Sri Dakshinamurthy Stotram
பாடல் – 1
பஶ்யன்னாத்மனி மாயயா ப₃ஹிரிவோத்₃பூ₄தம் யதா₂ நித்₃ரயா |
ய: ஸாக்ஷாத்குருதே ப்ரபோ₃த₄ஸமயே ஸ்வாத்மானமேவாத்₃வயம்
தஸ்மை ஸ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||1||
கவிநகரம் பிம்பமெனக் – கண்டபோது
முன்விரியும் புவிஎனவும்
மூலமிறை யாமெனுவும் – முனிதல்போல
தன்புலனும் பலவடிவும்
தடவுலகும் வேறுஎனத் – தந்தசூதும்
உள்மனமும் மாயவலை
உல்குதுயி லாலென்றே – உணரமாறும்
பின்தெளியும் விடியுமது
பிரம்மமதே ஆத்மனெனப் – பிரிவுஇல்லாப்
பேரருளை ஓர்பொருளாய்
நேர்முகமாய்ப் பார்ப்பனென – நிறைவதான
வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!
முதல் வரி
விஶ்வம் = உலகம்; த₃ர்பண: = கண்ணாடி; த்₃ருஶ்யமான = தெரிவதான; நக₃ரீ = நகரம்; துல்யம் = சமம்; நிஜ அந்தர் க₃தம் = தன்னுடைய உள்ளே இருப்பதான;
இரண்டாம் வரி
பஶ்யன் = பார்த்துக் கொண்டு; ஆத்மனி = தன்னிடத்தில்; மாயயா = மாயா சக்தியினால்; ப₃ஹிரி உத்₃போ₄தம் இவ = வெளித் தோன்றலாக; யதா₂ = எப்படி; நித்₃ரயா = துயில்வதால்;
மூன்றாம் வரி
ய: = யார்; ஸாக்ஷாத் குருதே = அறிவினால் நேரடியாய் உணரத் தெரிகிறாரோ; ப்ரபோ₃த₄ஸமயே = (விழிப்பாகிய) ஆத்ம ஞானம் உதிக்கும் சமயத்தில்; ஸ்வாத்மானம் = தன்னை; அத்₃வயம் = இரண்டற்றதாக;
நான்காம் வரி
தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு; நம இத₃ம் = இந்தப் பணிவு (முழுமையாகட்டும்); ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.
கருத்து
கண்ணாடியில் தெரியும் நகரத்தின் பிம்பத்திற்குக் காரணம், அதன் முன்னிருக்கும் உலகம் என்பதை (அவ்வுலகத்திற்கு மூலகாரணம் அதைப் படைத்த பரம்பொருள் என்பதை) உணர்வது போலவே, (அறியாமையாகிய) மாயத் துயிலினால், புலனும், அறிவும் தன்னுள்ளேயே இருக்கும் உலகங்களை, வெளியே வேறெனப் பார்த்து மயங்குகின்றது என்பதை (ஆன்ம அறிவால்) உணர்ந்து, அவ்விழிப்பு நிலையில், இரண்டற்ற ஆன்மாவையே, எது, எங்கும் காண்கின்றதோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்.
குறிப்பு
விஸ்வம் எனும் உலகத்தை மித்யா அல்லது தோற்ற மாயை எனக் காட்ட, பகவான் ஆதி சங்கரர், முதல் வரியில் இரண்டு எடுத்துக்காட்டுக்களைத் தருகின்றார்.
ஒரு உண்மையை விளக்க, எடுத்துக்காட்டுக்கள் அவசியமே. ஆனாலும் எந்த ஒரு எடுத்துக்காட்டு மட்டும், நாம் விசாரித்துக் கொண்டிருக்கும் உண்மையைப் பற்றிய எல்லா வினாக்களுக்கும் விடை தருவதாக ஆகாது. முக்கியமாக, நாம் வேதாந்த விசாரம் அல்லது ஆய்வு செய்யும் போது, சான்றோர்கள் தரும் எடுத்துக் காட்டுக்களை, எதனை விளக்க அவ்வெடுத்துக்காட்டுக்கள் காட்டப்பட்டனவோ அவற்றின் பொருட்டே பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட எடுத்துக்காட்டுகள் தேவையாக இருக்கலாம். அதனை ஒட்டியே, பகவான் இங்கே இரண்டு எடுத்துக்காட்டுக்களைத் தருகின்றார்.
