Kasi Panchakam

PDF View

KasiPanchakaminTamil-V1
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8
काश्यां हि काशते काशी
काशी सर्वप्रकाशिका।
सा काशी विदिता येन
तेन प्राप्ता हि काशिका ॥४॥
காஶ்யாம் ஹி காஶதே காஶீ
காஶீ ஸர்வப்ரகாஶிகா|
ஸா காஶீ விதி₃தா யேன
தேன ப்ராப்தா ஹி காஶிகா || 4||
மெய்யிதே காசியென் மெய்யதே மெய்யுளே
மிளிரொளி நற்காசி நகரம்
மேதினி எலாமுயிர்த் தேயொளிர்த் தீபமாய்
மேவுமொளி நற்காசி நகரம்
மெய்யிதை மெய்த்தறிந் துய்த்தரே தூயவர்
மேன்மை அளிக்கும் முக்தி
மேலான்ம நிலைமுழு தானான கலையது
மெய்யது நற்காசி நகரம்
(4)

காஶ்யாம் = உடலாகிய காசியில்; ஹி = உண்மையில்; காஶதே காஶீ = ஒளிர்வதாகிய (ஆன்மாவாகிய) காசி; காஶீ ஸர்வப்ரகாஸி= அனைத்தையும் ஒளிமயமாக்கிடும் காசி; ஸா = எதுவோ (அது); யேன எவரால்; காஶீ = காசி; விதி3தா= உணரப்பட்டதோ; தேன = அவருக்கே; காஶிகா = விடுதலை எனும் காசி; ப்ராப்தா ஹி = உண்மையில் அடையப்படுவதாகும் (4)

இவ்வுடலே உண்மையில் காசி. (இதில்) ஒளிர்கின்ற ஆன்மாவே காசி. அனைத்தையும் ஒளிமயமாக்கும் காசியாகிய பரமாத்மாவும் அதுவே என எவரால் உணரப்படுகிறதோ, அவருக்கே, முக்தி அல்லது விடுதலை எனும் காசி அடையப்படுவதாகும்.

இந்த நாலாவது பாடலில், ஆதி சங்கரர், அத்வைத உண்மையினை முற்றும் உணர்ந்தவர்களின் நோக்கும், அவர்கள் அடையும் பயனும் என்ன என்பதை, காசியினை உவமையாக்கிக் காட்டுகின்றார்.

உடலே காசி. அதாவது ஒவ்வொரு கருவியும், காசியே ஆகும். இறைவனே எங்குமிருப்பதால், எல்லா உடல்களும் பொருட்களும், அவை எந்நிலையில் இருந்தாலும், அவை இறைவனே. அப்பரந்த நோக்கே இக்கூற்றின் விளக்கம்.

அந்த உடலில் இருந்து உயிர்த்தும், ஒளிர்ந்தும் விளங்கும் ஆன்மாவே காசி. அந்த ஆன்மாவே பரமாத்மாவாக இருந்து, அனைத்து உடலிலும் ஒளியைத் தருகின்றது. இந்த உண்மையைப் புரிந்து உணர்ந்து கொள்பவர் எவரோ, அவரின் ஆன்ம ஞானமாகிய ஒளியே காசி. அவ்வொளியே, பரமாத்ம உண்மையை உணர்த்துகின்றது. அதனை உணர்பவர் எவரோ, அவரே முக்தி என்னும் காசியினை அடைவார்.

இவ்வாறு, உடலாகிய கருவி, பகுத்தறியும் விசையாகிய அறிவு, ஆன்ம ஒளியான சாட்சி, ஆன்மாவே பரம்பொருள் எனும் பேருண்மை, அவ்வுண்மையை உணர்வதால் அடையும் முக்தியாகிய பலன் என்று, கருவி, அறிவு, சாட்சி, கைக்கொள்ளும் ஞானம், முடிவான பயன் என எல்லாமே காசி என்று உவமானம் காட்டப்படுகின்றது.

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post

Leave a Comment