Sri Dakshinamurthy Stotram
பணிவுரை
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் என்பது, பகவான் ஆதி சங்கரர் அருளிய துதிப்பாமாலை. இந்நூல் தக்க குருவின் தயவால் பொருளுணர்ந்து போற்றிப் படித்துணர வேண்டிய மறை விளக்கம்.
பொதுவாக, ‘ஸ்தோத்திரம்’ எனும் சொல்லுக்கு இறைவனைப் போற்றிப் பணிகின்ற பாடல் என்பதே பொருள். அத்தகைய ஸ்தோத்திரப் பாடல்கள், பக்தி சார்ந்து, இறைவனைப் போற்றுகின்ற புகழ்ச்சியாகவும், வணங்குகின்ற இறைஞ்சலாகவுமே இருக்குமேயன்றி, வேதாந்த விசாரம் எனும் மறைபொருள் ஆய்வினைத் தருவதற்காக இருப்பதில்லை.
ஆனால், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் இந்தப் பத்துப் பாடல்களும், துதிப்பாடல்களாக மட்டும் அல்லாது, ஆழ்ந்த உபநிடதக் கருத்துக்களைச் சுமந்து இருக்கும் ஞானப் புதையலாக விளங்குகின்றன. எனவேதான் இப்பாடல்களால் பயன்பெற, ஞான வேட்கையும், இறை பக்தியும் கொண்டு, தக்க நற்குருவினை அடைந்து, தெளிவுற உணர்வது அவசியமாகின்றது. அத்தகைய தேடலை உடைய அன்பர்களுக்கு ஓர் துணையாக இருக்க வேண்டும் எனும் பேராசையினாலேயே, இப்பெரு நூலுக்குத் தமிழ் வடிவிலான இச்சிறு முயற்சி, இறையருளால் கனிவுற்றது.
‘ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி’ எனும் திருநாமத்தில் மூன்று சொற்கள் உள்ளன. ‘ஸ்ரீ’ எனும் முதற்சொல்லுக்கு மாயை எனும் தன்னுடைய பரசக்தியைத் தன் கட்டில் வைத்திருப்பவர் என்பது ஒரு பொருள். ‘தக்ஷிணா’ எனும் சொல்லுக்குத் தெற்குத்திசை என்றும், ‘மூர்த்தி’ என்பதற்கு வடிவம் என்றும் பொருள். அதனால், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி எனும் திருநாமம், மாயா சக்தியை ஆட்கொண்டு, தென்திசை நோக்கி அருள் தந்து அமர்ந்திருக்கும் ஈஸ்வரன் எனக் காட்டுகின்றது.
அந்தகன் எனும் மரண தேவனுடைய திசை தெற்கு என்பது மறையோர் மரபு. அதனால் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, அந்தகன் இருக்கும் திசை நோக்கி அருள் பாலிப்பதால், மரணம் எனும் காலக் கட்டுப்பாட்டினை அவிழ்த்தெறியும் பர அறிவினைத் தருபவரும், மாயையாகிய பரசக்தியைத் தன்னுடன் கொண்டவரும் ஆகிய ஈஸ்வரன் என்றும் பொருள் தெளிகின்றது.
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி எனும் சொல்லை, வடமொழி விதிப்படி, ‘ஸ்ரீ’, ‘தக்ஷிண:’ மற்றும் ‘அமூர்த்தி’ என்றும் கொள்ளலாம். ‘தக்ஷிண:’ என்ற சொல்லுக்கு தேர்ந்த திறமைசாலி என்பது பொருள். அதனால் இங்கே ஒரு திறமைசாலியைப் பற்றிப் பேசப்படுகிறது என்றும் கொள்ளலாம். எதில் திறமைசாலி? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைச் செய்து அருளும் ஒப்பற்ற திறமைசாலியாக ஈஸ்வரன் இருக்கின்றான் என்பதையே இப்பெயர் காட்டுகின்றது.
செயலற்ற பரப்பிரம்மமே, ஈஸ்வரனாகச் செயலாற்றுகின்றது என்பது எதனால்?
