Sri Dakshinamurthy Stotram
பாடல் – 7
வ்யாவ்ருத்தாஸ்வனுவர்தமானமஹமித்யந்த: ஸ்பு₂ரந்தம் ஸதா₃ |
ஸ்வாத்மானம் ப்ரகடீகரோதி ப₄ஜதாம் யோ முத்₃ரயா ப₄த்₃ரயா
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||7||
சேர்முதுமை மாற்றமுடற் – செய்தபோதும்
என்னவராச் சாட்சியென
ஏதுமொரு மாற்றமற – இருத்தலாகி
அன்னதுபோல் முன்விழிப்பு
அடர்கனவு துயிலாகி – ஆழ்ந்தபோதும்
நுண்ணுமனு பவநூலால்
நூற்றுதொட ராற்றிவர – நுணுக்கமான
தன்னுளனாய்த் தான்நானாய்
தத்துவமாய் ஆத்மனெனத் – தந்துகாட்ட
சின்மயமாய்த் தன்விரலில்
செய்தகுறி யாலடியார் – சேர்வதான
வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!
முதல் வரி
பா₃ல்யாதி₃ ஷு = குழந்தை (இளமை, முதுமை) முதலான; அபி = அதுபோல; ஜாக்₃ரதா₃தி₃ஷு = விழிப்பு (கனவு, துயில் ) முதலான; ததா₂ = அதுபோல; ஸர்வாஸ்வவஸ்தா₂ஸ்வபி = மற்ற அவஸ்தைகளில் எல்லாம் (மற்ற சுக துக்கங்கள்);
இரண்டாம் வரி
வ்யாவ்ருத்தாஸ் = வந்து போகின்ற அவைகளுக்குள்; அனுவர்தமான = தொடர்ந்து இருப்பதான; அஹம் இதி = நான் எனும் ஆத்மா; அந்த: = உள்ளே; ஸ்பு₂ரந்தம் = விளங்குவது; ஸதா₃=எப்போதும்;
மூன்றாம் வரி
ஸ்வாத்மானம் = ஆத்ம தத்துவத்தை; ப்ரகடீ கரோதி = தெளிவாக விளக்கம் செய்கின்ற; ப₄ஜதாம் = அண்டியவர்களுக்கு; யோ = எவர்; முத்₃ரயா = அடையாளமாக; ப₄த்₃ரயா = மங்களமான;
நான்காம் வரி
தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு; நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்); ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.
கருத்து
இளமை முதலான பருவ மாற்றங்களிலும், அவ்விதமே நனவு (மற்றும் கனவு, துயில்) முதலான அனுபவ மாற்றங்களிலும், (எவ்வித மாற்றங்களும் இன்றி) தொடர்ந்து இருப்பதும், எப்போது தம்முள்ளேயே ‘நான்’ என (அந்த நான் எனும் உணர்வின் மூலமாக) விளங்கி வரும் ஆத்மாவை, எது தன்னைத் தொழுவாருக்கு, சின்முத்திரை அடையாளத்தால் (மௌனமாகக்) காட்டுகின்றதோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!
குறிப்பு
முந்தைய பாடலில், ‘நான்’ எனும் ஆத்மாவே தொடந்து எல்லா அனுபவ நிலையிலும் இருப்பதாகக் காட்டிய பகவான் ஆதி சங்கரர், இந்த ‘நான் எனும் ஆத்மா’, ‘நான் எனும் அஹங்காரம்’ அல்ல எனத் தெளிவுபடுத்த, மீண்டும் ‘த்வம்’ எனும் சொல்லின் விளக்கத்தைத் தருகின்றார்.
இதனை விளக்க, ‘அனுவர்த்தமான’ எனும் சொல்லில் சுட்டிக் காட்டப்பட்ட ஒரு வேதாந்த நியாய முறையை எடுத்துக் கொள்கிறார். ‘அனுவிருத்தி நியாயம்’ என்பது, தொடர்ந்திருத்தல் எனும் வாதம்.
எது எப்போதும் தொடர்ந்து இருக்கிறதோ, அது ‘நானாகிய ஆத்மா’ என்றும், அத்தொடர்பு இல்லாமல், எல்லா அனுபவங்களுக்கும் சாட்சியாக எதுவும் இருக்க முடியாது என்றும், அதனால், விழிப்புலகில் நாம் கொள்ளும் ‘நான்’ எனும் அஹங்காரம் ஆத்மா அல்ல என்றும் காட்டப்படுகிறது.
முந்தைய பாடலிலேயே, உடல் வேறு, மனம் வேறு என்பது விழிப்பு, கனவு, துயில் ஆகிய நிலைகளினால் அறியப்பட்டது. மேலும் நமக்கெல்லாம் கிடைக்கும் அனுபவ நிலைகளையே, ஆத்ம தத்துவ விளக்கத்திற்கான அடிப்படையாக எடுத்துக் கொள்கிறது வேதாந்தம்.
பருவமாற்றம் ஒரு உதாரணம்.
குழந்தை, இளமை, முதுமை என நாம் பரிணாம மாற்றங்கள் பெற்று வருகிறோம். வயதாக ஆக, நமது உடல் மாறுகிறது. அறிவியலின்படி, நேற்று இருந்த உடற்செல்கள் இன்று இல்லை. மாறிக் கொண்டே இருக்கின்றன. மனமும் மாறுகிறது. குழந்தையின் மனதும், எண்ணவோட்டங்களும், வயதாகும் போது மாறி விடுகிறது. ஆனால், ‘நான்’ மாறிவிட்டேனா? என் உடல் வளர்ந்து விட்டது, தளர்ந்து விட்டது, மனம் முதிர்ந்து விட்டது எனவெல்லாம் அறிந்தாலும், ‘நான் மாறவில்லை’ என்பதுதான் நம் ஒவ்வொருவரின் உட்திடம்.
ஒரு பருவத்தில் மற்றொரு பருவம் இல்லை. ஒன்றுக் கொன்று மாறுபட்ட அனுபவ நிலைகள். ஆனால் அவற்றிலும் தொடர்ந்து இருப்பது ‘நான் எனும் ஆத்மா’.
தினமும் அனுபவிக்கும் துயில் அனுபவமும் ஓர் ஆதாரம். ‘நான் உடல், நான் ஆண், நான் பெண், நான் ராஜா, நான் ஏழை’ என்ற எந்த விதமான வேறுபாடுகளோ, தீர்மானங்களோ ஆழ்துயிலில் அடங்கும் போது, அழிகின்றன.
‘நான் உடலே’ என்பது, ஜீவன் தோற்ற மாயையிடம் தோற்ற நிலை. அந்த ‘நான்’ உண்மையல்ல. அந்த ‘நான்’ மமதை. அந்த ‘நான்’ அஹங்காரம்.
மாறி மாறி வரும் அனுபவ நிலைகளிலும்,, மாறாத ‘சச்சித் ஸ்வரூபம்’ ஆத்மாவாக ‘நான், நான்’ எனும் ஓயாத துடிப்பாக, உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அதுவே ‘நான் எனும் ஆத்மா’.
எல்லா சுக துக்க நிலைகளும் கடந்த அமைதியாகிய ஆனந்த நிலையிலேயே நிறைந்திருப்பதால், ‘சத்’, ‘சித்’, ‘ஆனந்தம்’ எனும் சச்சிதானந்தமாய் ஆத்மா, எங்கும், எப்போதும், எல்லாத் தோற்றங்களுக்கும் ஆதாரமாக, அமைதியுடன் விளங்குகிறது.