Sri Dakshinamurthy Stotram

PDF View

SriDakshinamurthyStotram-FinalVersionWEB
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

பாடல் – 6

ராஹுக்₃ரஸ்ததி₃வாகரேந்து₃ஸத்₃ருஶோ மாயாஸமாச்சா₂த₃னாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ஹரணதோ யோ(அ)பூ₄த்ஸுஷுப்த: புமான் |
ப்ராக₃ஸ்வாப்ஸமிதி ப்ரபோ₃த₄ஸமயே ய: ப்ரத்யபி₄ஜ்ஞாயதே
தஸ்மை ஶ்ரீகு₃ருமூர்தயே நம இத₃ம் ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே ||6||

 

தின்னவரும் ராகுநிழல்த்
தீவுதடை யாய்மறையத் – திறைகள்மூடக்
கன்னல்கதி ராய்நிலவு
கலையவொளி யாம்நிறையக் – காட்சிபோல

என்னதறி வாம்கரணம்
ஏதுமறி யாதடங்கி – இருக்கும்போது
தன்னையறி யாத்துயிலில்
தானுளதாய் ஆனபெருந் – தத்துவமாகி

பின்னர்விழி யால்வெளியில்
பேருலக மாய்ப்பிரிய – பிரக்ஞையாகி
முன்னதுயில் தானெனது
முழுநினைவில் நானெனவே – முகிழ்ப்பதான

வண்ணமுடை வடிவநெறி
வைத்துவளர் பரமாத்ம – உருவமாகும்
முன்னகுரு தக்ஷிணா
மூர்த்தியிது நற்பணிவு – முழுமையாமே!

முதல் வரி

ராஹுக்₃ரஸ்த= ராகு வினால் மறைக்கப்பட்ட; தி₃வாகர =  (பகலைச் செய்கின்ற) ஸுரியன்; இந்து₃= சந்திரன்; ஸத்₃ருஶோ  = ஒப்பானது; மாயா ஸமாச்சா₂த₃னாத் = மாயையினால் நன்கு மூடப்பட்டவனாக;

இரண்டாம் வரி

ஸன்மாத்ர: = இருத்தல் (சத் உருவமாக); கரண = அந்தகரணங்கள்;  உபஸம்ஹரண = ஒடுங்கி விட்டதால்; த: = காரணம்;  அபூ₄த் ஸுஷுப்த: = உறங்கியவன் ஆவான்; ய: புமான் =  எந்த ஜீவன்;

மூன்றாம் வரி

ப்ராக₃ = இதற்குமுன்; அஸ்வாப்ஸமிதி= உறங்கினேன் என்று; ப்ரபோ₃த₄ஸமயே = விழிப்பு அடையும்போது;  ய: = யார்; ப்ரத்யபி₄ஜ்ஞாயதே = நினைவில் கொள்கிறாரோ;

நான்காம் வரி

தஸ்மை = அவருக்கு; ஸ்ரீ கு₃ருமூர்தயே = பிரம்ம ஞானமளிக்கும் குருவின் வடிவுக்கு;  நம இத₃ம் = இப்பணிவு (முழுமையாகட்டும்);  ஸ்ரீ த₃க்ஷிணாமூர்தயே  = பிரம்ம ஞானியும், மாயை கடந்தவரும்  ஆன ஸ்ரீ தக்ஷிணா மூர்த்திக்கு.

 

கருத்து

ராகுவால் (ராகுவின் நிழலால்) மறைக்கப்பட்ட சூரியனையும் சந்திரனையும் போன்று,  அறியாமையாகிய மாய இருளில் மூடப்பட்டு, தமது கரணங்கள் எல்லாம் ஒடுங்கி உறங்கும் நிலையில்,  (எப்போதும் உள்ளதான)  எது உண்மை மாத்திரமாய் மட்டும் நிற்கின்றதோ, எது, ‘நான் முன்னே தூங்கினேன்’ என விழிப்பு சமயத்திலே நினைவூட்டிக் கொள்கிறதோ, அந்த பரமாத்மாவாகிய முதற்குரு தக்ஷிணாமூர்த்தி வடிவத்திற்கு, இப்பணிவு முழுமையாகட்டும்!

 

குறிப்பு

ஆழ் துயிலின் போது, உடலும் இல்லை, மனமும் இல்லை, ‘நான்’ எனும் அறிவும்  இல்லை, அதனால் ஒன்றுமே இல்லை எனவும், ஒன்றுமில்லா நிலையே முடிவு எனவும் வாதிட்டு, அதன் அடிப்படையில் ஆத்மா என எவ்விதத் தத்துவ ஞானமும் தேவையில்லை என்பது ஒரு சாரார் வாதம்.

