Sri Dakshinamurthy Stotram

PDF View

SriDakshinamurthyStotram-FinalVersionWEB
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

பாடல் – 2

பீ₃ஜஸ்யாந்தரிவாங்குரோ ஜக₃தி₃த₃ம் ப்ராங்னிர்விகல்பம் புன:
மாயாகல்பித தே₃ஶகாலகலனா வைசித்ர்யசித்ரீக்ருதம் |
மாயாவீவ விஜ்ரும்ப₄யத்யபி மஹாயோகீ₃வ ய: ஸ்வேச்ச₂யா
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||2||

 

வேறற்றுப் பிரம்மத்துள்
வித்துள்முளை போலுலகம் –  விதித்தமாயக்
கூறுற்று பரிணாமக்
கூர்வெளியும் காலமெனக் – கோர்த்ததாகி

வேறுற்றுக் கோடிவடி
வேயுற்றுப் பேரகிலம் – விளைத்ததான
விரிவுற்ற பிரம்மத்தின்
விருப்பினால் எழுமுலகம் – மாயமாகும்

சீருற்ற தாமிச்சை
ஜெகவித்து ஆகவெறுந் – தோற்றமாக
செயலற்று மாயாவிச்
செயலாக மாயோக – சீலமான

வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!

முதல் வரி

பீ₃ஜஸ்ய = விதை; அந்த: = உள்ளே;  இவ= இப்படி; அங்குர: = செடி; ஜக₃தி₃த₃ம் = இந்த உலகம்; ப்ராங் = முன்; நிர்விகல்பம் = வேறுபாடு  இல்லாமல்; புன: = மீண்டும்;

இரண்டாம் வரி

மாயா = மாயையினால்; கல்பித = ஏற்றிவைக்கப்பட்ட;  தே₃ஶகால = இடம், காலம்; கலனா = தொடர்பினால்; வைசித்ர்ய = விதவிதமான; சித்ரீக்ருதம்  = வரையப்பட்டதாக;

மூன்றாம் வரி

மாயாவி இவ =  மாயாவியைப் போல; விஜ்ரும்ப₄யத் = தோற்றுவிக்கப்பட்டது; அபி மஹாயோகி₃ இவ = மேலும் மஹா யோகியைப் போல;   ய: ஸ்வேச்ச₂யா  = எது தனது விருப்பத்தாலேயே;

நான்காம் வரி

தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு;  நம இத₃ம் = இந்தப் பணிவு (முழுமையாகட்டும்);  ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே  = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும்  ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.

கருத்து

இவ்வுலகம் முதலில் விதையுள் முளையைப் போல, வேறற்றதாய் (பிரம்மத்துள்ளேயே) இருந்தது.  பின்பு (பிரம்மத்தின் சக்தியாகிய) மாயையினால் கற்பிக்கப்பட்ட இடம், காலம் எனும் (கூரிய) பரிணாமங்களின் தொடர்பினால்,  வேற்றுமை அடைந்து, படிப்படியாக பலவகைப் பட்டதாக இருக்கிறது.  எந்த (ஆத்மப் பொருளானது) இவ்வுலகத்தை மாயாவி போலும், மஹாயோகி போலும், தனது விருப்பத்தாலேயே (செயலில்லாமலே) தோற்றுவிக்கிறதோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!

குறிப்பு

முதற்பாடலிலே ஜீவனுக்கும் உலகிற்கும் உள்ள உறவினைக் காட்டி, உலகங்களுக்கு, அவற்றைப் பார்ப்பவனான ஜீவனே ஆதாரம் எனக் காட்டிய பகவான ஆதி சங்கரர், இந்த இரண்டாம் பாடலில்,   உலகிற்கும், ஈஸ்வரனுக்கும் உள்ள உறவினைக் காட்டி,  ‘தத்’ எனும் சொல் விளக்கமான ஈஸ்வரனே  உலகங்களுக்கு ஆதாரம் என்று காட்டுகின்றார்.

உலகில் பலரும் பல விதமான வழியிலே, உலகைப் பற்றிய ஆய்வும், உறுதியும் கொண்டு இருக்கிறார்கள்.  உலகம் படைக்கப்படவில்லை, அது எப்போதும் இருப்பது என்பது ஒரு சாரார் எண்ணம்.  உலகம் படைக்கப்பட்டது என்றும் அதைப் படைத்தது கடவுள் என்றும் ஒரு நம்பிக்கை.

கடவுள் நம்பிக்கை உள்ள எல்லா நெறிகளும், உலகம் படைக்கப்பட்டது பற்றியும், உலகுக்கும், படைப்பாளிக்கும் உள்ள உறவு பற்றியும் பல்வேறு  கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.    கடவுளால் உலகம் படைக்கப்பட்டாலும், தாய் வேறு, சேய் வேறு என்பது போல் கடவுள் வேறு, உலகம் வேறு என்றும், மரமும் கொடியும் போல், கடவுளைச் சார்ந்து  உலகம் இருக்கிறது என்றும்,  வயிற்றுள் இருக்கும் நுண்ணுயிர்கள் போல், கடவுளுக்குள் உலகம் அடங்கி இருக்கிறது என்றும், பலரும் பல விதமாகக் கருதுவர்.

மிகவும் வியக்கத்தக்க வழியில் பகவான் ஆதி சங்கரர் எடுத்துக் காட்டும் அத்வைத வேதாந்தம், உலகம் என்பது படைக்கப்படவே இல்லை எனவும்,  அது  தோற்றத்தில் ஏற்றி வைக்கப்பட்டது போல்  (superimposed) இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.

