Sri Dakshinamurthy Stotram
பாடல் – 9
ஹிமாம்ஶு: புமான்
இத்யாபா₄தி சராசராத்மகமித₃ம் யஸ்யைவ மூர்த்யஷ்டகம் |
நான்யத்கிஞ்சன வித்₃யதே விம்ருஶதாம் யஸ்மாத்பரஸ்மாத்₃விபோ₄:
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே || 9||
மயமும்வளி மாவெளியும் – மாற்றமாகி
தண்ணிலவும் சூரியனும்
தகைபுருடன் ஆகுமிவை – தாங்கமேனி
மின்னசைவும் அசையாத
மேனிகளும் தாவரமும் – மிக்கஞாலம்
முன்னுமதெண் தேகமென
முற்றுமறி வாலுணர – முடிவுமாகும்
என்னதது போலயிலை
எங்குமுள தேதுமிலை – என்றுஞானத்
திண்ணமடை வார்கள்முனி
தீர்வுமிகு வார்களெதோ – அதுவுமான
வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!
முதல் வரி
பூ₄: = பூமி; அம்பா₄ம்ஸி = நீர்; அனல:= அணைக்க முடியா தீ; அநில: = காற்று; அம்ப₃ரம் = வானம்; அஹர் நாத₂ = பகலின் தலைவனான சூரியன்; ஹிமாம்ஶு: = சந்திரன்; புமான் = உயிரினங்கள்;
இரண்டாம் வரி
இதி =என; ஆபா₄தி = விளங்குகிற; இ த₃ம் = இந்த; சர அசர = அசையும் அசையாத; ஆத்மகம் = தன்மையுடைய; யஸ்யைவ= யாருடைய; மூர்த்தி அஷ்டகம் = எட்டுவித உடலாக;
மூன்றாம் வரி
ந அன்யத் = (ஆன்மாவைத் தவிர) வேறுபாடு இல்லை; கிஞ்சன = சிறிதேனும்; வித்₃யதே = கிடையாது; விம்ருஶதாம் = ஆய்ந்துணர்பவர்களுக்கு; யஸ்மாத் = எந்த; பரஸ்மாத்₃ = மேலான; விபோ₄: = பிரம்மத்தை;
நான்காம் வரி
தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு; நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்); ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.
கருத்து
நிலம் நீர், நெருப்பு, வளி, ஆகாயம், சூரியன், சந்திரன், புருஷன் என, அசையும், அசையாத் தன்மையுடனாகிய உலகங்கள் எல்லாம், யாருக்கு எட்டு உடலாக விளங்குகிறதோ, (இவ்வுண்மையினை) ஆய்ந்து தெளிவருக்கு, எங்கும் பரந்திருக்கும் இப்பொருளைக் காட்டிலும் வேறு ஒன்றும் இல்லையோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!
குறிப்பு
இப்பாடல், அத்வைத முடிவை முற்றும் ஏற்கும் முதிர்ச்சி இல்லாதவர்க்கும் பயன்படும் வழியாக, உலகையே இறைவனாகப் பார்க்கும் பண்பினைத் தருகின்றது.
அத்வைத முடிவான ‘பிரம்மம் சத்யம்’ என்பதை ஏற்றுக் கொள்வதில் கடினமில்லை. ஏனெனில், எல்லா மதங்களும், அறிவியல் வழிகளும் கூட, நிலையான ஒரு பொருள் எப்போதும் இருக்கிறது என்பதை முன் நிறுத்துகின்றது.
