Sri Dakshinamurthy Stotram
பாடல் – 5
ஸ்த்ரீபா₃லாந்த₄ஜடோ₃பமாஸ்த்வஹமிதிப்₄ராந்தா ப்₄ருஶம் வாதி₃ன: |
மாயா ஶக்திவிலாஸகல்பிதமஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||5||
ஆனவுடல் பிராணமனம் – அறிவுகோசம்
பின்னமட சூன்யநிலை
பிழையறிவால் நானென்று – பிணைவராரே
சொன்னமட மாதர்சிறு
சோடர் விழிமூடரென – சூழ்ந்தபேயால்
சுத்தமதி விட்டவராய்
மத்தமதி யுற்றுநிலை – மயங்குவாரே
பன்னும்பல வாய்மருளப்
பரவுபிணை யாய்மயங்கிப் – படுகமாயம்
பின்னுவலை யாயறுத்துப்
பிறழுமதி தானழித்துப் – பிரிப்பதான
வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!
முதல் வரி
தே₃ஹம் = உடலாகிய அன்னமய கோசம்; ப்ராணம் = மூச்சாலாகிய பிராணமய கோசம்; இந்த்₃ரியாண்யபி = இந்திரியங்களை ஒட்டிய மனோமய கோசம்; சலாம் பு₃த்₃தி₄ம் = நிலையற்ற அறிவாகிய விஞ்ஞானமய கோசம்; ச = மற்றும்; ஶூன்யம் = ஆனந்தமய கோசம்; விது₃: = அறிவர்;
இரண்டாம் வரி
ஸ்த்ரீ = மடந்தையர்; பா₃ல: = குழந்தைகள்; அந்த₄: = குருடர்கள்; ஜட₃: = சடப்பொருள், உபமான: = உவமானம். அஹம் இதி = நான் என்று; ப்₄ராந்தா: = தெளிவற்றவர்கள்; ப்₄ருஶம் = திடமாக; வாதி₃ன: = வாதிடுகிறார்கள்;
மூன்றாம் வரி
மாயாஶக்தி = மாயையாகிய சக்தி; விலாஸ = விளையாட்டினால்; கல்பித = ஏற்றி வைக்கப்பட்ட; மஹா = பெரிய; வ்யாமோஹ: = மயக்கத்தினை; ஸம்ஹாரிணே = அழிப்பவராகிய;
நான்காம் வரி
தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு; நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்); ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும் ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.
கருத்து
வல்லுடல் (அன்னமய கோசம் எனும் சோற்றால் ஆன வெளியுடல்), பிராணன் (பிராணமய கோசம் எனும் சுவாசத்தால் ஆன மெல்லுடல்), இந்திரியங்களாகிய புலன் (மனோமய கோசம் எனும் எண்ணத்தால் ஆகிய நுண்ணுடல்), அலைகின்ற புத்தி (விஞ்ஞானமய கோசம் எனும் நுண்ணுடல்), சூன்யமான இருப்பு (ஆனந்தமய கோசம் எனும் காரணவுடல்) என இவற்றையே, எவர், ‘நான்’ என்று மயங்குகிறார்களோ, அவர்கள் மடந்தையர்களுக்கும், குழந்தைகளுக்கும், குருடர்களுக்கும், மூட நம்பிக்கையாகிய பேயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் ஒப்புமை ஆவார்கள். (அத்தகு மயக்கத்தில் ஆழ்த்தி, கடந்து உள்ளே இருக்கும் ஆத்மாவே தான் எனும் உண்மையை மறைக்கும்) மாயையின் சாகஸத்தை முற்றும் அறுத்துத் துடைக்கும் தன்மையுள்ள பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!
குறிப்பு
படைக்கப்பட்டன எல்லாம் தோற்ற மாயை என்றும், தோற்ற மாயைக்கு அதிஷ்டானம் அல்லது ஆதாரமான உண்மை ஆத்மா என்றும், அந்த ஆத்மா, தம்முடைய இருப்பு எனும் ‘சத்’, ஞானம் எனும் ‘சித்’ என எவ்விரு சக்திகளும் ஒன்றுக்குள் ஒன்று பிரியாமற் பிணைந்து, விளைத்த உலகமாகிய ‘காரியத்தில்’, ஊடுருவிக் கிடக்கும் ‘காரணமாய்’ இருக்கிறது என முந்தைய பாடல்களில் நிறுவிய பகவான் ஆதி சங்கரர், இப்பாடலிலே, காரியமாகிய விளைவினை ஆராய்ந்து, காரணமான ஆத்மாவையும், காரியத்தில் கலந்திருக்கும் அநாத்மாவையும் (அதாவது ஆத்மா அல்லாத தோற்ற மாயையினையும்) பிரித்தறிய வேண்டிய முக்கியத்துவை விளக்குகின்றார். அப்படிப் பிரித்தலே உண்மையான பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவு இருந்தால் மட்டுமே, ஆத்மா ஒன்றே எனும் தொகுத்துணர்வு அடைய முடியும். அப்படிப் பகுத்தறியவும், தொகுத்துணரவும், நமக்கு நற்குருவின் அருள் தேவை என்பதையும் இப்பாடல் காட்டுகின்றது.