முதல் எடுத்துக்காட்டு, உலகம் என்பது கண்ணாடியில் தெரியும் நகரத்தைப் போன்றது. அதாவது, உலகம், கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் போல ஒரு தோற்ற மாயை அல்லது மித்யா. அதாவது அந்த பிம்பம் இருக்கிறது (fact) ஆனால் அது சத்தியம் அல்ல (not truth).
இந்த எடுத்துக்காட்டை ஒட்டி, நாம் ஜீவனுக்கும், உலகுக்கும் உள்ள உறவினை அறிந்து கொள்ள வேண்டும்.
கண்ணாடி என்பது உலகைப் பிரதிபலிக்கும் ஆதாரமாக இருப்பது போல, ஆத்மா ஜீவனது அனுபவ உலகங்களுக்கும் ஆதாரம். அதாவது, உலகங்கள் எல்லாம் ஆத்மாவிலேயே விளங்குகின்றன. பிம்பம் கண்ணாடியைச் சார்ந்து இருப்பது போல, உலகங்கள் ஆத்மாவைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், கண்ணாடியைப் போல, ஆத்மாவோ முற்றும் சுதந்திரமாக, கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கின்றது. மேலும் அழகோ, அழகற்றதோ, நல்லதோ, தீயதோ, எதுவானாலும் அவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி, தான் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருப்பது போலவே ஆத்மாவும் உலகங்களின் உறவினால் பாதிப்பு எதுவும் இன்றி விளங்குகிறது.
இதனையும் தாண்டி ஆராய்ந்தால், கண்ணாடியில் தெரியும் நகரத்திற்குக் காரணமான வெளி உலகம் என ஒன்று இருக்க வேண்டுமே, மற்றும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தினை பார்ப்பவன் யாரென அறியவேண்டுமே என்றெல்லாம் வினாக்கள் எழுவதால், பகவான் ஆதி சங்கரர் இரண்டாவது எடுத்துக்காட்டினையும் தருகின்றார்.
‘நிஜ அந்தர் கதம்’ எனத் தன்னுள்ளே இருக்கும் கனவுலகங்கள் போன்றதே விஸ்வம் எனும் வெளிஉலகம், அதாவது கனவில் ஜீவன் தனக்குள்ளேயே உலகங்களையும் உயிர்களையும் படைத்து அனுபவம் அடைவது போலவே, விஸ்வம் எனும் வெளியுலகும், ஈஸ்வரனின் மாயை எனும் கனவில் ஆக்கப்பட்டது என காட்டப்படுகிறது.
இது எப்படி முடியும்?
இவ்வரிய தத்துவம் ஆழ்ந்த விசாரணைக்குரியது.
கனவில் எப்படி அனுபவப்பொருள், அனுபவிப்பவன், அனுபவிக்கும் கருவி எனக் காரண காரியங்கள் (அதாவது மூலமும், விளைவும்) எல்லாம் ஆத்மாவிடமிருந்தே வருகிறதோ, அவ்வாறே வெளியில் காணும் உலகமும் வருகிறது.
ஜீவன் தினமும் ஏற்கும் மூன்று ‘அவஸ்தா’ அல்லது அனுபவ நிலைகள் – விழிப்பு, கனவு, ஆழ்துயில் என்பன. நாம் விழிப்பு நிலையையும் அப்பொழுது அனுபவிக்கும் உலகங்களையும் சத்தியம் என நினைத்திருக்கிறோம். துயில் எனும் அரிய சக்தியினால், நாம் தினமும் விழிப்புநிலை மறைக்கப்பட்டு, வெளியில் இருக்கும் உலகினை அறியாமற் போகின்றோம். அப்போது, கனவுலகம் ஒன்றைப் படைத்து, அதில் தன்னையும் அனுபவிப்பவனாகப் படைத்து, அனுபவிப்பவன், அனுபவிக்கும் பொருள், அனுபவிக்கும் கருவி என எல்லாவற்றுக்கும் மூலமாக நமது ஆத்மாவே இருக்கிறது. அந்தக் கனவுக்குள் ஒருவர் வந்து, ‘இப்பொழுது அனுபவிப்பது உண்மையல்ல, கனவுதான்’ என்றால், எப்படி நாம் அதை ஏற்போம்! அது அப்போதைக்கு உண்மையாகத்தானே இருக்கிறது! ஆனால், விழிப்பு அடையும் போது, அக்கனவு சத்தியம் அல்ல எனத் தெளிகின்றோம்.
