Sri Dakshinamurthy Stotram

PDF View

SriDakshinamurthyStotram-FinalVersionWEB
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

பாடல் – 8

விஶ்வம் பஶ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்ப₃ந்த₄த:
ஶிஷ்யாசார்யதயா ததை₂வ பித்ருபுத்ராத்₃யாத்மனா பே₄த₃த:  |
ஸ்வப்னே ஜாக்₃ரதி வா ய ஏஷ புருஷோ மாயாபரிப்₄ராமித:
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||8||

 

தன்னைமறைத் திடமாயமுழுத்
தடையாக ஆனததன் –  தன்மையாலே
பன்னுசெயல் உடையன்விளை
பயனுரியன் ஆவனெனப் – பலருமாகி

நண்ணுகுரு சீடனுரு
நயந்தபிதா பிள்ளைஎனப் – பலவுவேடம்
இன்னுமுற வாகித்தனுள்
இரண்டுபல பேராகி – எழுப்பிவையம்

முன்னுவிழிப் பாலுலகு
மூடுகன வாலுலகு – முகிழஏற்றிப்
பின்னுமனு பவசீலப்
பேறுகலைப் பேதமதி –  பிரவாகமான

வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!

 

முதல் வரி

விஶ்வம் = உலகம்; பஶ்யதி= பார்ப்பவன்; கார்யகாரணதயா =  காரணம், காரியம் என்றதாக; ஸ்வ ஸ்வாமி = பொருளுக்கு உரிமையானவன்;  ஸம்ப₃ந்த₄த: = எனும் உறவுடன்;

இரண்டாம் வரி

ஶிஷ்யாசார்யதயா = குரு சீடன் என்றதாக;  தததை₂வ  = அப்படியே; பித்ருபுத்ராத்₃யாத்மனா = பிள்ளை, தந்தை எனும் வடிவமாக;  பே₄த₃த: = வேறுபாடுகளுடன்;

மூன்றாம் வரி

ஸ்வப்னே = கனவில்; ஜாக்₃ரதி வா = விழிப்பிலும்;  ய: = எந்த;  ஏஷ  புருஷ: = இந்த ஜீவன்; மாயா = மாயையின்;  பரி = முழுதும்; ப்₄ராமித: = குழம்பியவன்;

நான்காம் வரி

தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு;  நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்);  ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே  = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும்  ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.

கருத்து

எந்த புருஷன் மாயையினால் முற்றும் மயக்கம் பெற்றவனாய், செயல், பயன் எனும் உடமை உடையவன் எனவும், அதுபோன்றே மாணவன், ஆசிரியன் எனவும், தந்தை, மகன் எனவும் பலவிதமாக உருவத்திலும், உறவுகளிலும் வேறுபாடுகள் கற்பித்துக் கொண்டு, விழிப்பு, கனவு எனும் அனுபவ நிலைகளில், உலகத்தினை (தன்னிலும்) வேற்றுமையாகக் காண்கிறானோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!

குறிப்பு

உலகில் ஒருவன், தான்  செயல் செய்வபவன் என்றும், செயல்களின் பயனை அனுபவிப்பவன் என்றும், அதே போல  மாணவனாகவும், ஆசிரியராகவும்,  தந்தையாகவும், மகனாகவும் என ஒருவனே பல பாத்திரங்களாக, உறவினாலும், செயலினாலும் பலவாக விளங்குகின்றான்.   அத்தகைய வேறுபாடுகள் விழிப்புலக அனுபவங்களைப் போலவே, கனவுலக அனுபவங்களிலும் நடக்கிறது.

இருப்பினும்,  தாம் ஒருவனே எல்லாப் பாத்திரங்களாக விளங்குவது அறியப்படுவது போலவே,   எல்லா அனுபவநிலைகளிலும், மாறாமல் இருப்பது ஆத்மா எனவும், வேறுபாடுகள் விளங்கிக் கொண்டிருக்கும் உலகங்கள் எல்லாம் தோற்ற மாயை எனவும் தெளிந்து கொள்ள வேண்டும்.

தோற்றங்கள் எல்லாம் மாயை என்றால், தோற்ற மாயையான உலகத்தில் விளங்கும் சாத்திரங்களும், சாத்திரங்கள் தரும் குருவும் கூட மாயையாகத் தான் இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறதே?

தோற்ற மாயையுள் அடங்கியதால், நாம் சாத்திரங்களும், குருவும் கூட தோற்ற மாயைதான் என எடுத்துக் கொண்டாலும், அவையும் ஞான விழிப்புக்குப் பயன் தருவன என உணர வேண்டும்.

கனவில் புலி வந்து பயமுறுத்தும்போது, கனவைத் தொலைத்து,  விழிப்பு நிலையை நாம் அடைவது போலவே,  தோற்ற மாயையில் இருக்கும் சாத்திரத்தின் அறிவும், குருவின் அறிவுரையும், நமக்கு ஞான விழிப்பினைத் தரும். எனவே சாத்திரமும், குருவும் எந்நிலையிலும் உண்மைக்கு வழிகாட்டும் எனும்  உறுதி கொள்ள வேண்டும்.

ஆகையால் உலக வழக்கத்தில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பொறுப்பிலும், உறவிலும், அதற்கான கடமைகளைச் செய்யும் போதும், அச்செயல்களை எல்லாம் தன்னில் ஏற்றிவைக்கப்பட்ட சுமையை இறக்கி வைக்கும் கடனாக, பிணையின்றிச் செய்ய வேண்டும்.    ஒரு விளையாட்டாக,  நமது கடமைகளுக்கான பதவிகளை,  ஏற்றுக் கொண்ட நாடக வேடமாய்,  நன்றாக நடத்தி முடிக்க வேண்டும்.

அப்படியானால், முக்தி எனும் விடுதலை என்பது  எது?

அது, தோற்ற மாயத்திலிருந்து வேறுபட்ட ஆத்மாவே ‘தான்’ எனும் உணர்ந்த நிலை! முக்தி என்பது அடையக் கூடிய பொருள் அல்ல. உணரக் கூடிய நிலை.  எனவே முக்தியடைந்த ஜீவன், ஆத்மாவாகவே இருக்கிறது.  அந்த ஜீவன் முக்தனுக்கு உலகம் ‘மித்யா’ எனும் உண்மை தெரிவதால், விழிப்புலகையும், ஓர் கனவாய் ரசித்துக்கொண்டு, ஈரற்ற உண்மையிலேயே நிலைத்து இருக்க முடிகின்றது.

இப்பாடலில், அவ்வாறாக உலகம் தோற்ற மாயை எனவும், அதில்  விளையும் உறவுகளும், செயல்களும்  தோற்ற மாயையே  எனவும் அறிகின்ற ஜீவன், அவ்வறிவின் முதிர்ச்சியால், ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை அடைந்த ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாக, அண்டியோருக்கு அருள்பாலிக்கும் ஞான குருவாக விளங்குவதாகப் பணிகின்றது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Related Posts

Share this Post

Leave a Comment