புராணங்களின்படி, பிரம்ம தேவன் உலகங்களை எல்லாம் படைக்க, இறைவனால் படைக்கப்பட்டாராம். தனக்கு அறிவு வந்த முதற்கணத்திலேயே, பிரம்மதேவன் ‘க:’ அதாவது ‘யார்’ எனும் கேள்வியைக் கேட்டாராம். ‘நான் யார்’ எனும் ஆத்ம விசாரணைதான் அது. அதனாலேயே, பிரம்ம தேவனுக்கு ‘க:’ என்பதும் ஒரு பெயர்.
‘நான் யார்’ எனும் வினாவே நமது முதலும் கடைசியுமான வினா. முதலும் கடைசியுமான விடை. எல்லா வேதங்களும், செயல்களும், நெறி முறைகளும் இறுதியில் இவ்வினா-விடைக்கே நம்மை இட்டுச் செல்கின்றன.
வேதாந்தம் இதற்கான ஒரு வழிமுறையாக, ‘நான் இது அல்ல’, ‘இது அல்ல’ என அனுபவ உலகங்களையும், உடமைகளையும் தள்ளித் தள்ளி, இறுதியில் தள்ள முடியாத ‘தான்’ எனும் ஆத்மாவையே ‘நான்’ என உணருதல் எனக் காட்டுகின்றது. ஆயினும் உலகே உண்மை எனவும், சுக துக்கங்களே வாழ்க்கை எனவும், விருப்பு வெறுப்பே நமது குணமெனவும் கொண்டு வாழ்கின்ற எமைப் போன்ற மனிதர்களால், எதை, எப்படித் தள்ளி, இந்த ஆத்ம ஞானத்தைப் பெற முடியும்?
அதனாலேதான், வேதங்கள், முதலில் தர்மம் எனும் நல்வாழ்க்கை நெறிகளை முதன்மைப் படுத்தி, நல்லறம், பணி, தியாகம், தியானம், பக்தி எனப் பல படிகளில் ஏறி உயர வைத்து, அப்படி அடையும் உயரத்தினால், நாம் தள்ள வேண்டிய சுமைகள் வெகுவாகக் குறைய, அதனால் நாமும் மனமும் தெளிய, அடுத்த படியாக ஞானம் எனும் வேதாந்த சாரத்தினை வைத்து இருக்கிறது. இவ்வாறு உலக வாழ்க்கையை ஒட்டியே, ஒழுக்கமுடன் வாழச் செய்து, சீர்படுத்தி, மெதுவாக, ஆனால், நிச்சயமாக, ஆத்ம ஞானத்திற்கு நாம் அனைவரையும் கூட்டிச் செல்லும் பாதையே, ஸநாதன தர்மம் எனும் நமது நெறி.
அந்த நெடும் பயணத்தினை எளிமைப்படுத்தி, முடிவான அறிவுப் பாதையை நமக்குக் காட்ட, கருணையால், பகவான் ஆதிசங்கரர் முதலாக, பகவான் ரமணர் என அவதரித்த பல அருளாளர்கள், ஆத்ம ஞானத்தினை அடையும் நேரடியான அறிவினையும் தந்திருக்கிறார்கள். பகவான் ரமணர், ‘இதெல்லாம் யாருக்கு’ எனும் கேள்வி ஒன்றாலேயே, எதனையும் விசாரித்து, ‘நான் யார்’ என அறியும் பாதைக்கு, ஒரு சுருக்க வழி காட்டிக் கொடுத்துள்ளார்.
எனவே ‘நான் யார்’ எனும் கேள்வியின் பதிலுக்கு, ‘நான் யார் அல்ல’ எனும் கேள்விகளும் முக்கியம். இது தான் இப்பாடலில் காட்டப்பட்டது.
‘நான்’ என்பதுதான், நம் எல்லோருக்கும் இயற்பெயர். பிறந்த போது, பிரம்ம தேவனைப் போல, நமக்கெல்லாம் இயற்கையில் உள்ள அடையாளம் ‘நான்’ எனும் பெயர் தான். அந்த ‘நான்’ குழந்தையாய் இருக்கும்போது, ஆத்ம ஒளியாகவே இருப்பதால், வேறுபாடுகள் பார்க்காமல், ‘யாவும் நானே’ என விளங்குகின்றது. பிறகு படிப்படியாக, பிறரின் தூண்டுதலால், பெயர் என்று ஒன்று பெற்று, அப்பெயரைத் தனது அடையாளமாகவும், பிறகு உலக அறிவு வர வர, ‘நான் ஆன்மா’ எனும் அறிவு மறைந்து, ‘என்னுடல், என் பொருள், என் உறவு’ என உடமைகளையும், ‘எனக்காக, என்னால்’ என உரிமைகளையும், ‘நான்’ என தோற்ற மாயையில் தன்னைப் பதித்துக் கொண்ட அகங்காரத்தையும் கொண்டு விடுகிறது. அப்படித்தான் நாமிருக்கிறோம்.