ஆனால் மற்றொரு அத்வைத முடிவான ‘ஜகந் மித்யா’ என்பதைப் புரிந்து ஏற்பதுதான் கடினம். இது உலகவியலான கல்விகளால், கலைகளால், செயல்களால், எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. ஏனெனில், சுக துக்கங்களும், அவற்றின் காரணமான விருப்பு வெறுப்புக்களுமே, நமது வாழ்க்கையை அமைப்பனவாய் இருக்கின்றன. வெளி விவகாரங்களால் பெறும் சுக துக்கங்களும், அதற்குக் காரணமான பொருட்களும், உறவுகளும் அழிந்து போவன, எப்பொழுதும் மாறிக் கொண்டே போவன என்றெல்லாம் நாம் தெரிந்திருந்தாலும், அவற்றையே தேடி, அவற்றிலேயே வாழ்வின் குறிக்கோள் இருப்பதாக, நாம் நம்மை அமைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே, உலகத்தையும், அதன் அனுபவத்தையும் தோற்ற மாயை என ஏற்பதற்கு, நமக்கு ஆழமான உறுதியும், மனத் தெளிவும் அவசியம் வேண்டும்.
எனினும் தோற்ற மாயை என்பதற்காக, உலகத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல ஞானம். இறைவனாகிய ஈஸ்வரனே உலகங்களை, தோற்ற மாயமாக ஏற்றி வைத்தார் என்றால், அந்தத் தோற்ற மாயமான உலகமும் புனிதமானதாய்த்தான் இருக்க வேண்டும்! அதனை ஏன் விலக்க வேண்டும்! படைத்தல் ஆகிய ஐந்தொழில்களும் இறைவனின் திருவிளையாடல் எனில், அந்த விளையாட்டில் நமக்கெல்லாம் பங்குள்ளதென்றால், அதனை மறுத்து எந்தப் பரிசை முக்தி எனும் பதவி தந்து விடப் போகிறது?
இக்கேள்விகள் எல்லாம் நியாயமும், தூய நோக்கமும் கொண்டவைதான். முதலில், உலகம் தோற்ற மாயம் எனச் சொல்வதனால், அது பிழை என்றோ, தீயது என்றோ பொருளில்லை. அதன் முக்கியக் குறிக்கோள், உலகின் நிலையற்ற தன்மையைத் தெளிந்து கொள்ள வேண்டும் என்பதே!
தோற்ற மாயம் எனத் தெளிந்தால், இவ்வுலகை விட்டு ஓடி விடு என்றும் வேதாந்தம் சொல்லவில்லை. ஈஸ்வரனின் படைப்பாகிய விளையாட்டைக் கண்டு களி, அந்த விளையாட்டில் ஈடுபட்டு இருந்தும், அத்தோற்ற மாயைக்குள் கட்டுப்படாமல் இருக்கக் கற்றுக் கொள் என்று தான் கூறுகிறது.
அதனால் முக்தி என்பது பதவியோ, பரிசோ அல்ல, அது முற்றும் விழிப்புற்ற ஆத்மனாக இருத்தல் என்பதே என அறிந்து கொள்ள வேண்டும்.
எப்படி அந்நிலையை அடைவது?
அதற்கு, அத்தகைய அறிவுக்கு உயர்த்திக்கொள்ள, நமக்குள் திடமான மனதையும், அறிவுத் தெளிவையும் ஏற்படுத்திக் கொள்ளுதலே முதற்படி. அதற்குச் சரியான வழியிலே நம் வாழ்க்கை அமைய வேண்டும்.
விருப்பு, வெறுப்பு எனும் கொடிய விதைகள்தான், ஸம்ஸாரம் எனும் பிறவிப் பெருமரத்தை நமக்குள் வளர்க்கிறது என்பதால், விருப்பும் வெறுப்பும் இல்லாத வாழ்வையே, நாம் வாழ வேண்டும். அதற்கு அடிப்படைத் தேவை அன்பு.
அன்பு மட்டுமே நமது மொழியாக, வழியாக ஆக வேண்டும். அன்பினாலேயே, தோற்ற மாயை எனக் காட்டப்பட்ட உலகத்தையும் இறைவடிவமாக நேசிக்கும் திறன் அமைய முடியும். அன்பின் திரளால் மட்டுமே, உலகத்தைப் புனிதமாயும், அது தோற்ற மாயை எனினும் இறைவனின் புனிதப் படைப்பு எனவும் பார்க்கின்ற முதிர்ச்சியைப் பெற முடியும்.
இதுவே இப்பாடலின் கரு.