Kasi Panchakam

PDF View

KasiPanchakaminTamil-V1
Log in to download as PDF
Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8
काशीक्षेत्रं शरीरं त्रिभुवनजननी व्यापिनी ज्ञानगंगा
भक्तिः श्रद्धा गयेयं निजगुरुचरणद्ध्यानयोगः प्रयागः।
विश्वेशोऽयं तुरीयः सकलजनमनः साक्षिभूतोऽन्तरात्मा
देहे सर्वं मदीये यदि वसति पुनः तीर्थमन्यत्किमस्ति ॥५॥
காஶீக்ஷேத்ரம் ஶரீரம் த்ரிபு₄வனஜனனீ வ்யாபினீ ஞானக₃ங்கா₃
ப₄க்தி: ஶ்ரத்₃தா₄ க₃யேயம் நிஜகு₃ருசரணத்₃ த்₄யானயோக₃: ப்ரயாக₃:|
விஶ்வேஶோ(அ)யம் துரீய: ஸகலஜனமன: ஸாக்ஷிபூ₄தோ(அ)ந்தராத்மா
தே₃ஹே ஸர்வம் மதீ₃யே யதி₃ வஸதி புன: தீர்த₂மன்யத்கிமஸ்தி || 5||
காசி நகரெனது காயம் – மூநிலை
காட்டும் அறிவுநற் கங்கை!
கூட்டும் பக்தியொடு சிரத்தை
குவியும் இடமினிய கயையே!
வீசும் குருவினடி சேவை – பணி
விரியும் சரணப்பிர யாகை!
நாட்டும் துரியவெளி ஆட்சி – விஸ்வ
நாதன் ஆன்மனே சாட்சி
எனவென் னுடல் மதியின் உள்ளே
எல்லா மிருக்கிறது அதனால்
எதனைப் புனிதமென வெளியே – இனி
எதற்குத் தேடலிது கேள்வி! (5)

காஶீக்ஷேத்ரம் = காசி எனும் (புண்ணிய) நகரம்; ஶரீரம் = உடல்; த்ரிபு₄வன: = மூவுலகம்; ஜனனி = அன்னை; வ்யாபினி = நிறைந்திருப்பவள்; ஞானக₃ங்கா₃ = அறிவாகிய கங்கை; ப₄க்தி: = பக்தி; ஶ்ரத்₃தா₄ = சிரத்தை எனும் பற்றுடைய குறிக்கோள்; க₃யேயம் = கயையில் விளங்குகிறது; நிஜ = நம்முடைய; கு₃ரு = ஆசான்; சரணத்₃ த்₄யானயோக3: = திருவடிகளில் பணிந்து செய்கின்ற சேவை; ப்ரயாக₃: = பிரயாகை; விஶ்வேஶ: = விஸ்வநாதர் எனும் பரம்பொருள்; அயம் = இது; துரீய: = விழிப்பு, கனவு, ஆழ்துயில் எனும் முவ்வனுபவ நிலைகளைக் கடந்த துரீயமாகிய இடத்தில்; ஸகல ஜன = எல்லா மனிதர்களின்; மன: ஸாக்ஷிபூ4த: = மனதில் சாட்சி வடிவமாக; அந்தராத்மா = உள்ளத்தைக் கடந்திருக்கும் ஆத்மா; தே3ஹே = உடலிலே; ஸர்வம் = எல்லாம்; மதீ3யே = என்னுடைய; இத்யதி3 = இப்படியிருக்க; வஸதி = உள்ளது; புன: = மீண்டும்; தீர்த2ம் = புண்ணிய யாத்திரைகள்; அன்யத் = வேறு; கிம் அஸ்தி = எது உள்ளது?