வேதாந்தம் இதனை எப்படி ஆய்கிறது?

அனுபவம் என்பது அனுபவிக்கப்படும் பொருள், அனுபவிப்பவன்,  அனுபவிக்கும் அறிவு என மூன்றால் ஆனது.    அப்படியாயின்,  அனுபவம் ஒரு நேரத்தில் இல்லை எனச் சொன்னால், அதற்குக் காரணமாக,   இம்மூன்றில் ஏதேனும் ஒன்று இல்லாமற் போகலாம்.  அல்லது இம்மூன்றுமே இல்லாமற் போகலாம் என்பதாகும்.

விழிப்பு அனுபவத்தின் போது, விஸ்வம் எனும் வெளி உலகம் அனுபவப் பொருளாக இருக்கிறது.  ஜீவன் இதனை அறிபவனாகவும், அனுபவிப்பவனாகவும் இருக்கிறான்.  இப்புற உலகை அறிவதற்கு, கரணங்கள் ஆகிய கண், காது, செவி முதலான உறுப்புக்களும், அவற்றால் புலனுறிவும், அவற்றை உணரும் மனமும், ஆயும் அறிவும் இருக்கின்றன.  இக்கரணங்களில் ஞானமாகிய ஒளியைக் காரணமாகிய ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

கனவு அனுபவத்தின் போது, உடலின் தோற்ற மாயை, ஆத்மாவினுள் ஈர்த்து அழிக்கப்பட்டு விட்டது. அதனால் உடலின் வெளிக் கரணங்களும், புலனறிவும் இல்லை. அதனால் விஸ்வம் எனும் வெளி உலகங்கள் இல்லை.  ஆனாலும், மனமாகிய அந்தகரணம் ஆத்மாவில் அடங்காதபொது, அது கனவுலகைப் படைத்து,  அத் தோற்ற மாயையையும் ஆத்மாவின் ஆதாரத்திலேயே நிறுத்தி, அதனை அனுபவிக்கிறது.  எனவே விழிப்புலகிலும், கனவுலகிலும் அனுபவத்திற்கான அனுபவப் பொருள், அனுபவ அறிவு, அனுபவிப்பவன் என மூன்று தேவைகளும் நிச்சயமாய் இருக்கின்றன.

ஆனால் ஆழ்துயிலில் மனம் ஆத்மாவில் அடங்கி விடுகிறது. இதனை ‘மனோலயம்’ அல்லது மனதின் அடக்கம் எனச் சொல்லுவர் சான்றோர்.

இம்மன அடக்கம் இறைவன் நமக்கு அளிக்கும் நற்பயன்.

நாள் முழுதும் வெளி உலகில் மயங்கித் தன் உண்மையை மறந்த ஜீவனுக்கு ஓய்வு தரும் பொருட்டே, ஆழ்துயிலாகிய மாயப் போர்வையை ஆத்மா விரிக்கிறது. அதனுள், வல்லுடல், மெல்லுடல் என உடலும், மனமும், அறிவும் ஈர்க்கப்பட்டு மறைகின்றன.   கரணங்கள் இல்லை என்பதாலும், மனம் லயப்பட்டு விட்டது என்பதாலும்,   இவ்வாறு உடல், மனம், புற அறிவின் தொகுப்பே ‘நான்’ என்று இருந்த அஹங்காரமும் மறைந்து விட்டது.  அதனால் அங்கே அனுபவிக்கும் அறிவு இல்லை;  அனுபவிக்க உலகங்கள் எதுவும் இல்லை.  ஆனால் அனுபவிப்பவனான ஜீவன், ஆத்மாவின் ‘சத்’ எனும் இருப்பாய் இருக்கிறான்.

முந்தைய பாடலில், ‘சத்’, ‘சித்’ என இரண்டும் பிரிக்க முடியாமலே இருக்கும் என்றதனால்,  இங்கே ‘சத்’ மட்டும் இருப்பதெனக் கூறுவது,  ‘சித்’ இருந்தாலும், அது மனம், அறிவு ஆகிய கரணங்கள் இல்லாததால்,  உணரப்படாமல் இருக்கிறது என்பதைக் காட்டத்தான்.  எனவே அனுபவம் இல்லாத ஆழ் துயில் நிலையிலும் ஆத்மா ‘உள்ளது’.