ஒன்றேயாகிய பரப்பிரம்மம், தனது சக்தியாகிய மாயை அல்லது பராசக்தியைத் துணையாகக் கொண்டு ஐந்து செயல்களையும் ஆள்பவனாக இருக்கும்போது, ‘ஈஸ்வரன்’ என்று ஆகிறது. ‘ஸ்ரீ தக்ஷிண:’ எனும் சொற்பகுதி, இவ்வாறு மாயையுடன், திறமைசாலியாக, ஈஸ்வரன் ஐந்தொழிலைச் செய்பவர் என்று காட்டுகின்றது. இவ்வைந்து தொழில்களும், அன்னை பராசக்தியின் விளையாட்டிற்காகவே நடக்கிறது என்பதும் ‘லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம்’ காட்டும் உட்கரு.
ஆனால், மாயையைத் தன் கட்டில் வைத்திருக்கும் ஈஸ்வரன், அதேசமயம் உருவங்களற்ற, குணங்களற்ற பரப்பிரம்மமாகவும் இருக்கிறார். இதனையே ‘அமூர்த்தி’ என்ற சொல் காட்டுகின்றது. சக்தியுடன் கூடிய ஈஸ்வரனே, உண்மையில், ஈரற்ற பிரம்ம தத்துவம் என்பதும் இத்திருநாமத்தினால் தெளிகின்றது.
எனவே ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் என்பது, எல்லா வடிவமும், கலைகளுமான சிவசக்தியினரைத் துதிக்கும் பாடல்களாகவும், அதே சமயம், குணங்களோ, வடிவங்களோ அற்ற (நிர்க்குண, அருவமான) பரப்பிரம்மத்தை வேதாந்த விசாரமாகப் பணிந்து, அப்பேருண்மையை ஆய்கின்ற பாடல்களாகவும் ஆகின்றது. அதனால்தான், பாடற்பயன் விளக்கமான பத்தாவது பாடலில், இத்தோத்திரங்களைப் பொருளுணரக் கேட்டுப் படித்துச் சிந்தித்து, எப்பொழுதும் அதன்படி நடப்பவர்களுக்கு, பரப்பிரம்ம தத்துவத் தெளிவும், முக்தியும் கிடைக்கும் என்று மட்டுமில்லமால் இடைப்பயனாக, அட்ட சித்தியும், நவநிதியும் தடையின்றிக் கிடைக்கும் என்றும் காட்டப்பட்டன.
இப்பாடல்களின் நோக்கத்தை அறிமுகமாகச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வது, அவற்றின் நுணுக்கத்தை ஆழ்ந்து பயில்வதற்கும், நல்லாய்வு செய்தற்கும் துணையாகும்.
பகவான் ஆதி சங்கரர், வேதாந்தத்தில் மறைந்து விளங்கும் பேருண்மையான ‘ஈரறுமெய்’ எனும் அத்வைத தத்துவத்தை எடுத்தோதி, தாம் வாழ்ந்த காலத்தில், தவறானதாயோ, குறைகளுற்றதாயோ, முழுதும் நிறைவற்றதாயோ விளங்கிய பலவித சமய நெறிகளை நல்வழிப்படுத்தும் பொருட்டு, கருணையால் வாதிட்டு, அகண்ட பாரத நாடெங்கும் நல்லுண்மையான ஞான தீபம் ஏற்றி அருளியுள்ளார். அன்னாரின் தீபம் இன்றும் என்றும் வழிகாட்டும் ஒளி விளக்கு.
வேத சாரமாகிய பெருங்கடலின் தத்துவ விசாரணைகளும், விளக்கங்களும் கொண்டதான அத்வைதப் பெருநெறி, நமக்கு முக்கியமான இரு தீர்வுகளைத் தருகின்றது.
முதல் தீர்வு ‘பிரம்மம் சத்யம், ஜகந் மித்யா’ என்பதாகும்.