(எனது) உடலே காசி நகரம். மூவுலகத்திலும் நிறைந்து விளங்கும் அன்னையாகிய கங்கை (என்னுள் இலங்கும்) உயர்ந்த அறிவு. பக்தியும், மாறாத நம்பிக்கையால் கொண்டுள்ள குறிக்கோளுமே கயை எனும் புனித இடம். நல்வழிகாட்டும் குருவின் திருவடிகளில் செய்யும் சேவையே பிரயாகை. விழிப்பு, கனவு, உறக்கம் எனும் மூன்று அனுபவ உலகங்களையும் தாண்டிய துரீயமெனும் நிலையிலிருந்து, எல்லா உயிர்களுக்குள்ளும் சாட்சியாக இருந்துவரும் (என்னுள்ளிருக்கும்) ஆன்மாவே, காசி விஸ்வநாதப் பெருமான். இப்படி என் உடலிலேயே எல்லாமும் இருப்பதால், புண்ணிய யாத்திரைகள் என்று வேறு எந்த இடத்திற்கு நான் போகவேண்டி உள்ளது? (தேவையில்லை.)

இப்பாடலிலே ஆதி சங்கரர், ஜீவன் முக்தரது அனுபவ நிலையிலே காசி நகரத்தின் பெருமைகளான, அங்கு விளங்கும் ஐந்து மகத்தான பொருட்களும் தன்னுள்ளேயே இருப்பதனால், தான் அந்த உயரிய ஆத்ம அனுபவம் அடைந்து இனி சாதிப்பதற்கு எதுவுமில்லை என்று ஜீவன் முக்தராகிய காரணத்தினால், (நன்றிக் கடனாக இவ்வாறெல்லாம் பாடி வணங்குவதைவிட) வேறு எந்தப் புண்ணிய தீர்த்தங்களை அடைய வேண்டும் என்று கேட்கிறார்.

முதல் பாட்டிலே காசி நகரமே தன்னுள் விளங்கும் ஆத்மா என்று கூறிய ஆதி சங்கரர், இந்த இறுதிப்பாடலிலே, காசியே உடல்; கங்கையே உடலை இயக்கும் நல்லறிவு; அவ்வறிவின் பயனால் விளையும் பக்தியும், சிரத்தையுமே கயை; அப்பக்தியும் சிரத்தையும் கொண்டு, குருவின் திருவடிகளுக்குச் செய்யும் சேவையே பிரயாகை; அதனால் தெளியும் மனதாலும், அறிவாலும், தன்னுள்ளே கடவுள் என உள் கடந்து இருக்கும் ஆன்மாவே காசி நகரத்தில் காட்சி தந்து கொண்டிருக்கும் விஸ்வேஸ்வரன் அல்லது விஸ்வநாதன் என்னும் பரம்பொருள் என்று எல்லாப் பெரும்பயனும் தன்னுள்ளேயே இருப்பதைக் காட்டுகின்றார்.

அழியக்கூடியது என்றாலும், உடல் என்பது ஆன்மா வசிக்கும் வீடானதால், அவ்வுடலைத் தூயதாயும், புனிதமாயும் போற்றி, அதனுடைய உதவியினால், உலக வாழ்க்கையை ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதே வேதங்கள் நமக்கு அளித்த விதி. எனவே இறையுறையும் கோவிலே நம் உடல் என எண்ணி, அதனை ஒப்புற வளர்க்க வேண்டும். அதனால் உள்ளும் வெளியும் ஒளிர்வதாய் விளங்கும், உடலே காசி நகரம் என்ற உவமையானது.

அருவமான, கண்களுக்குப் புலப்படாத ஆன்மாவே காசி என்று முதல் பாடலில் உவமை காட்டிய ஆதி சங்கரர், கண்ணுக்குத் தெரியும் எல்லா உடல்களும் ஆன்மாவே ஆகும் என்று இங்கே காட்டியிருப்பது, உரு, அரு எல்லாம் இறைமயமே என்பதை விளக்கவே!