வேதாந்தம், விழிப்பு நிலையில் நாம் காணுகின்ற விஸ்வம் எனும் உலகமும், மித்யா எனப் பறைகிறது. இதனை நாம் ஏற்றுக் கொள்வது முதலில் கடினம். கனவுக்குள் கனவு உண்மையாய் இருப்பது போலவே, விழிப்பில் விழிப்புலகம் உண்மையாய்த்தான் நமக்குத் தோன்றுகிறது. இதுவும் ஒரு தோற்ற மாயை என்பதுதான் பேருண்மை.
இப்பேருண்மையை உணர்பவன் ஆத்மஞானியாவன். அவனே உண்மையில் விழிப்பு அடைந்தவன்.
அப்படி விழிப்பு அடைந்தவனுக்கு, இந்த வெளிஉலகம் இருக்கிறதா என்ற கேள்வி மிக முக்கியமானது.
கனவு முடியும் போது, கனவுலகு அழிவது போல, ஆத்ம ஞானியின் ஞான விழிப்பினால், அவனுக்கு விஸ்வம் எனும் வெளி உலகம் அழிய வேண்டும் அல்லவா? அப்படித்தான் இருக்கும் எனினும், ஆத்ம ஞானிகள், உடலால் இவ்வுலகில் வாழும் வரைக்கும், விழிப்பு நிலையில் விஸ்வம் எனும் இவ்வுலகை, அது மித்யா எனத் தெரிந்தும், ஒரு கனவுபோல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.
சூரியன் என்பது உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை எனும் அறிவியல் உண்மை புரிந்தாலும், நாம் அனுபவத்தில் சூரிய உதயத்தையும், மறைவையும் பார்த்து ரசிப்பது போலவே, ஆத்ம ஞானி விஸ்வமாகிய விழிப்புலகினை, அது மித்யா எனும் அறிவுடனேயே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பேருண்மையை இரண்டாம் வரியில் ‘பஸ்யந்’ எனும் சொல் காட்டுவதோடு, அனுபவ உலகங்களைப் ‘பார்த்துக் கொண்டிருப்பவனே ஜீவன்’ என்னும் உண்மையையும் சுட்டிக் காட்டுகிறது.
‘நித்ரயா’ என்ற ஆழ் துயிலில் ஆழ்த்தும் சக்தியே விழிப்பினை மறைப்பது, மறைத்த பின் கனவினை வளர்ப்பது எனத் தோற்ற மாயைகளை ஏற்படுத்தவும், அவற்றிலிருந்து அவ்வப்போது ஓய்வு பெற்று உறங்கவும் காரணமாக இருக்கின்றது. எப்படி உறக்கத்தினால் உள்ளே இருக்கும் உலகம், கனவில் வெளியில் வருகிறதோ, அது போலவே ஈஸ்வரனது நித்ரா சக்தியாகிய மாயை, விஸ்வம் எனும் உலகங்களைக் காட்டுகின்றது.
உலகங்கள் எல்லாம் தோற்ற மாயை எனத் தெளிந்தால், எப்போதும், எங்கும் உள்ளது ஆத்மா ஒன்றே என்ற முடிவு வரும். அப்படி வருவது தான் உண்மையான விழிப்பு. இதுவே மூன்றாம் வரியில் ‘பிரபோதசமயே ‘எனப்பட்டது.
அத்தகைய ஞான விழிப்பினை அடையும் ஜீவன் எவரோ, அவரே ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி என்று காட்டிச் சொல்லில் அடங்கா அப்பேருண்மையைச் சுட்டிக் காட்டும் சின்முத்திரையுடன் விளங்கும் தக்ஷிணாமூர்த்தி வடிவத்தைப் பணிகின்றது இப்பாடல்.
ஆழ்துயிலானது ஜீவனை ஆட்கொள்ளும் சக்தி. மாறாக, மாயா சக்தி, ஈஸ்வரனால் ஆளப்படுவது.
ஆழ்துயில் அனுபவம், வேதாந்த விசாரணைக்கு மிகவும் முக்கியமான பாடம். பொதுவாக நாம் துயிலை ஒரு சோம்பலின் அடையாளமாகத்தான் பார்க்கின்றோம். ஆனால், துயில் என்பது மிகப் பெரிய வரம். அது உடலையும், மனதையும் ஆத்மா தன்னுள் ஈர்த்து, தோற்ற மாயைகளைக் கலைத்து, சுகித்து இருக்கும் நிலை. நாம் அதனை ஆத்ம விசாரத்துக்கு ஏற்ற அனுபவப் படியாகப் பார்க்க வேண்டும். இது ஆறாவது பாடலில் மீண்டும் சுட்டிக் காட்டப்படுகிறது.