இதில் இரண்டு ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன. ஒன்று பிரம்மம் எனும் இறைசக்தியின் உண்மை, மற்றது ஜகம் எனும் உலகங்களின் தன்மை.
‘பிரம்மம்’ என்பது பரம்பொருள் அல்லது இறைவனைக் குறிப்பது. எது மாறாமல், தொடர்ந்து, எப்பொதும் நிலைத்து இருக்கிறதோ அதுவே ‘சத்தியம்’ என்பது. எனவே ‘பிரம்மம் சத்யா’ என்பதன் பொருள் இறைவன் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், எப்போதும் தொடர்ந்து இருக்கும் உண்மை. அது ‘உள்ளது’. இத்தீர்ப்பை வேதங்களைச் சார்ந்த எல்லாச் சமய வழிமுறைகளும் உண்மையாக ஏற்றுக் கொண்டுள்ளன. கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான வேதங்களைச் சாராத பிற மதங்களும் கூட இவ்வுண்மையை ஏற்றுக் கொள்வன. எனினும், வேதங்களைச் சாராத மதங்களில் சில, முக்கியமாக புத்த மதம், சூன்ய வாதம் எனும் ‘ஒன்றுமே முடிவில் இல்லை’ எனும் கோட்பாட்டினைக் கொண்டு, அதனால் சத்தியமான பொருள் என எதுவுமே இல்லை என்று தீர்மானிக்கிறது.
இரண்டாம் கருத்தான ‘ஜகந் மித்யா’ என்பதன் பொருள் ‘உலகம் ஒரு தோற்ற மாயை’ என்பது ஆகும். இக்கருத்தை வேதங்களைச் சார்ந்த மற்ற சமய நெறிகள் முற்றிலும் ஏற்கவில்லை. அது போலவே கிறிஸ்தவம், இஸ்லாம் முதலான மதங்களுக்கும், மத சார்பற்ற கொள்கை உடையவர்களுக்கும், ‘உலகம் ஒரு தோற்ற மாயை’ எனும் கருத்து ஏற்று கொள்ள முடியாததாய் இருக்கிறது.
சூன்ய வாதம் கொண்ட புத்த மதம் ‘உலகம் பொய்’ எனும் கோட்பாட்டினைக் கொண்டு இருக்கிறது. இது கிட்டத்தட்ட அத்வைத கருத்துக்கு அருகிலிருந்தாலும், ‘பொய்’ என்பதற்கும், மித்யா அல்லது ‘தோற்ற மாயை’ என்பதற்கும் வேறுபாடு இருப்பதனால், சூன்ய வாதிகளும், ‘ஜகந் மித்யா’ என்பதை ஏற்க மறுத்தவர்களாகவே ஆவார்கள்.
‘பொய்’ என்பது எப்பொழுதும் இல்லாதது. ‘மித்யா’ என்பது அனுபவத்தில் இருப்பது போல் தோன்றுவது. நிலையற்ற அனுபவங்களுக்குள் உண்மையாகத் தெரிவது எனினும், சத்யமல்லாதது. கால, தேசப் பரிமாணங்களால் மாற்றவும் அழியவும் உட்படுத்தப்பட்டது.
‘மித்யா’ எனும் சொல்லை எம்மொழியிலும் தக்க மாற்றம் செய்வது கடினம். சத்தியம் அல்லாதன எல்லாம் மித்யா எனக் கொள்வதே மித்யா எனும் சொல்லின் பயனை உணர வழி.
எளிய உதாரணங்கள் உதவக் கூடும்.
முயலின் கொம்பு என்பது பொய். ஏனெனில் அது யாருடைய அனுபவத்திலும் இல்லை. கனவில் காணும் புலி, கனவு அனுபவத்தின் போது மட்டுமே ஏற்றுக் கொண்ட உண்மை, ஆனால் விழித்த போது பொய். எனவே கனவுப்புலி ஒரு மித்யா என்றாகும்.