திரிபுவனம் அல்லது மூவுலகம் என்பது என்ன? அனுபவநிலையின் திரட்டே உலகம் எனப்படும். இரண்டாவது பாடலிலே இதுவும் சுட்டிக் காட்டப்பட்டது. விழிப்புநிலை (ஜாக்ரத), கனவுநிலை (ஸ்வபன), உறக்கநிலை (ஷுஷூப்தி) எனும் மூன்று வேறுபட்ட அனுபநிலைகளே, ஒவ்வொருவரும் வசிக்கும் மூன்று உலகங்கள். மற்றொரு வகையிலே, வல்லுடல் (தூல சரீரம்), மெல்லுடல் (சூக்ஷ்ம சரீரம்), வினைவிளை உடல் (காரண சரீரம்) என மூன்று உடற்களுக்கான அறிவுநிலையாகவும் (விஸ்வா, தேஜஸ், பிரக்ஞா என்றும்) வேதாந்தம் காட்டுகின்றது. விழிப்பு, கனவு, உறக்கம் எனும் இம்மூன்று உலகங்களும் வேறுபட்டிருந்தாலும், இவற்றுக்கு எல்லாமும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டி, அறிவினைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சக்தியே கங்கையாக உவமை காட்டப்பட்டது. இவ்வறிவின் வழியினால் பக்தியும்,திடமான நம்பிக்கையும் கொண்டு பரம்பொருளை நாடும் ஊக்கம் வருகின்றது.

நம்மிலும் உயர்ந்த பொருளில் வைக்கும் மாறாத அன்பே பக்தி எனப்படும். அப்பக்தி நிலைத்திருக்க, எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அவற்றை உறுதியுடன் செய்வது சிரத்தை எனப்படும். பக்தியும், சிரத்தையும் கயை எனும் காசி நகரத்தில் உள்ள புனித இடத்துக்கு உவமையாகக் காட்டப்பட்டது. கயை எனுமிடத்தில்தான், மூதாதையருக்கான நினைவு வழிபாடுகளை நாம் செய்கிறோம். சிரார்த்தம் என அப்புனிதச் செயல்களுக்கு வந்த பெயரின் காரணம், அவை சிரத்தையினால் செய்யப்படுபவை என்பதாலேயே ஆகும். பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர் ‘சிரத்தாவா லபதே ஞானம்’ அதாவது, சிரத்தையின் பயனே ஞானம் என்று சொல்கிறார். அத்தகைய சிரத்தை இருப்பதால்தான், நாம் நமக்கு நல்ல வழிகாட்டக்கூடிய குருவினை, பெரியோர்களை, நல்லுரைகளை, நற்சொற்பொழிவுகளை எல்லாம் நாடிச் செல்ல முடிகிறது. அவர்களிடமும், அவர்கள் கூறும் நல்லுரைகளிலும் மதிப்பும், உயர்வும் வைத்து, அன்னாரின் திருவடிகளுக்கும் பணி செய்து உண்மையான ஞானத்தை அடைய முடிகிறது. சிரத்தையினால் செய்யும் சேவை பிரயாகை என்று உவமை காட்டுகின்றார் பகவான் ஆதி சங்கரர்.

பிரயாகை எனுமிடம் கங்கை, யமுனை, மற்றும் கண்ணுக்குப் புலப்படாத ஸரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் ஆகுமிடம். இதற்குத் ‘திரிவேணி சங்கமம்’ என்று பெயர். இவ்விடத்தில் குளிப்பதும், அங்கு குளித்து எழுந்தபிறகு, நமக்குப் பிடித்தமான ஒன்றை விடுவதும் நல்ல வழிதரும் என்பது பெரியோர்களின் மொழி. அங்கே குளித்துவிட்டு, ‘இனி இனிப்பு சாப்பிடமாட்டேன்’, ‘இந்த நிறம் அணிய மாட்டேன்’ என்றெல்லாம் உறுதி கொள்வது உயரிய பலனைத் தராது. வேண்டுமானல், ஒருவித வைராக்யம் அல்லது உறுதியான மனம் அடைவதற்கு உதவலாமே தவிர, ஆழ்ந்த பயன் வராது. அதனால், முதலில் இப்பழக்கங்களுக்கு என்ன தத்துவ விளக்கம் என்பதை அறிய வேண்டும்.

