Sri Dakshinamurthy Stotram

PDF View

SriDakshinamurthyStotram-FinalVersionWEB
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

பாடல் – 3

யஸ்யைவ ஸ்பு₂ரணம் ஸதா₃த்மகமஸத்கல்பார்த₂கம் பா₄ஸதே
ஸாக்ஷாத்தத்த்வமஸீதி வேத₃வசஸா யோ போ₃த₄யத்யாஶ்ரிதான் |
யத்ஸாக்ஷாத்கரணாத்₃ப₄வேன்ன புனராவ்ருத்திர்ப₄வாம்போ₄னிதௌ₄
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||3||

 

இன்னதென இலாதனவுள்
இலங்குமொளி யாமென்றே – இருந்துகாட்டி
இருத்திவுயிர் ஊட்டியவை
இயற்பில்குண மாமென்றே – இயற்கையான

தன்னதென ஞானியரில்
தன்னிலுணர் மாமறையும் – தகுவதான
தத்வமஸி தானதுநீ
தானெனவே ஆனபயன் – தருவதாகும்

எண்ணமுடி யாதுவென
ஏற்றுவுணர் வார்களதை – ஏற்பதாலே
திண்ணமுடி வார்பிறவி
தீரமுடி வார்கருவில் – திரும்பாராக

வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!

முதல் வரி

யஸ்ய ஏவ = யாருடைய;  ஸ்பு₂ரணம் = வெளிப்பாடு;  ஸத் ஆத்மகம் = உண்மை என்று எப்பொதும் விளங்குவதானது; அஸத் கல்ப அர்த₂க₄ம் = நிலையற்ற பாவனைகளுக்குள் நுழைந்ததென;  பா₄ஸதே = தெரிகிறது;

இரண்டாம் வரி

ஸாக்ஷாத் = நேரடியாக;  தத் த்வம் அஸி  = அது நீ யாக இருக்கிறாய்; இதி = இவ்விதம்; வேத₃வசஸா = வேதாந்த வாக்கின்படி;  யோ = எது; போ₃த₄யதி = விளக்குகின்ற; யாஶ்ரிதான் = அணுகியவர்களுக்கு;

மூன்றாம் வரி

யத் = எது; ஸாக்ஷாத்கரணாத்₃ = தெளிவாகப் புரிந்து கொண்டல்; ந ப₄வே = ஏற்படாது; புன: = மீண்டும்; ஆவ்ருத்தி: = பிறப்பு; ப₄வ = சம்ஸாரம்;  அம்போ₄னிதௌ₄ =கடலில்;

நான்காம் வரி

தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு;  நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்);  ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே  = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும்  ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.

 

கருத்து

எதனுடைய விளக்கமானது, உண்மையில் இல்லாததான பொருட்களில் எல்லாம் (உயிரொளியாய்ப்) புகுந்து (அவை) இருப்பதாகக் காட்டுகின்றதோ,   எதனை அடைந்தவர்களை, தத்வமஸி எனும் ‘நீ அதுவாக இருக்கிறாய்’ எனும் வேத மஹா வாக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றனவோ,  எதனைக் காண்பதால், பிறவிப் பெருங்கடலைத் தாண்டி, மீண்டும் திரும்புதல் இல்லையோ அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!

குறிப்பு

முதற்பாடலில்  ‘த்வம்’ எனும் குறிப்பால் காட்டப்படும் ஜீவனையும், இரண்டாம் பாடலில்  ‘தத்’ எனும் குறிப்பால் காட்டப்படும் ஈஸ்வரனையும், ஜகத் எனும் உலகுடனான உறவினைக் காட்டி விளக்கிய பகவான் ஆதி சங்கரர், இந்த மூன்றாம் பாடலில், ஜீவ ஈஸ்வர உறவினைக் காட்டுகின்றார்.  ‘தத்வமஸி’ எனும் மஹா வாக்கியத்தின்படி, ஜீவனும்  ஈஸ்வரனே. அதனால், இந்தப் பாடல், மஹாவாக்கியத்தின் ‘அஸி’ எனும் பத விளக்கமாக இருக்கிறது.

படைத்த பொருளும், படைத்தவனும் வேறாக இருப்பதுதான் நமது நடைமுறை மரபு.  ஆனால், ஈஸ்வரன் தனது படைப்புக்குள்ளேயே ஊறி இருக்கிறார்.  இது எப்படி முடியும்?

முதற்பாடலில் காட்டிய ‘கனவுலகு’ உதாரணத்தில்,  ஜீவன் தனக்குள்ளேயே எல்லா உலகங்களையும் படைக்கிறது. அவ்வுலகங்களில் எல்லாப் பொருளும், செயலுமாக அனுபவிப்பவன், அனுபவிக்கும் பொருள் என யாதுமாய் ஊடுருவி இருக்கிறது.  கனவுலகில், விழிப்புலக உண்மைகள் எதுவும் உண்மையில் இல்லை எனினும்,  இல்லாத பொருளுக்கும் இருப்பதாய் உயிர்கொடுத்துக் காட்டுவது ஜீவனே.

அதே போல  விதவிதமான உலகங்களைப் படைத்த ஈஸ்வரன்,  அவற்றில் எல்லாம் கோர்த்து இலங்கி,  இல்லாதவற்றையும்  இருப்பதாகக் காட்டுகின்றான் என, இந்த மூன்றாவது பாடலின் முதல் வரி நிச்சயப்படுத்துகிறது.

எளிய வேதாந்த உதாரணங்கள் நமக்குச் சிறிது தெளிவு தரலாம்.