வேதாந்தம் காட்டும் மற்றுமொரு உதாரணம், கயிற்றைப் பாம்பென நினைத்து மருளும் அனுபவம். அந்த அனுபவத்தின் போது, பாம்பு இருப்பது உண்மை; ஏனெனில் அவ்வனுபவம், உண்மையில் பாம்பு ஏற்படுத்தும் பயம் முதலான எல்லா விதமான அனுபவங்களையும் கொடுக்கின்றது. ஆனால், அது வெறும் கயிறு என உணரும் போது, பாம்பு என்பது பொய்யாகி விடுகிறது. எனவே கயிற்றில் காணும் பாம்பு ஒரு மித்யா.
அத்வைதம் அவ்வாறே விரித்து, நமது அனுபவ உலகங்கள் எல்லாமே மித்யா அல்லது தோற்ற மாயை எனக் காட்டுகிறது. இதனை ஏற்றுக் கொள்வது பலருக்கும் எளிதல்ல. நாம் பார்த்து, தொட்டு, ருசித்து, அனுபவித்து வரும் உலகமும், பொருட்களும் எப்படி மித்யாவாகும்? அவை உண்மையாகத் தானே இருக்கின்றன? விழிப்பு நிலை அனுபவங்களை எப்படிக் கனவுலக அனுபவங்களுக்கு உதாரணமாய்க் காட்ட முடியும்?
இம்மாதிரியான கேள்விகள் நமக்கு எழுவது இயல்பே. ஏனெனில் ‘விழிப்புலகே சத்தியம்’ என்ற தவறான ஆனால் அழுத்தமான நம்பிக்கையில்தான் நாம் உலகிலே வாழ்ந்து வருகிறோம்.
புற அறிவியல் முறைகளும் அப்படித்தான். உலகங்கள் ‘ஏன்’, ‘எப்படி’ வந்தன எனும் கேள்விகளாலேயே ஆய்வுகள் செய்யும் புற அறிவியல், நம்மை மேலும் மேலும் மிரள வைக்கும் தோற்ற மாயைகளுள் ஆழ்த்தி, அணைத்து, இழுத்துச் செல்லுவதாகும். புற அறிவியலைப் போன்றதல்ல, அக அறிவியலாகிய வேதாந்தம். இங்கே முக்கியக் கேள்வி, ‘இவை எல்லாம் யாருக்காக’ என்பதுதான். அப்படி ஆயும் போது, அக்கேள்வியின் விடைகளும், தொடர் வினாக்களும், மேன்மேலும் நம்மை நாமே அறியும் ஆத்ம தத்துவத்தில் ஆழ்த்தி ‘நான் யார்’ எனும் ஞான வேள்வியில் சேர்த்து, அத்வைதத் தீர்வாகிய பேருண்மையில் விடையாக முடியும்.
‘நான் யார்’ எனும் ஞான வேள்வியினைச் செய்ய, மனிதர்களாகிய நாமெல்லோருமே உரிமையும், கடமையும் கொண்டிருக்கிறோம் எனக் காட்டிக் கொடுத்த வள்ளல் பகவான் ரமண மகரிஷி.
நமக்கு வரும் மற்றொரு ஐயம், ‘சரி, உலகம் மித்யா எனில், மனிதர்களாகிய நாம் உலகில் இருப்பதால், நாமும் மித்யா அல்லது தோற்ற மாயை ஆகிவிட்டோம் என்று ஆகிறதே’ என்பது! இதை எப்படி ஏற்பது? இதற்கும் நாம் கனவுலகை ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ள வேண்டும். கனவில் நாம் நமக்குள்ளேயே, பலரையும் பல பொருட்களையும் சமைத்து. அதனூடே, நம்மையும் நாமே படைத்து, கனவுலக அனுபவத்தைக் கொள்கிறோம். கனவு, விழிப்புற்ற உடனே பொய்யாகி விட்டது என்றாலும், கனவில் இருந்த நாம், நம்மைப் பொய்யாக ஏற்பதில்லையே! அதனால், மித்யா எனும் தோற்ற மாயையினுள்ளும் சத்யத்தின் வெளிப்பாடு இருக்க முடியும் என்று ஆகிறதே!