இதை எப்படி உறுதி செய்வது?   இருத்தல் என்பது உறுதிப்பட, இருத்தலுடன் உணர்தல் எனுமறிவு வேண்டுமே!  இதற்கு வேதாந்தம் எடுத்துக் கொள்ளும் வழி,  தொடர் அறிவு வாதம் எனும் ஒரு முறை. இதைத் தான் மூன்றாம் வரியில்  ‘பிரத்யபிக்ஞா’ எனும் சொல் காட்டுகின்றது.  இதனைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒன்றை அறிவதற்குப்  புலனுணர்வு முதலான சக்தியால் கோர்த்தறியும் திறன் தேவை.  இதை  முதலுணர்தல்  (cognition) என்று எடுத்துக் கொள்வோம்.  நாம் அடையும் எல்லா அறிவுக்கும் முதல் படி, இந்த முதலுணர்தல் எனும் சக்திதான்.

இவ்வாறு முதலுணர்தலால் அடைந்த அறிவு, நினைவுகளாக மனதில் பதியப் பெறுகின்றது.  மனதின் அப்பகுதியை வேதாந்தம் ‘சித்தம்’ எனக் கொள்கிறது.

சித்தத்தில் கோர்த்த அறிவினை ஞாபகமடைதல்  (rememberance)  இரண்டாவது முறையாகும்.     முதலுணர்தலும், ஞாபகமடைதல் இவ்விரண்டுமே அறிவினை உணர்த்தும் திறன்.

வேதாந்தம் மூன்றாவதாக ‘பிரத்யபிக்ஞா’ எனும்  மீண்டுமுணர்தலைக் (recognition) காட்டுகிறது.   இது, எப்போது ஒரு பொருள் மீண்டும் புலனறிவுக்குப் புலப்படுகிறதோ, அதோடு ஞாபகத்தினால், இது முன்பே அறிமுகமான பொருள் எனும் முந்தைய அனுபவங்களையும் அறிவில் தருகிறதோ, அப்போது அடையும் அறிவு.

முதலுணர்தலின் போது,  அனுபவிக்கப்படும் பொருள், நமது புலன்களுக்கு முன்னே இருக்க வேண்டியது அவசியம்.  ஆனால் ஞாபகப்படுத்திக் கொள்ள,   அத்தகைய அவசியம் இல்லை. பிரத்யபிக்ஞா எனும்போது முன்பு அனுபவித்த பொருளின் தோற்றமும், அதனைப் பற்றிய முன் அனுபவ ஞாபகங்களும் சேர்ந்து ஒரு புதிய அறிவினைக் கொடுப்பது என்று ஆகும். அதாவது, பொருட்களும் புலனறிவுக்கு முன்னே இருக்கிறது.  முந்தைய அனுபவமும் ஞாபகமாக இருக்கிறது.

உதாரணமாக, முதல் முறையாக கவரிமான் ஒன்றின் படத்தையும் அதைப் பற்றிய விளக்கத்தையும் ஒருவன் அடைகிறான். அது அவனது முதலுணர்தல்.  சில நாட்கள் கழித்து, தன்னுடைய ஞாபகத்தில் கவரிமானைப் பற்றிய முதலுணர்வு அனுபவத்தை அறிவில் அவன் காணக்கூடும்.  மற்றொரு நாள்,  பூங்காவில் கவரிமானை நேரில் காணும்போது, ஞாபக அறிவும் தோன்றி, முன்னே பார்த்து அனுபவிக்கும் அறிவும் விளங்கும். இதுவே பிரத்யபிக்ஞா எனும் அறிவு.

இதன் அடிப்படை என்ன என்றால், முழுதுணரல், ஞாபகமடைதல், மீண்டுமுணரல் ஆகிய மூன்று அறிவுநிலைகளும் ஒரு தொடர்பு இருந்தால்தான், அல்லது இம்மூன்று அறிவும் ஒருவனுக்கே இருந்தால்தான், பிரத்யபிக்ஞா  உண்மையாகும்.  ஆழ்துயிலில் மனமும், அறிவும் இல்லையே? அதனால், ஆழ்துயில் முடித்து எழுந்தவுடன் ஒருவன் ‘நான் சுகமாகத் தூங்கினேன்’ என்று கூறினால், அது எப்படி முடியும்!

தூங்கினேன் என்பது ஞாபகமடைதலினால். ஏனெனில், நான் படுக்கச் சென்றேன், இப்போது எழுந்திருக்கிறேன், இப்படிப் பிறர் துயில்வதைப் பார்த்திருக்கிறேன் என்பதெல்லாம் காரணம்.    ‘நான்’ எனத் தன்னை உணர்தலும்,   தொடர்ச்சி நழுவாமல், விஸ்வம் எனும் வெளியுலக அனுபவங்களையும் அறியும் காரணம்,  ‘பிரத்யபிக்ஞா’ எனும் மீண்டுமுணர்தல்.  அப்படியானல் அந்த அறிவு ஆழ்துயிலிலும், கனவிலும், விழிப்பிலும் தொடர்ந்து இருந்தாக வேண்டும். அதுவே ஆத்மா எனச் சத்தியமாய் இருக்கிறது.  அதனாலேயே, தொடர்ச்சியான அனுபவ நிலைகள ஜீவன் உணரமுடிகிறது.