எதிரிலும்,  அனுபவத்திலும் திடமாக நாம் பார்க்கும் உலகங்கள் தோற்றத்தில் காட்டப்படும் ஓவியம் போன்றது என்பதை நம்மால் எப்படி எளிதாகப் புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியும்!    அதற்கு உதவத்தான் படிப்படியான வேதாந்த ஞான விசார முறைகளைப் பெரியோர்கள் படைத்துத் தந்திருக்கிறார்கள்.

முதற்படியாக, உலகம் படைக்கப்பட்டது எனும் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கு ஈஸ்வரனே  காரணம் எனும் கருத்தினை  அத்வைத வேதாந்தம் எடுத்துக் கொள்கிறது.

படைத்தல் முதலான எந்த ஒரு விளைவுக்கும்  காரணங்கள் வேண்டும் அல்லவா?   வேதாந்தம் எவ்விளைவுக்கும், இரண்டு முக்கிய காரணங்கள் தேவை என்று காட்டுகின்றது.  முதற் காரணம் நிமித்த காரணம் அல்லது செய்வதற்கான  ஆற்றல் (efficient cause) என்பது. இது அறிவு சார்ந்தது.   இரண்டாவது  உபாதான காரணம்  (material cause) அல்லது  செய்வதற்கான மூலப்பொருள்  என்பது.   இது சடப்பொருளானது.  மூலப்பொருளும், விளைக்கும் திறனும் இருந்தால்தானே ஒரு விளைவை ஏற்படுத்த முடியும்!   மற்றபடி, விளைவிப்பதற்கான கருவி, சூழ்நிலை எனப் பல துணைக் காரணங்கள் இருப்பினும், அவற்றையும் இவ்விரண்டினுள் அடக்கி விடலாம்.

உலகம் என்பது படைக்கப்பட்டது என்றால், அது ஒரு விளைவு அல்லது ‘காரியம்’. படைத்தவன் ஈஸ்வரன் என்றால், ஈஸ்வரன் ‘காரணம்’.   இப்பாடலின் முதல் வரியில், இக்காரிய காரணம் காட்டப்படுகிறது.  விதைக்குள் வேறுபாடுகள் ஏதுமில்லாமல், செடி அடங்கி இருந்து, பிறகு முளைத்துப் பல வேறுபாடுகளுடன் வளர்ந்து, மீண்டும் விதைக்குள் அடங்கி இருப்பது போல,  ஜகத் எனும் உலகம், பிரம்மத்துளிருந்து முளைத்து, பிரம்மத்துளேயே அடங்குவதான நிலையை மீண்டும் மீண்டும் அடைகிறது என்று காட்டப்படுகிறது.

இதற்கு நிமித்த காரணம் ஈஸ்வரனே என்றும்,  ‘ஸ்வ இச்ச’ எனும் பதம், ‘தனது விருப்பத்தாலேயே’, ஈஸ்வரன் விளைவை ஏற்படுத்துகிறார் என, ஈஸ்வரனின் செயலுக்குக் கருவிகள் ஏதுமில்லை எனவும் காட்டுகின்றது.

பெரிய யோகியர் தமது எண்ணத்தாலேயே பலனை ஏற்படுத்துவது போல, இறைவன், தனது விருப்பம் ஒன்றினாலேயே எதனையும் தோற்றுவிக்கின்றார் என்றும்  மந்திரவாதிகள் எப்படி இருப்பதை இல்லாததாயும், இல்லாததை இருப்பதாயும் காட்டுகின்றார்களோ, அதேபோல மாயையின் சக்தியினால், ஈஸ்வரன் நிமித்த காரணமாய் இருந்து உலகங்களைத் தோற்றுவிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஈஸ்வரனது மாயா சக்தியே, உலகைப் படைப்பதற்கான உபாதான காரணமாக இருக்கிறது என இரண்டாம் வரியில் காட்டப்பட்டது.  மாயையின் சக்தியால்,  காலம், தேசம் எனும் கட்டுக்களின் தொடர்பினால், வித விதமான வகைகளில், உலகங்கள் ஓவியங்களாக வரையப்படுகின்றன.

இவ்வாறு இப்பாடல்,  விஸ்வம் எனும் உலகம்,  இறைவனின்  இச்சையினால், மாயை எனும் ஆழ்துயில் போர்த்தப்பட, காலம், தேசம் எனும் பரிமாணங்களின் தொடர்பினால் நிலையற்று எப்போதும் மாறிக் கொண்டே இருப்பனவாகத் தோற்றுவிக்கப்படுகின்றன.   இதற்கு ஆதாரமாய் இருப்பது, மாயை எனும் சக்தியை ஆள்பவராக விளங்கும் ஈஸ்வரன்.  இதுவே ‘தத்’ எனும் பதத்தால் காட்டப்படுவது.

ஈஸ்வரன், மாயை எனும் சக்தியை ஆள்பவர்.  ஜீவன் மாயை எனும் சக்தியால் ஆளப்படுபவன்.   அறியாமை, மயக்கம் எனப் பலவாகிய மாயத்திறைகளை, ஆன்ம விசாரணையாகிய கத்தியினால் அறுத்த ஜீவன்,  ஆன்ம ஞானியாகி, ஜீவ-ஈஸ்வர ஒற்றுமையாகிய உயரிய அனுபவத்தைப் பெறமுடியும்.   அப்பெரும் பேற்றினை அடைந்து காட்டி, ஆட்கொள்ளும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு, இப்பணிவு முழுமையாகட்டும் என்பதே இப்பாடலின் கருத்து.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Related Posts

Share this Post

Leave a Comment