கங்கையே விழிபுணர் அறிவு. யமுனை அதனைச் சார்ந்த கனவுலகறிவு. கண்ணுக்குத் தெரியாத ஸரஸ்வதி ஆழ்துயிலறிவு. அதாவது, நம்முடைய மூன்று அனுப நிலைகளும் (விழிப்பு, கனவு,ஆழ்துயில்) மூன்றும் ஒன்றாய் இருக்கும் நிலையைத் தான், திரிவேணி சங்கமம் குறிக்கின்றது. அத்தகைய நிலை வருவது மிகவும் அரிது; தவமும், சமாதி எனும் பெரு நிலையும் எய்தினால்தான், நம்முடைய இந்த மூன்று உலகங்களும் ஒன்றாகும் நிலை கிடைக்கும். எனவே, அவ்விடம் ஒரு அரிய வாய்ப்பு என்று கொள்ளலாம்.

இந்த மூன்று அனுபவ நிலைகளும் ஒன்றாய் இருப்பதால் என்ன பயன்?

இதற்கு ஒரு புராணக் கதையினைப் பார்ப்போம். சிவானந்த லஹரி எனும் துதியில், ‘த்ரயீவேத்3யம் ஹ்ரு2த்3யம் த்ரிபுரஹர மாத்3யம் த்ரிநயனம்’ என்றெல்லாம் சிவசக்தியினரைத் துதிக்கும் ஆதி சங்கர்ர், ‘திரிபுரஹாரம்’ என்ற சொல்லினால், மூவுலகத்தையும் அழித்தவர் என்று அழைக்கிறார்.

‘திரிபுர ஹாரம்’ எனும் சொல்லினால், இரும்பு, வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் ஆன உலகங்களை ஆண்டு கொண்டிருந்த, தாராகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி எனும் முவ்வடிவான கொடிய அரக்கர்களைக் கொன்ற சிவன் என்று பொதுவான பொருள் கொள்ளப்படுகின்றது.

சிவபுராணத்தின்படி, சிவன், பூமியைத் தேராகவும், பிரம்மாவைச் சாரதியாகவும், மேருவை வில்லாகவும், திருமாலை அம்பாகவும், ஆதிசேடனை நாணாகவும் அமைத்து, தங்கம், வெள்ளி, இரும்பாலான மூன்று உலகங்களும் ஒரே கோட்டில் இணையும் போது, அம்பினைச் செலுத்தி, அல்லல் இழைத்து வந்த மூன்று அரக்கர்களையும் அழித்தார் என்பது புராணம்.

அதன் மறைபொருள் என்ன?

சம்ஸ்கிருத மொழியிலே ‘லோகம்’ எனபதற்கு ‘உலகம்’ என்பது சரியான பொருள் அல்ல! ‘லோகம்’ என்பது ஒரு அனுபவ நிலை. உதாரணமாக ‘நரக லோகம்’ என்பது, மீளாத் துயராகிய அனுபவ நிலையைத்தான் குறிக்கும். அந்த நிலை எங்கு வேண்டுமானாலும் விளையும். அதுபோலவே, ‘திரிபுரம்’ எனும் சொல், மூன்று லோகங்கள் அல்லது மூன்று அனுபவ நிலைகள் என்பதைக் குறிக்கும். இவை ஒரு உயிரினைப் பொறுத்தவரை, விழிநிலை அல்லது ஜாக்ரதா, கனவுநிலை அல்லது ஸ்வப்னா, ஆழ்துயில் அல்லது ஷுஷூப்தி என, அந்த ஜீவாத்மாவின் அனுபவ நிலைகள் என்று ஆகும்.

இந்த ஒவ்வொரு அனுபவ நிலையையும் ஜீவாத்மா தனித்தனியாக அனுபவிப்பினும், ஆத்மாவின் அருளால், இம்மூன்று அனுபவங்களுக்கும் ஒரு உறவு ஏற்பட்டு, நமக்கும் உலகில் வாழ்க்கை எனும் பயணம் கிடைக்கிறது.

