரூபகம்” என்றால், உருவமோ, குணமோ அற்றது.  அப்படியானால், அது ஒன்றுமே இல்லாத சூன்யமோ என்றால், இல்லை! அது முழுதும் நிறைவானது all potential.  “ஸர்வக்ஞம்”  –  எல்லாம் அறிந்தும், நிறைந்தும் இருப்பது.

இவ்வாறு மறையுள் மெய்யாகவும்,  நமது மெய்யுள் மறைவாகவும் இருக்கும் ஆத்மாவின் உண்மையை, நாம் அறிவதால், உரிய விழிப்பினை அடைவோம்.  வைகறை முதலாக, அந்த மெய்மறையைச் சிந்தித்துக் கொண்டே, நம் வாழ்க்கையில் செயலாற்றுவோம், செழிப்போம், சீராய் நிலைப்போம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

இவ்வாறு
ஸ்ரீமத் சங்கராசார்ய பகவத் பாதாள் அருளிய
ப்ராத ஸ்ம்ரண ஸ்தோத்திரம் நிறைவினை அடைகிறது.

எழுமின்! எழுமுன் எழுமுள் ளேதோ
முழுமுன் னுலகும் முழுதும் விரியும்
எழுமின் எழுமென் எழிலே நானென
உழுமின் ஆன்மனை உல்கிடு மனமே

Pages: 1 2 3 4

Related Posts

Share this Post

Leave a Comment