இதனைப் புரிந்து கொள்ள, தோற்ற மாயை என்பது, ஓர் உண்மையின் மேல் ஏற்றி வைக்கப்பட்ட (super-imposed) பொய் என நாம் அறிய வேண்டும். அதாவது, தோற்ற மாயை எனில், அதற்கு ‘அதிஷ்டானம்’ அல்லது ஆதாரம் என ஒன்று உண்மையாக இருக்க வேண்டும்.
மித்யாவாகிய கனவுப்புலியினை ஏற்றி வைக்க மனம் எனும் ஆதாரம் இருப்பது போல, மித்யாவாகிய கயிற்றுப்பாம்பினை ஏற்றி வைக்கக் கயிறு எனும் ஆதாரம் இருப்பது போல, மித்யாவாகிய அனுபவ உலகங்களை ஏற்றி வைக்க ஆத்மா எனும் மெய்ப்பொருள் எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க வேண்டும். உயிர்களெல்லாம் ஜீவராசிகள் எனப்படும். ஜீவன் என்பது மனிதர்களாகிய நம்முள் உயிர்த்திருக்கும் ஆதாரம். ஜீவாத்மா எனும் சொல்லால், ஜீவனாகிய உயிர்களுக்குள் ஆதார சத்தியமாக விளங்கும் ஆத்ம தத்துவம் என்று கொள்ள வேண்டும்.
சூன்யவாதத்தைக் கொண்ட நெறிகளும், பொருள் சார்ந்து பகுத்தறியும் அறிவியலும் (objective science) தவிர, மற்ற எல்லா நெறிகளும், உயிர்களுக்குள் ஆத்மா ஒன்று இருப்பதை ஏற்கின்றன. அதனை உயிர் என்றும், ஆழ் மனம் என்றும் பல பெயர்களிட்டும், குணங்களிட்டும் அழைத்தாலும், ஏதோ ஒரு ஆழ் சக்தியே சடப் பொருளுக்குள் உயிர்த்திருக்கிறது என்பதை ஏற்கின்றன.
அத்வைதத்தின் அடுத்த முக்கியமான தீர்வு. ‘ஏகம் ஏவ அத்வைதம் சத்யம்’ என்பது. அதாவது, சத்தியம் என்பது ஒன்றே, அது ஈரற்றமெய் எனும் தீர்வு. ‘த்வைதம்’ என்பதன் பொருள் ‘இரண்டானது’ என்றால், அதற்கு மாற்றாக, ஏன் ‘ஏகம்’ அல்லது ‘ஒன்று’ எனச் சொல்லி இருக்கக் கூடாது? எதற்காக அத்வைதம் அல்லது ஈரற்றது எனச் சொல்ல வேண்டும்?
வேறொன்றும் இல்லை என்றால், ஒன்று என எண்ண ஏதுமில்லையே? மேலும் ஒன்று எனச் சொன்னால், அது பல இருப்பதாகவும் காட்டக் கூடும். உதாரணமாக, ஒன்று கூட்டினால் இரண்டாக முடியும். ஒன்றைப் பிரித்துப் பல பின்னமாக்க முடியும். எனவேதான் ஈரற்றது என அழைப்பதன் மூலம், சத்தியம், பலவாகக் கூட்டப்படவோ, பிரிவாக வகுக்கப்படவோ ஆகாமல் இருக்கிறது எனச் சுட்டிக் காட்டப்பட்டது. சம்ஸ்கிருத மொழி வழக்கின்படி, ‘அ’ எனும் எழுத்தினை ‘த்வைதம்’ எனும் சொல்லொடு சேர்த்து அத்வைதம் என வேதாந்தத்தில் விளக்கப்பட்டது.