காரணம், காரியம் அதாவது  மூலம், விளைவு இரண்டுக்கும் உள்ள உறவு நன்கு தெளியப் படவேண்டும்.      விளைவு என்பது மூலத்தின் மாறுபாடுதான்.    மண்ணாலாகிய பானை விளைவு என்றால்,  அதன் மூலமாகிய மண் அப்பானையில்  ஆதாரமாய் இருக்கிறது. பானை எனும் விளைவு, மண் எனும் மூலத்தின்  பெயர், உரு (நாம ரூப) மாற்றமே அல்லவா?   ‘பானை இருக்கிறது’  எனக் கூறும் பொழுது,  இருப்பதாகிய சத்தியம் காரணமாகிய மண் என்றும், காரியமாகிய பானை என்பது, நாம, ரூப மாற்றங்களாகிய  மித்யா என்றும் அறிகிறோம்  அல்லவா!

அதன் பயன் என்ன?  ஒவ்வொரு விளைவிற்குள்ளும், அதன் மூலம் மட்டுமே உண்மையாய் ஊடுருவி இருக்கிறது.  அதனால், விளைக்கப்பட்ட உலகங்களில் காரணமாகிய ஆத்மா ஊடுருவிக் கிடக்கிறது.    இதுவே முதல் வரியில் அடக்கம்.

அடுத்த இரண்டு வரிகளில், எங்கும் ஊடுருவி இருக்கும் ஈசனே (தத்) நீயாக (த்வம்) இருக்கிறாய் (அஸி) என (இதி) எவர், தன்னை அணுகிய தூய சீடர்களுக்கு,  நேரடியாக உணர்பிக்கிறாரோ,  அந்த தக்ஷிணாமூர்த்தியை, நேரடியாக உணர்ந்து கொள்பவருக்கு, பிறவியாகிய பெருங்கடலில் மீண்டும் மீண்டும் விழுகின்ற இடர் இருக்காது எனக் காட்டப்படுகிறது.

‘தன்னை அணுகியவர்களுக்கு’ எனக் காட்டியதன் நோக்கம், ஆத்ம ஞானம் என்பது திடமான அறிவும், தெளிவான மனமும் கொண்டு, உறுதியான வேட்கையுடன் விழைபவருக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கத்தான்.

அதே போல  நற்குரு என்பவர், ‘நேரடியாக’ அவ்வுண்மையைக் காட்டிக் கொடுப்பார் என்பதும் சுட்டப்பட்டது.  ஒருவருக்கு பல ஆசிரியர்களும், ஆச்சாரியர்களும், வழிகாட்டிகளும் இருக்கலாம். ஆனால் நற்குரு என்பவர் ஒருவராகத்தான் இருக்க மட்டுமே. ஏனெனில், அந்த நற்குருவின் அருள் கிடைத்தவுடனேயே, ஈரற்றமெய்யான ஆத்ம ஞானம் கிடைத்து விடக்கூடும்.

‘ஸாக்ஷாத்’ எனும் சொல்லுக்கு நேரடியாய்த் தெளிதல் என்று பொருள்.  ‘அக்ஷம்’ என்பது இந்திரியங்கள் எனும் புலன் அறிவு.  பார்த்தல், கேட்டல், ருசித்தல், நுகர்தல், தொடுதல் முதலான செயல்களால், நாம் ஒன்றை விளங்கிக் கொள்வதே பிரத்யக்ஷ அறிவு என்பதாகும்.

புலனுணர்வால்  எதிரே அடைய முடியாத  அறிவை ‘பரோக்ஷம்’  அல்லது ‘புலனுக்குத் தொலைவான அறிதல்’ எனலாம்.  அது தொலைவில் உள்ள பொருளைப் பற்றிய அறிவு.

ஆனால், எந்த அறிவு புலனுணர்க்குள் அகப்படாதோ, அதே சமயம்  புலனுக்குத் தொலைவிலும் இல்லாததோ, அது ‘அபரோக்ஷம்’ எனப்படுவது.

ஆத்மா என்பது அடையப்படுவது அல்ல. அது ஏற்கனவே அடையப்பட்டது  (சித்தவஸ்து). எனவே அது அடையப்பட்டதுதான் எனக் காட்டிக் கொடுத்தவுடனேயே,  எப்படி தலைக்கு மேலே மூக்குக் கண்ணாடியை வைத்துக் கொண்டு தேடும்போது, அதன் இருப்பை உணர்ந்த கணமே, அது அடையப்படுவதுபோல,   ஆத்மா உணரப்படுகிறது.

மேலும், ஆத்மா எனும் ‘உள்ள பொருள்’ (அஹவஸ்து), புலன், பொறி, மனம் இவற்றால் அறியப்பட முடியாதது.  மற்ற பொருளை உணர, அப்பொருள் பற்றிய புலனறிவும், மனதில் நினைவும் வேண்டும்.  ஆனால் ‘நான்’ எனும் உணர்வு இவற்றை எல்லாம் தாண்டி எப்பொழுதும் துடித்துக் கொண்டிருக்கும் உள் உணர்வு அல்லவா? இருட்டில் உட்கார்ந்திருக்கும் போதும், நம்மை நம்மால் உணரமுடிகிறதே, அதற்கு வெளிச்சம் வேண்டுமா என்ன!

அது போன்றே,    தத்வமஸி எனும் வாக்கின் விளக்கமும், அதன் அனுபவமும், நேரடியாக மட்டுமே இருக்க முடியும் என்பதற்காகவே, சாக்ஷாத் எனும் சொல் காட்டப்பட்டுள்ளது.    அப்படியான அறிவு, வார்த்தைகளால் காட்டப்பட முடியாதது என்பதனாலேதான், மௌன குருவாக, ஆசான் அமர்ந்திருக்கிறார்.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Related Posts

Share this Post

Leave a Comment