மற்றொரு வகையில், வல்லுடல் (பூத சரீரம்), மெல்லுடல் (ஸூக்ஷ்ம சரீரம்), வினையுடல் (காரண சரீரம்) என ஜீவாத்மா உழலும் மூன்று உடல்களையும் இந்த ‘திரிபுரம்’ எனும் சொல் குறிக்கும். எல்லா உயிர்களின் பொருட்டாகப் பார்த்தால், இவை முறையே அண்டங்கள் (விஷ்வா), அணுக்கூறாதிகள் (தேஜஸ்), அகண்டமாயை (பிரக்ஞா) என மூன்று பரந்த அனுபவ நிலைகளையும் குறிக்கும். நமக்கோ, ‘நான் இவ்வுடலே’ எனும் மயக்கமும், ‘தான்’ எனும் ஆணவமும் நம்முள்ளே இருந்து கொண்டு, உண்மையை மறைக்கின்ற காரணத்தினால், இம்மூன்று அனுபவங்களையே நாமும் மாறி மாறி அனுபவித்து, பிறகு எப்போதேனும் உடலை விட்டு, மீண்டும் மறு உடலைப் பெற்று, அப்படியான ‘சம்சாரம்’ எனும் சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஜீவர்களாக இருக்கிறோம். நம் மயக்கமும், அறியாமையும், ஆணவமுமே புராணம் காட்டும் அந்த அரக்கர்கள். மூன்று அனுபவநிலைகளிலும் தத்தளிக்கும் இம்மூன்றுபேரும் ஒரே ஜீவன்தான் என்பதும், அம்மூன்று நிலைகளும் ஒன்றிய துரீயமெனும் அறிவுணர்துயில் அல்லது சமாதி நிலையிலேதான், இந்த மயக்கம் முற்றும் தெளியும் என்பதும், அம்மயக்கம் தெளிய, பிறவி எனும் மாற்றங்களை விதைக்கும் பிரம்மனும், காத்தல் எனும் மாயத்தில் இருத்தும் மாலனும், இறப்பு என உடலுயிர் அறுக்கும் ருத்திரனும் ஒன்றாகி, சிவமாகிய பர அறிவான அம்பினால், நமது ஆணவத்தைத் துளைக்க வேண்டும் என்பதும் ‘திரிபுரஹாரம்’ எனும் பதம் விளக்கும் பொருள்.

அப்படி அழித்து அருள் தர, சிவன் பூமியைத் தேராக வைத்துக் கொண்டார் என்பது எதனை வலியுறுத்துகிறது?

பூமியிலே, பிறந்தால் மட்டுமே, சம்சாரம் எனும் வலையினை அறுத்து வெளி வரமுடியும் என்பதே ஆகும். மனிதப் பிறவிக்கே அந்த மகத்தான விடுதலைக்கான சக்தி இருக்கிறது என்பது காட்டப்படுகிறது.

பிரயாகை எனும் புனித இடத்தில் விளங்கும் திரிவேணி சங்கமம், இந்த மூவுலகங்களின் ஐக்கியத்தைக் குறிக்கிறது. அங்கே நாம், மேற்கூறிய உண்மைகளை முற்றிலும் உணர்ந்து, நம்பிக்கையுடன் மூழ்கி எழுந்து, நமக்குப் பிடித்தமானதை விட வேண்டும்.

நமக்கு மிகவும் பிடித்தமானது என்ன?

ஆழமாக ஆய்ந்தால், ஒவ்வொருவருக்கும் பிடித்தது தாமே தான். ‘நான்’ என்பதே யாவருக்கும் மிகவும் பிடித்த பொருள். அந்த ‘நான்’ எனும் அகந்தையைத்தான் அங்கே விடவேண்டும். குறைந்த பட்சம், ‘நான்’ எனும் அகந்தை அழிய முயற்சி செய்வேன் என்ற உறுதியையாவது, அங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே பிராயகையின் தத்துவம்.

அப்படியான உயரிய அறிவை நாம் உணரும்போதே, உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆன்மாவே, எல்லா உயிர்களிலும், உலகங்களிலும், முன்னே கூறிய மூன்று நிலைகளையும் தாண்டி, சாட்சியாக விளங்கும் உலக நாயகரான விஸ்வநாதர் ஆவார் என்று தெளியும். ஆதிசங்கரர், இந்த அத்வைத தத்துவத்தைத்தான் இப்பாடலில் அழகுறக் காட்டி உள்ளார்.

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Share this Post

Leave a Comment