‘பிரம்மம் சத்யம்’ எனும் முதல் தீர்வினோடு ‘ஏகம் ஏவ அத்வைதம் சத்யம்’ என இணைத்துப் பார்த்தால், எங்கெல்லாம் சத்தியத்தின் வெளிப்பாடு பரவிக் கிடக்கிறதோ, அவை எல்லாம் வேறல்ல, ஈரற்றமெய்யான பிரம்மத்தின் வெளிப்பாடு என்று தானே ஆக வேண்டும்! அப்படியானால், ஜீவன் எனும் ஆத்ம தத்துவம், ஈஸ்வரன் எனும் பர ஆத்ம தத்துவமே ஆகும் அல்லவா! அதாவது ஈஸ்வரனே ஜீவனாக எங்கும் உயிர்த்திருக்கிறது.
‘தத் த்வம் அஸி’ அதாவது ‘அது நீயாக இருக்கிறாய்’ எனும் வேத மஹா வாக்கியமும் இந்த ஜீவ-ஈஸ்வர உறவினைச் சுட்டிக் காட்டுவதாய் இருக்கிறது.
‘த்வம்’ எனும் பதம் உயிர்த்திருக்கும் ஜீவர்களைக் குறிக்கின்றது. தாம் மட்டுமே எப்போதும் உள்ளதாக இருக்கின்ற, சத்தியமாகிய பரம்பொருளே படைத்த உலகங்களுக்கு மூல காரணமாகவும், அவ்வுலகங்களுக்கு மூலப்பொருளாகவும் இருக்கிறது. எனவே எல்லா உலகங்களும், உயிர்களும் மூல காரணமும், மூலப் பொருளாகவுமான பிரம்மத்துள் அடக்கம். நாம் கனவில் படைக்கின்ற அனுபவ உலகங்கள் எல்லாம், நம்மாலேயே நம்முள்ளே தோற்றுவிக்கப்பட்டு, அழிக்கப்படுவது போலவே, ஈஸ்வரனது மாயையினாலேயே எல்லா உலகங்களும், உயிர்களும் தோற்றுவிக்கப்பட்டு ஐந்தொழிலால் ஆளப்படுகின்றன.
பிரம்ம தத்துவ வெளிப்பாடான ஈஸ்வரனே (தத்), ஆத்ம தத்துவ வெளிப்பாடான ஜீவன் (த்வம்) ஆகிறான் என்பதையே ‘அஸி’ என்னும் சொல் சுட்டிக்காட்டி, ஜீவ-ஈஸ்வர உறவினை விளக்குகின்றது. இதுவே ‘தத்வமஸி’ எனும் பெருவாக்கியத்தின் சுருக்கமான பொருள்.
இந்த மஹா வாக்கியத்தினைக் கருவாகக் கொண்டே, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தின் முதல் மூன்று பாடல்களும் அமைந்துள்ளன.
முதல் பாடல் ‘த்வம்’ எனும் சொல்லினை, ஜீவனுக்கும், ஜகத்துக்கும், அதாவது நமக்கும், நமது அனுபவ உலகங்களுக்கும் உள்ள உறவினைக் காட்டி விளக்குகின்றது.
இரண்டாம் பாடல் ‘தத்’ எனும் சொல்லினை, ஈஸ்வரனுக்கும், ஜகத்துக்கும் உள்ள உறவினைக் காட்டி விளக்குகின்றது.
மூன்றாம் பாடல் ‘அஸி’ எனும் சொல்லின் பொருளாக, ஈஸ்வரனே ஜீவனாக உயிர்த்துள்ள உண்மையை விளக்குகின்றது.
‘தத்வமஸி’ எனும் மஹா வாக்கியத்தின் பொருள் ‘ஜீவனே கடவுள்’ என்பதல்ல, ‘கடவுளே ஜீவன்’ என்பது, இது ஒரு முக்கியப் பாடம்.
நாலாம் பாடலில், பகவான் ஆதி சங்கரர், ஒன்றேயான ஆத்மா ‘சத்’ என எப்போதும் உள்ள பொருளாய் எதிலும் விளங்குவது போலவே, ‘சித்’ என எப்போதும் ஒளிரும் ஞானமாய், அந்த ‘சத்’ பொருளுடன் பிணைந்த ‘சித்’ பொருளாய், அதாவது ‘சத்சித்’ வடிவமாய் இருக்கிறது எனக் காட்டுகின்றார்.