ஆழ்துயில் சுகம் என்பது எப்படித் தெரிகிறது?  சுகமும், துக்கமும் மனதால் விளைபவை என்றால், மனம் இல்லாத போது, ஆழ்துயிலில் சுகம் எங்கு வந்தது?  அந்த சுகத்தை உணர்வது யார்?

ஆழ்துயிலில்,  நமக்கு உலக சுக துக்கங்களுக்கு இடமில்லை. அங்கே எந்தத் துயரும் நுழைய முடியாது. அது ஆத்மாவின் நிலை.   எனவே சுகம் என நாம் வர்ணிப்பது, ஆழ்துயிலின் அமைதியைத்தான்!  அதுவே ஆனந்தம். அதுவே வினையுடலாகிய ஆனந்த மய கோசம்.  அந்த அமைதியே ஆத்மாவின் இயற்கை.  எனவே இயல்பான அமைதியைத்தான், நாம் விழித்த போது, சுகம் என வர்ணிக்கிறோம்.  அந்த அமைதிதான் நம்மைக் காப்பது.

எண்ணிப் பாருங்கள்.

ஆழ்துயிலுக்கு ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடு இல்லை. நல்லவன் கெட்டவன், செல்வந்தன் ஏழை என எவ்வித வேறுபாடும் இன்றி எல்லோருக்கும் அமைதி தருவது அல்லவா துயில்!   கணவன் இறந்தான் என அவனுடலின் மேல் விழுந்து, விழுந்து கதறி அழுத மனைவி அப்படியே அயர்ந்து அவ்வுடலின் மேலேயே தூங்குகின்றாளாம். அப்படி ஒரு பாடல் இருக்கிறது.

ஆழ்துயில் என்பது, எல்லாக் கவலைகளையும், எல்லாப் பேதங்களையும், எல்லாத் தோற்ற மாயைகளையும் அழித்து,  தனது சந்நிதியிலேயே ஜீவனை வைத்திருக்கும் ஆத்ம தத்துவம்.    ஆனால்,  அறியாமை எனும் போர்வையினால் மூடப்பட்டதால், நமக்கு ஆழ்துயில் ‘அறிதுயில்’ ஆகவில்லை. நமது ஆழ்துயிலில் மடமைச் சுகம் மட்டுமே இருக்கிறது.

எனவேதான்  வேதாந்தம், ஆழ்துயிலிலிருந்து நாம் தினமும் எழுகின்ற போதெல்லாம், பிரம்ம தேவனைப் போல, ‘நான் யார்’ எனும் கேள்வியுடனே எழ வேண்டும் என்றும்,  அக்கேள்வியினை முதற்படுத்தியே அன்றைய விவகாரங்களில் ஈடுபட வேண்டும் என்றும், அப்படிச் செய்வதால், ஆத்மாவை அநாத்மாவிலிருந்து பிரித்துணரவும்,  கலந்து பழகும் உலக விவாகரங்களை எல்லாம் ஒரு விளையாட்டாகவே நடத்தவும் முடியும் என்றும் காட்டுகிறது.

இவ்வாறாக, ஆழ்துயிலில் ‘ஒன்றுமே இல்லை’ எனும் வாதம் பொய்யாகி, ஆழ்துயிலில் ‘எல்லாமுமே இருக்கிறது, அது பூரணம் (நிறைவு)’ என்றும், ஆத்மா அங்கே சத்தாக இருக்கிறது என்றும் இப்பாடலில் காட்டப்பட்டது.   தமிழில் ‘செத்துப் போதல்’ என்பது, ‘சத்துப் போதல்’ எனும் ஆத்மாவாகிய ‘சத்’, உடலாகிய மாயத் தோற்றத்தை விட்டு விலகியதைத்தான் குறிக்கிறது.

ஆழ்துயிலில், ‘சத் சித் ஆனந்தம்’ ஆகிய ஆத்மா, ‘சித்’ எனும் அறிவை மறைத்து, சதானந்தம் எனும் ஆனந்த இருப்பாக மட்டுமே விளங்குகின்றது. இதற்கு உதாரணமாக,  கிரகண காலத்தின் போது, சூரியனோ, சந்திரனோ மறைந்திருந்தாலும், நாம் அவற்றின் இருப்பை உணர்வது போலவே,  ஆழ்துயிலில் அறியாமைப் போர்வை மறைத்த போதும், ஆத்மா பூரணமாய் விளங்குகிறதாய் உறுதியடைய வேண்டும் என இப்பாடலில் காட்டப்பட்டது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

Related Posts

Share this Post

Leave a Comment