வேதாந்தம் எனவே நம்மை மீண்டும் பிரித்தறுத்து, உண்மையை அறியத் தூண்டுகிறது. அதற்கு உதவியாக, மனிதனின் உடற்மனக் கூறுகளைப் பற்றிய அறிவினையும் தருகின்றது. ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரம் – வல்லுடல், மெல்லுடல், வினையுடல் என நமது உடலை மூன்று வகையாகப் பார்க்கலாம். இம்மூன்று வகை உடல்களையே, ஐந்து வகை வலைகளாகப் பிணைந்திருப்பதாகவும் பார்க்கலாம். அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பன. ‘மய’ எனும் சொல்லுக்கு, ‘அதனால் விளங்கப்பட்ட’ எனும் பொருள். ‘கோசம்’ என்பதை வலை, அமைப்பு, போர்வை எனக் கொள்ளலாம்.
‘அன்ன:’ என்பது உணவு. ‘பிராண:’ என்பது மூச்சு முதலான காற்று. ‘மன:’ என்பது மனம். ‘விஞ்ஞான:’ என்பது ஆயும் அறிவு, ‘ஆனந்த:’ என்பது ஒன்றும் விளக்காச் சுகம். எனவே நாம், சோற்றால் ஆன உடல், காற்றாலான உடல், எண்ணங்களாலான உடல், ஆய்கின்ற சக்தியால் ஆன உடல், ஆழ்ந்து சுகிக்கும் தன்மையால் ஆன உடல் எனக் கொண்டிருக்கிறோம்.
இவ்வுடல்கள் எல்லாம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதையும், இவற்றில் எல்லாம் ஒட்டாமல், இவற்றுக்கப்பால் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்தியே ‘நான்’ எனும் ஆத்மா என்பதையும், அஹங்காரம் கொண்டு உலகங்களில் சுக துக்கங்களில் ஆழ்ந்து ‘நான்’ என்று இயங்கிவரும் அந்த ‘நான்’ உண்மையன்று என்பதையும் விசாரித்து அறிந்துணர்வதே ஆத்ம வித்யா எனும் ‘நான் யார்’ வேள்வி.
முதல் வரியில் உடலின் கூறுபாடுகளைச் சுட்டிக் காட்டிய பகவான், இவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளத் தெரியாமல், உடலே ‘தான்’ என மயங்கி இருப்பவர்களை, மடந்தையருக்கும், குழந்தைகளுக்கும், குருடர்களுக்கும், பித்தர்களுக்கும் இரண்டாம் வரியில் ஒப்பாகக் காட்டுவது, அவர்களின் ஒவ்வாச் சில குணங்களை உதாரணமாகத் தெளிவதற்காகவே.
உலகம் தோற்ற மாயம் என்பதாலோ, நாம் அந்தத் தோற்ற மாயத்தில் வீழ்ந்திருக்கிறோம் என்பதாலோ எந்தவிதமான தாழ்வுணர்ச்சியும் நாம் கொள்ள வேண்டியதில்லை. இவை எல்லாமே இறைவனின் திருவிளையாடல் என்றால், இத்தோற்ற மாயத் தொடர்ச்சியும், அதில் பங்கேற்கும் ஜீவராசிகளும், இருந்ததும், இருப்பதும், இருக்கப் போவதும் நிச்சயம். எனினும், இது ஒரு விளையாட்டு எனப் புரிந்து கொள்வது மிக முக்கியம். அப்போதுதான், உலகில் நம்மால் இவ்விளையாட்டில் இன்பமுற ஈடுபட முடியும். நமது துன்பத்தையும், சுகத்தையும் சமமாக ஏற்க முடியும். படிப்படியாக ஆத்ம ஞானப் பயன் பெற வேண்டுமென்றால், அப்படிகளைக் கடக்க பல முயற்சிகளைச் செய்ய வேண்டுமென்றால், அவற்றையும் இறைவனின் திருவிளையாட்டில் ஏற்று, உறுதியுடனும், உற்சாகமுடனும் நம்மால் செய்ய முடியும்.
இதுவே மூன்றாம் வரியில் காட்டப்பட்டது.
மாயையின் விளையாட்டால் விளைவது இவ்வுலகம். ஈஸ்வரன் இவ்விளையாட்டை முடித்தருளும் துணைவன், அவனே இவ்விளையாட்டை முற்றும் ஆட்டுவிக்கும் தலைவன். இப்பேருண்மையை உணர்ந்து, பிரம்ம தத்துவமே தானாகி விளங்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு இப்பணிவு முழுமை ஆகட்டும் எனப் பாடலின் இறுதி வரி காட்டுகிறது.