சத் என்பது ‘உள்ளது’. சித் என்பது ‘உணர்வது’. உள்ளது எதுவென உணர்வது ஞானம். அந்த ஞானம் இல்லை எனில், இருப்பினை உணர்வது எப்படி! எனவே சத்தும், சித்தும் பிரிக்க முடியாததாக, ஆத்மாவே எங்கும் விளங்குகின்றது. இதற்குப் பல துளைகளுள்ள குடத்தில் ஒளிரும் ஒரு விளக்கினை ஆத்மாவிற்கு உதாரணம் என்று காட்டி, பகவான் ஜீவாத்ம தத்துவத்தைக் காட்டுகின்றார்.
ஐந்தாம் பாடலில், படைத்த உலகங்கள் மித்யா எனவும், அதன் ஆதாரமாகிய ஆத்மா சத்தியம் எனவும் ஆனதால், எது ஆத்மா, எது ஆத்மா அல்லாத (அநாத்மா) தோற்ற மாயை என நாம் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம் எனவும் பகவான் காட்டுகின்றார். பகுத்தறிவினால், தொகுத்துணரல் அவசியம் என்பதே இப்பாடலின் கரு.
ஆறாம் பாடல், ஆத்ம தத்துவத்தை வாதிக்கும் ஒரு வலிய கருத்துக்குப் பதிலாக அமைகிறது. விஞ்ஞான தத்துவம், சூன்ய தத்துவம் எனுமிரு வழிகளில் ஆராய்ந்த புத்தம், மற்றும் அதனைச் சார்ந்த மதங்கள், ‘உலகம் பொய்’ எனவும், அதனால் தூக்கத்தில் ஒன்றுமிலாதது போலவே, முடிவில் ஒன்றுமில்லை எனக் கூறி, ஆத்ம தத்துவத்தை விலக்குகின்றன. இதன் பொய்மையைச் சுட்டிக் காட்டி, ஆத்ம தத்துவத்தை நிறுவுகின்றது இப்பாடல்.
ஏழாம் பாடல், ‘நான்’ எனும் அஹங்காரம் வேறு, ‘நான்’ எனும் ஆத்மா வேறு என்பதை உணர்த்துகின்றது. ‘நான்’ எனும் அஹங்காரம் தீயதன்று எனினும், அது மாயத் தோற்றத்தைப் பிழையாகத் ‘தான்’ என்ற ஏற்றதினால், ‘ஆத்மாவாகிய நான்’ எனும் பேருண்மையை விட்டி விலகி இருக்கின்றது. இப்பிழையைத் தவிர்க்கத் தெளிவு தருவதே இப்பாடல்.
எட்டாம் பாடல், ஈரற்றமெய்யாம் அத்வைத நெறியினை மீண்டும் ஒரு முறை ‘உலகம் தோற்ற மாயை’ என நிறுவி முடிக்கிறது. நம்முள் ‘நான் ஆத்மா’ என உணருதல் மிக முக்கியம் என்றாலும், முன்னே விரிந்த உலகங்கள் ‘தோற்ற மாயை’ என உணருவது அதை விட முக்கியம். ஏனெனில், பரந்த உலகமே நம்மைப் பல திசைகளிலும் இழுப்பது. எனவே, ‘ஜகந் மித்யா’ எனும் கோட்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது இப்பாடல்.
ஒன்பதாம் பாடல் நம் எல்லோருக்கும் அவசியமான கருத்தினைத் தருவது. அத்வைதம் புரியவில்லையே, அல்லது அதன் தீர்வினை முற்றும் ஏற்க முடியவில்லையே என்று நாம் நினைப்போமானால், அதனால் தவறில்லை. அத்வைதக் கருத்துக்கள் மிக நுணுக்கமும், முதிர்ச்சியும் கொண்டவையாக இருக்கின்றன. எனவே, பகவான் ஆதி சங்கரர், முதல் எட்டுப் பாடல்களைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், இந்த ஒன்பதாம் பாடலில், மிக எளிதாக, எல்லோராலும் இனிதாக ஏற்றுக் கொள்ளத்தக்க, அவசியமான வழியினை அளிக்கின்றார். அது, பார்க்கும் உலகை, உயிரை எல்லாம், இறைவனாகப் பார் என்பதே ஆகும். அப்பார்வையினாலேயே, நம்முள் பக்குவம் விழுந்து, முளைத்து, வளர்ந்து, ஈரறுமெய்யான அத்வைத தீர்வுகள் தெளியும்.
பத்தாவது பாடல், இத்துதிகளைப் பொருளுணர்ந்து படித்துக் கேட்டு, ஒழுகி வருபவர்கள் அடையும் நற்பலன்களை உறுதி செய்வதாக அமைந்து, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் எனும் இந்நூல் நிறைவு அடைகிறது.
இந்நூலின் மற்றொரு சிறப்பு, பாடலின் தலைவனான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை, பாடலாசிரியர் அணுகுகின்ற முறை. பகவான் ஆதி சங்கரர், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை ஓர் ஜீவனாகவே பார்த்து, பிறகு அந்த ஜீவன், பழுத்த ஆத்ம ஞானத்தை அடைவதன் மூலம், ஜீவ-ஈஸ்வர ஐக்கிய அனுபவப் பெருநிலையை அடைந்ததாகவும், அப்பெருநிலையை, தம்மை வேண்டி அடைவோருக்குக் கருணையால் நேரடியாகக் காட்டித் தருவதற்காக, சின்முத்திரையுடன் அமர்ந்து மௌனத்தால் ஜகத் குருவாக விளங்குவதாகவும் பொருள் கொள்ளும்படியாக இப்பாடல்களை அமைத்துள்ளார். உருவ வடிவில் இருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாகிய ஈஸ்வரனை, ஜீவனாக இருந்து, ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை உணர்ந்து, உணர்த்தி அருள் பாலிக்கும் ஆதிகுருவாகக் காட்டும், பகவான் ஆதி சங்கரரும், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியாகிய ஈஸ்வரனது திருஅவதாரமே என்பதிலும் ஐயமில்லை.
மிக உயர்வான இப்பாடல்கள் அத்வைத வேதாந்த ஆழ்கடலுக்குள் நம்மை ஆழ்த்தி, முக்தியாகிய முத்தினை எடுத்துத் தரவல்லன. ஆழ்பொருள் விளக்கங்கள் இப்பாடல்களில் ஏராளம். அதனாலேயே, பகவான் ஆதி சங்கரரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ஸூரேசுவராசாரியர் எழுதிய ‘மானஸோல்லாஸம்’ எனும் விளக்க நூல் முதலாக, பல பெரிய சான்றோர்களும், ஆய்வும், விளக்கங்களும் கொடுத்துள்ளார்கள். இன்றும் பல பெரியோர்களும், இப்பாடல்களுக்கு நல்விளக்கங்களைத் தருகிறார்கள். அத்தகைய குருமார்களைத் தேடிப் பணிந்து, நாடிக் கனிந்து, இப்பாடல்களின் உட்பொருளைப் பெறுதலே உய்யும் வழி என்பதால், அடியேன் இங்கு தமிழாக்கிக் காட்டிய பாடல்கள், நன்முனைப்பால் கொடுக்கப்பட்ட நந்நூல் அறிமுகம் என்றே கொள்ளத் தகும்.
இப்பாடல்களை மொழிபெயர்த்தளிக்க அருளமைத்த இறைவனுக்கும், ஸ்ரீ சங்கராச்சாரிய குருமார்களின் பாதார விந்தங்களுக்கும் கோடிப் பணிவார்ந்த நமஸ்காரங்கள்.
மீ. ராஜகோபாலன்
2 ஜூலை 2014